விடைபெற்றார் கிரிக்கெட்டின் 'மிஸ்டர் 360 டிகிரி' ஏ பி டி வில்லியர்ஸ்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்தவர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரரான தென் ஆஃப்ரிக்க வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புதன்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏ பி டி வில்லியர்ஸ்

34 வயது பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருதின போட்டிகள், 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஏ பி டி வில்லியர்ஸுக்கு 'மிஸ்டர் 360 டிகிரி' என்ற புனைபெயர் உண்டு. பாரம்பரிய மற்றும் புதுமையான மட்டை வீச்சு உத்திகளைக் கையாண்டு மைதானத்தின் எல்லாப் பக்கங்களிலும் பந்தை அடிக்கும் திறமை காரணமாக அவருக்கு இந்தப் புனை பெயர் வந்தது.

ஆட்டத்தின் போக்கை சில பந்துகளில் மாற்றிவிடும் திறன் படைத்தவர் ஏ பி டி வில்லியர்ஸ்.

டிவிட்டரில் தனது பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ள டிவில்லியர்ஸ், அனைத்து வித சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

''நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நான் சோர்வடைந்துவிட்டேன்'' என அந்த காணொளியில் தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ் இது கடினமான முடிவு என்றும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வெற்றி கொண்டுள்ள நிலையில்தான் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என கருதுவதாக டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

'' எந்த போட்டிகளில் விளையாடவேண்டும் எங்கு நடக்கும் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் மேலும் எந்த ஃபார்மெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாட வேண்டும் என நான் முடிவு செய்வது சரியானதாக இருக்காது'' எனத் தெரிவித்துள்ளார் டி வில்லியர்ஸ்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் அதிவேக சத நாயகன்.

அயல்நாடுகளில் விளையாடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட தயாராக இருப்பேன் என நம்புவதாக டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி வில்லியர்ஸ் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8765 ரன்கள் குவித்துள்ளார்.

டி வில்லியர்ஸின் 22-வது மற்றும் கடைசி சதம் கடந்த மார்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமையும் டி வில்லியர்ஸுக்கு உண்டு. 2011-ல் 75 பந்துகளில் சதமடித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள டி வில்லியர்ஸ் ஜனவரி 2015-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 31 பந்துகளில் சதமடித்துளார்.

ஐ பி எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிவரும் டி வில்லியர்ஸ் இந்த சீசனில் 11 இன்னிங்ஸில் ஆறு அரை சதத்துடன் 480 ரன்கள் குவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: