'நிபா' நோயாளிகளுக்கு சேவை செய்ய அனுமதியுங்கள்: உ.பி மருத்துவர் கஃபீல் கான்

உத்தர பிரதேசம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ள மருத்துவர் கஃபீல் கான் நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு கேரள முதல்வர் பதிலளித்துள்ளார்.

நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சேவை செய்ய கஃபீல் கான் கோரிக்கை

கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிறையில் இருந்து வெளிவந்த சமயம் கஃபீல் கானை பற்றிய செய்திகள், சமூக ஊடகங்களில் பரவலாக வந்தன. தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறார் கஃபீல் கான்.

கேரளாவில் இதுவரை நிபா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், கஃபீல் கான் நிபா வைரஸ் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், நிபா வைரஸால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் குறித்தும், சமூக வலைதலங்களில் நிபா வைரஸ் குறித்து பரவி வரும் வதந்திகளால் தான் வேதனை அடைந்துள்ளதாகவும், தன்னால் உறங்க இயலவில்லை என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுருந்தார்.

மேலும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்ற அவர்களுக்கு மருத்துவ சேவை செய்யும் அனுமதியை தனக்கு வழங்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்திருந்தார்.

நிபா வைரஸால் உயிரிழந்த செவிலியர் லினி அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றும், ஒரு உன்னதமான நோக்கத்திற்காக தனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கஃபீல் கான் அந்த பதிவில் குறிப்பிட்டுருந்தார்.

கஃபீல் கானின் இந்த கோரிக்கைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார். அவரது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ சேவை செய்வதற்கான கஃபீல் கானின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தது என்றும், ஆபத்து காலங்களில் மருத்துவர்கள் பலர் சமூக நன்மைக்காக, தன்னலமின்றி தங்கள் கடமைகளை ஆற்றி வந்துள்ளனர் அதில் கஃபீல் கானும் ஒருவர் என அந்த டிவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் குறித்து சேவையாற்ற விரும்பும் தன்னார்வலர்கள் சுகாதாரத் துறையின் இயக்குநர் அல்லது கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரியின் கண்காணிப்பாளரை அணுகலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உத்தர பிரதேசம் கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் இக்குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு பணிபுரிந்த குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான், அலைந்து திரிந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால், அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கோரக்பூர் சிறையில் அடைத்தனர்.

சுமார் 8 மாதங்கள் சிறையில் இருந்த மருத்துவர் கஃபீல் கான், தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: