ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 11-ஆக உயர்வு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 11 பேர் இதுவரை இறந்துள்ளதாக தூத்துக்குடி காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு தீ வைப்பு

செவ்வாயன்று (மே22) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தூத்துக்குடியில் வன்முறை கும்பல் கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீசுதல் போன்றவற்றில் மே 22-ம் தேதி ஈடுபட்டு பல அரசு கட்டடங்களை சேதப்படுத்தியதாலும், நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனம் உள்பட 127 வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதாலும் தூத்துக்குடி நகரில் காவல்துறை நேற்றைய தினம் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தவும் நேரிட்டது. இதில் 10 பேர் இறந்தனர். வன்முறையில் தொடர்புடைய 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது நாளாக இன்றும் வன்முறை தொடர்ந்தது. இதில் மிகப்பெரிய அளவில் பொதுச் சொத்தும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இரண்டு காவல்துறை பேருந்துகள், இரண்டு அரசு விவாசாயத்துறையின் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் வாகனம் எரிக்கப்பட்டன.

அண்ணா நகர் ஆறாவது தெரு மற்றும் பிரயன்ட் நகர் பகுதிகளில் தொடர்ந்து வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீச்சு மற்றும் கல்வீச்சிலும் ஈடுபட்டது. தூத்துக்குடி நகரில் அண்ணா நகரில் உள்ள மதுபான கடையையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: