தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இறந்தவர்கள் உடல்களை பாதுகாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு பாதுகாத்து வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.

Image caption சென்னை உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனைகள் துவங்கின.

இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் முன்பாக முறையீடு ஒன்றைச் செய்தனர்.

அதில், இறந்தவர்களின் உடலுக்கு மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும், அப்போது தனியார் மருத்துவர்கள் உடனிருக்க வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமான மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரை இடை நீக்கம் செய்ய வேண்டும், மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

இந்த மனுவை இன்று பிற்பகலில் நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களுக்காகவே இந்த அரசு நடப்பதாகத் தெரிவித்தார். ஆனால், நீதிபதிகள் வழக்கு தொடர்பாக மட்டும் பேசும்படி கூறினர்.

இதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டுமா என்று தீர்மானிக்கப்படும் என்றும் அதுவரை உடல்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மே 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் 31 இடங்களில் பல்வேறு அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 300க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்