ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்குத் தடை

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம்கட்ட விரிவாக்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர ஆலை தற்போதுள்ள உற்பத்தித் திறன் அளவுக்கு, ஆலையை இன்னொரு மடங்கு விரிவாக்கம் செய்யும் பணிகளைத் துவங்கியிருந்தது.

இந்த நிலையில், அந்த விரிவாக்கத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், "ஸ்டெர்லைட் நிறுவனம் தங்களது விரிவாக்கத்தை சிப்காட் தொழிற்பேட்டையின் 1வது பிரிவில் துவங்குவதாக கூறியுள்ளது. ஆனால், அவர்கள் சிப்காட் 2வது பிரிவில்தான் ஆலையை விரிவாக்கம் செய்யவிருக்கிறார்கள். சிப்காட்டின் 2வது பகுதிக்கு தமிழக அரசே இன்னும் முழுமையான அனுமதியை அளிக்காத நிலையில், இந்த ஆலையின் விரிவாக்கத்தை அங்கு செய்ய முடியாது. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தவில்ல. அவர்கள் தவறான தகவல்களை அளித்து இந்த விரிவாக்கப் பணிகளை செய்துவருகிறார்கள். இதனை தடைசெய்ய வேண்டும்" என கோரியிருந்தார்.

ஏற்கனவே உள்ள ஆலையைத்தான் விரிவாக்கம் செய்வதால் புதிதாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லையென வாதிடப்பட்டது.

ஸ்டெர்லைட் புதிய இடத்தில் விரிவாக்கப் பணிகளைச் செய்கிறது. தவறான தகவல்களை சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வழங்கி இந்த அனுமதியைப் பெற்றிருக்கிறது. புதிய சிப்காட்டிற்கே முழு அனுமதி இல்லாத நிலையில், அதில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஏற்க முடியாதது என ஃபாத்திமா பாபு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை கடந்த வியாழக்கிழமையன்று விசாரித்த நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு இன்று காணொளிக் காட்சி மூலம் தீர்ப்பை வழங்கியது.

ஸ்டெர்லைட் தனது விரிவாக்கத்தை புதிய சிப்காட்டில்தான் செய்கிறது; ஆகவே புதிதாக மக்களிடம் கருத்தறியும் கூட்டத்தை நடத்த வேண்டும். நான்கு மாதங்களுக்குள் (செப்டம்பர் 23ஆம் தேதிக்குள்) இதனை நடத்தி, புதிதாக அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது எப்படி என நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுவரை, எந்தக் கட்டுமானப் பணிகளிலும் ஸ்டெர்லைட் ஈடுபடக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

"ஸ்டெர்லைட் முதலாவது சிப்காட்டில் அனுமதி பெற்றிருப்பதாகக் கூறி, இரண்டாவது சிப்காட் நிலத்தில் விரிவாக்கத்தைத் தொடங்கியது. சர்வே எண்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் காட்டினோம். இதைக் கணக்கில் கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது" என இந்த வழக்கைத் தொடர்ந்த ஃபாத்திமா பாபு பிபிசியிடம் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தாமிரத் தாதிலிருந்து தூய தாமிரத்தைப் பிரித்து கம்பிகளாக மாற்றுவது, அதன் துணைப் பொருட்களான அமிலத்தை பிரித்தெடுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகிறது.

இந்த ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாகவே போராடிவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்ட (வருடத்திற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன்) மேலும் ஒரு ஆலையை அருகில் உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை ஸ்டெர்லைட் காப்பர் மேற்கொண்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்