தலித்துகளுக்கு மறுக்கப்படும் தமிழ் நிலம்

  • ரவிக்குமார்
  • பொதுச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருடைய சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் கணிசமாக தலித்துகள் வசிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எஸ்.சி வகுப்பினர் இங்கே சுமார் ஒரு கோடியே நாற்பத்தைந்து லட்சம் பேர் வாழ்கின்றனர்.

மக்கள் தொகையில் அது 20% ஆகும். அந்த அளவுக்கு எண்ணிக்கை பலம் கொண்ட சமூகம் தமிழ்நாட்டில் வேறெதுவும் இல்லை. அப்படியிருந்தும் அவர்களது நிலை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அது உண்மையல்ல.

வீரமும், விவேகமும் செறிந்த வரலாறு :

18ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்த தலித் மக்கள் அமைப்பாகச் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதே வேளையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மை ஒடுக்க முற்பட்டபோது அவர்களின் போலீஸ் படையைத் தாக்கி விரட்டியும் அடித்திருக்கிறார்கள். " சென்னையில் கலெக்டராயிருந்த லயோனெல் ப்ளேஸ் (Lionel Place) என்பவர் அறிமுகப்படுத்திய புதிய வரிவிதிப்பு முறையை எதிர்த்து 1795 நவம்பரில் தலித்துகள் கலகத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பூந்தமல்லி பகுதியிலிருந்த தலித்துகள் தமது ஊர்களைத் துறந்து ஆர்க்காட்டு நவாப்பின் ஆளுகைக்குக்கீழ் இருக்கும் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். 1796 ஏப்ரல், மே மாதங்களில் அப்படி ஊரைத் துறந்து வெளியேறும் போராட்டம் பல பகுதிகளுக்கும் பரவியது. அவர்களைத் தடுப்பதற்காக கலெக்டர் ப்ளேஸ் மேற்கொண்ட அச்சுறுத்தல் முயற்சிகள் பலிக்கவில்லை. பூந்தமல்லிப் பகுதியில் பறையர் சமூகத்தவர் மத்தியில் தலைவர்களாக மதிக்கப்பட்ட பேட்டையா, பூந்தமல்லி குட்டி, மாங்காடு கொம்பன், பம்மல் கண்ணையன் ஆகியோரைக் கைதுசெய்ய ப்ளேஸ் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றிபெறவில்லை.

சென்னையில் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்குக் கோடியில் இருந்த பெரிய பறைச்சேரியில் 1796 காலகட்டத்தில் பெரியதம்பி என்ற தலித் தலைவர் இருந்தாரென்பதும் லயோனெல் ப்ளேஸின் ஆவணங்களால் தெரியவருகிறது. சென்னைக்குத் தென்கிழக்கே நாற்பது மைலில் இருந்த கருங்குழி என்ற ஊரைச் சேர்ந்த பறையர் சமூகத்தவருக்கு பெரியதம்பி கடிதம் ஒன்றை எழுதி, அவர்கள் எல்லோரையும் சென்னையை நோக்கிப் புறப்பட்டு வரச்சொல்லித் தூண்டியதாகத் தகவல் கிடைத்ததையொட்டி பிரிட்டிஷ் கம்பெனியின் ஆட்கள் பெரியதம்பியைச் சென்று சந்தித்து அதுபற்றி விசாரித்துள்ளனர். (Irschick, Eugene F. 1992: Dialogue and History: Constructing South India, 1795-1895., Delhi, OUP )

மூன்று பெரும் தலைவர்கள்

18 ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட அரசியல் முனைப்பு 19 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர் ஆகிய மூவரும் மூன்று பெரும் தலைவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களைப்போல 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தலித்துகளுக்குத் தலைவர்கள் இருந்ததில்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே 1919ல் அன்றைய கவர்னர் வில்லிங்டன் பிரபுவால் எம்.சி.ராஜா சென்னை மாகாண மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அளவில் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் தலித் அவர்தான். இந்தியா முழுவதும் பிரபலமான தலித் தலைவராக அவர் விளங்கினார். 1928 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயணம் செய்த சைமன் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் வலுவான இயக்கமாகத் திகழ்ந்த ' ஆதி இந்து மகா சபா 'வின் சார்பில் சைமன் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எம்.சி.ராஜாதான் எங்கள் தலைவர் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அம்பேத்கரோடு இணைந்து இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் பங்கேற்றவர் ரெட்டமலை சீனிவாசன். அம்பேத்கர் ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன் (SCF ) என்ற அமைப்பைத் துவக்கியபோது அதன் தலைவராக இருந்தவர் என்.சிவராஜ். தலித் மக்களின் பூர்வ மதம் பௌத்தம் என்பதைக் கோட்பாட்டு ரீதியாக நிறுவியவர் அயோத்திதாசப் பண்டிதர். பௌத்தத்தைத் தழுவியதில் அம்பேத்கருக்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவர்.

இத்தனை சிறப்புகள் இருந்தும் தமிழ்நாட்டு தலித்துகள் இன்று அவலநிலையில் வாழ்வதற்கு முதன்மையான காரணம் நிலம் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டதுதான். பொருளாதார பலம் இல்லாமல் போகும்போது எண்ணிக்கை பலமும் பயனற்றதாகிவிடும் என்பதற்கு தமிழ்நாட்டு தலித்துகள் வாழும் உதாரணமாக உள்ளனர்.

உடமையிலிருந்து வறுமைக்கு :

தலித் மக்கள் எப்போதுமே நிலமற்றவர்களாக இருந்ததைப்போன்ற ஒரு எண்ணம் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. 1772 ஆம் ஆண்டில் பெர்னார்டு என்பவர் செங்கல்பட்டு பகுதியில் நிலம்,விவசாயம், மக்கள்தொகை உள்ளிட்ட விவரங்களைக் கணக்கெடுப்புச் செய்து அவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதிப் பாதுகாத்து வைத்தார்.

தற்போது தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பில் இருக்கும் அந்தச் சுவடிகளிலிருந்து திருப்போரூர் மற்றும் வடக்குப்பட்டு ஆகிய இரண்டு பகுதிகளைச் சேர்ந்த விவரங்கள் மட்டும் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது ( M.D.Srinivas, T.G.Paramasivam, T.Pushkala (Ed) 2001: Thirupporur and Vadakkuppattu - Eighteenth Century Locality Accounts, Chennai, Centre for Policy studies )

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 1910 கிராமங்களின் விவரங்கள் அதில் உள்ளன. அந்த கிராமங்களில் இருந்த மொத்த நிலம் 7.8 லட்சம் காணி. அதில் காடு, மலை, குடியிருப்பு, நீர்நிலைகள், தரிசு எல்லாம் போக விவசாயம் செய்யப்பட்டது 2.7 லட்சம் காணி ( ஒரு காணி என்பது 1.33 ஏக்கர்). 1910 கிராமங்களில் 1550 கிராமங்களில்தான் மக்கள் வசித்தனர். அவற்றில் 65 ஆயிரம் குடும்பங்கள் இருந்தன. அதில் சுமார் 33 ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தன. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த குடும்பங்களை சாதிவாரியாகவும் பெர்னார்டு கணக்கெடுப்புச் செய்திருக்கிறார்.

7400 வேளாளர் குடும்பங்கள், 9700 வன்னியர் குடும்பங்கள், 11,000 தலித் (பறையர்) குடும்பங்கள், 2400 ரெட்டி கம்மாவார் குடும்பங்கள், 2600 இடையர் குடும்பங்கள். தலித் மக்களே எண்ணிக்கை அடிப்படையிலும், விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததிலும் அதிகமாக இருந்தனர் என்பது இந்தக் கணக்கெடுப்பிலிருந்து தெரிகிறது.

நிலம் கிராமத்துக்கே சொந்தமாக இருந்த நிலை மாறி மிராசி முறை வந்ததும் அப்போது கிராமத்தில் உள்ள நிலத்துக்கு வரி கட்டும் பொறுப்பு மிராசுதாரருக்கு அளிக்கப்பட்டதும், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிராசி முறையில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக பிரிட்டிஷாரால் அறிமுகம் செய்யப்பட்ட ரயத்துவாரி முறையும் தலித்துகளை மெல்ல மெல்ல நிலமற்றவர்களாக்கிவிட்டன. 'அண்டை பாத்தியம்' என்ற பெயரில் அரசாங்கத்தின் தரிசு நிலங்களைக்கூட தலித்துகள் பெற முடியாமல் சாதியவாதிகள் தடுத்தனர். இதற்கான ஆதாரங்களை கர்னல் எஸ்.ஆல்காட், த்ரெமென் ஹேரே, நொபோரு கராஷிமா, ஒய்.சுப்பராயலு, தர்மாகுமார், யூஜின் இர்ஷிக், சுகாஸா மிசுஷிமா உள்ளிட்ட பலரது நூல்களில் காணலாம்.

தொடரும் நிலப் பறிப்பு :

பிரிட்டிஷ் ஆட்சியில் மட்டுமின்றி சுதந்திரத்துக்குப் பிறகும் தலித்துகளுக்குச் சொந்தமான நிலங்களைப்பறிப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பைப்போலவே இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவையும் அதை சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கையையும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசு கணக்கெடுப்பு செய்துவருகிறது. அது விவசாயக் கணக்கெடுப்பு ( Agriculture Census ) என அழைக்கப்படுகிறது.2010- 2011 க்கான கணக்கெடுப்பின் விவரங்கள் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.

2010 -11 க்கான கணக்கெடுப்பில் மாநிலவாரியாக நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவும் கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்சி/எஸ்டி பிரிவினரில் நிலம் உள்ளவர்கள் எத்தனைபேர் அவர்களால் பயிர்செய்யப்படும் நிலத்தின் பரப்பு என்ன என்பதைத் தனியே கொடுத்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாடு குறித்த புள்ளிவிவரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென் மாநிலங்களில் மகராஷ்டிரா,ஆந்திரப்பிரதேசம்,கர்னாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் நிலம் வைத்துள்ள தலித்துகளின் என்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் நிலத்தின் பரப்பளவும் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 2005 - 2006 மற்றும் 2010 -2011 ஆகிய இரண்டு கணக்கெடுப்புகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தலித்துகளிடம் உள்ள நிலத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

2005 - 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,84,000 தலித்துகளிடம் மொத்தமாக 5,03,000 ஹெக்டேர் நிலம் இருந்தது. 2010 - 2011 ஆம் ஆண்டில் நிலம் வைத்திருக்கும் தலித்துகளின் எண்ணிக்கை 8,73,000 ஆகக் குறைந்தது. அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவும் 4,92,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதாவது 2005- 2006 க்கும் 2010 - 2011 க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 11 ஆயிரம் தலித்துகள் நிலமற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 11 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பறிபோயிருக்கிறது.

தென்னிந்தியாவில் தமிழகமே மோசம் :

தமிழ்நாட்டின் அளவுக்கே மக்கள் தொகை கொண்ட ஆந்திரா , மகராஷ்டிரா மற்றும் கர்னாடகாவின் நிலையோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டிலிருக்கும் தலித்துகள் எப்படி வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

2010- 2011 ஆம் ஆண்டில் ஆந்திரப்பிரதேசத்தில் 14,57,000 தலித்துகள் நிலம் வைத்திருந்தனர். அவர்களிடம் 11,00,000 ஹெக்டேர் நிலம் இருந்தது. அதாவது தமிழ்நாட்டில் இருப்பதைப்போல இருமடங்கு நிலம் ஆந்திர தலித்துகளிடம் இருக்கிறது. கர்னாடக நிலையும் அதேபோன்றதுதான். அங்கு 9,14,000 தலித்துகளிடம் 10,74,000 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அதுவும் ஏறத்தாழ இரு மடங்குதான். மகராஷ்டிராவிலோ தலித்துகளின் நிலை இன்னும் சிறப்பாக உள்ளது. அங்கு 10,29,000 தலித்துகள் நிலம் வைத்துள்ளனர். அவர்களிடம் 13,03,000 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. இது தமிழ்நாட்டு தலித்துகளிடம் இருக்கும் நிலத்தைப்போல இரண்டரை மடங்காகும். அந்த மாநிலங்களில் தலித்துகளுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்குக்கும் அவர்களது நில உடமைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

மீண்டும் நிலத்துக்கு :

உலகமயம் ஊக்குவிக்கப்பட்டு தகவல்தொழில்நுட்பமும் சாஃப்ட்வேர் உற்பத்தியும் லாபம் ஈட்டும் முக்கிய வழிகளாகிவிட்ட இன்றைய சூழலில் விவசாயம் என்பதே அழிந்துகொண்டிருக்கும் நிலையில் நிலம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருப்பது சரியானதுதானா? என்று கேள்வி எழலாம்.

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயம் மற்றும் உற்பத்தித்துறைகள் பலவீனமடைந்துவிட்டன. சேவைத்துறைகளில் மட்டும்தான் வேலைவாய்ப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் எனச் சொல்லப்படுபவற்றின் நிலையும் அதுதான். தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டு சேவைத்துறைகளும்கூட தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன . அரசு ஊழியர்களைக் குறைப்பது, புதிய நியமனங்களைக் காலவரையின்றி நிறுத்திவிடுவது என்ற தந்திரங்களை மத்திய மாநில அரசுகள் பின்பற்றிவருகின்றன.

இடஒதுக்கீடு உள்ள அரசுத் துறைகளிலும் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தனியார் துறைகளிலோ தலித்துகள் நுழைவதென்பது எளிதான விஷயமில்லை. ஆக, தலித்துகளுக்கான வேலைவாய்ப்புகளின் கதவுகள் ஒரேயடியாக இழுத்து மூடப்பட்டாயிற்று.

படித்தவர்களுக்கு வேலை இல்லை, படிப்பதும் இனி பணமிருந்தால்தான் சாத்தியம் என்று ஆகிவிட்டநிலையில் தலித்துகளின் இடப்பெயர்ச்சி முழுவதுமாகத் தடைபட்டுவிட்டது. உதிரிப் பாட்டாளிகளாக நகரங்களுக்கு வந்தவர்களும்கூட மீண்டும் கிராமங்களை நோக்கியே விரட்டப்படுகின்றனர். அவர்கள் உயிர்பிழைக்க இப்போது இருக்கும் ஒரே வழி , மண்ணுரிமை மீட்பு மட்டும்தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கு வழங்கப்பட்டு இப்போது மற்றவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டம் அதன் துவக்கமாக அமையலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: