"ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!"

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (தமிழ்) - 'மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!'

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ் நாளிதழ்.

"தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட் ஆலை'க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. 'ஆலையை மூட வேண்டும்' என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே தற்போதைய போராட்டத்தை முன்னெடுத்தனர். முறையான பேச்சுவார்த்தை வழியே இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் அலட்சியப்படுத்தி, மூன்று மாதங்களுக்கும் மேல் அந்தப் போராட்டத்தை நீடிக்கவிட்ட அரசு, போராட்டத்தின் நூறாவது நாளன்று காவல் துறை மூலம் சகிக்க முடியாத முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது." என்கிறது அந்த தலையங்கம்.

மேலும், "மக்கள் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகள் வாயிலாகவே எதிர்கொள்ள வேண்டும். போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, போராட்டம் நடத்துபவர்கள் மீது தடியடி, போராட்டங்களை ஒருங்கிணைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவுசெய்வது என்று இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்துவரும் சட்டம்-ஒழுங்குக் கொள்கை, காலனியாட்சிக் காலத்தையே நினைவுபடுத்துகிறது. மக்கள் குரலுக்கு மதிப்பளித்து அவர்களோடு உரையாட வேண்டிய ஓர் அரசு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையைக் கொண்டு சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவது கூடாது. அடக்குமுறையால் ஏற்படுத்தப்படும் மவுனத்துக்குப் பெயர் சமூக அமைதியும் அல்ல. உடனடியாக முதல்வர் தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டும்.

எதிர்க்கட்சிகளோடு கலந்து பேசி இந்தப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவரே முன்னின்று மேற்கொள்ள வேண்டும். இனி ஒருமுறை இப்படியான தவறுகள் நடக்காதவண்ணம் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் ஒவ்வொருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப சகல தரப்பினரும் கைகோக்க வேண்டும்." என்கிறது இத் தலையங்கம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மாநில பாடதிட்டத்திலிருந்து சி.பி.எஸ்.இ நோக்கி'

மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் வரை குறைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். 2013 ஆம் ஆண்டு 11.19 லட்சம் மாணவர்கள் மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்றதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 10.01 லட்சமாக குறைந்துவிட்டது என்றும் விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி. கடந்த இரண்டு ஆண்டாகத்தான் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், அதற்கு நீட் ஒரு காரணம் என்றும் விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தினத்தந்தி - 'மோடியும், எடப்பாடி பழனிசாமியும் விளக்க அளிக்க வேண்டும்: காங்கிரஸ்'

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், மிருகத்தனத்துக்கு ஒரு உதாரணம். பா.ஜனதாவும், அதன் கூட்டாளிகளும் மக்களை எப்படி தாக்குகிறார்கள் என்பதை இது பிரதிபலிக்கிறது. சம்பவம் பற்றி பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விளக்கம் அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு பற்றி அரசு கவலைப்படவில்லை, மக்களின் புகாருக்கு பதில் அளிக்கவும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. சுற்றுச்சூழலை கெடுக்கும் அந்த ஆலை மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாட்களில் தீர்வு! - அமித் ஷா

தினமணி - 'மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி'

தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

"இது தொடர்பாக சமூக நீதிப் பேரவை சார்பில் வழக்குரைஞர் கே. பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 28-இல் உத்தரவு பிறப்பித்தது. அதில், "தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடாமல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் அந்தக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வகை மாற்றம் செய்யாமல் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தடை விதித்தது.

நீதிபதிகள், "உச்சநீதிமன்றம் கடந்த மே 14-ஆம் தேதி உத்தரவின்படியும், மதுபானக் கடைகளைத் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நிகழாண்டு பிறப்பித்த தளர்த்தப்பட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டும் தமிழக அரசு ஏற்கெனவே மே 21-இல் அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், தமிழக அரசின் மே 21-ஆம் தேதியிட்ட அரசாணை எண் "எம்எஸ் 32'-ஐ அமல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் அரசாணையை பதிவு செய்து கொள்கிறோம்.

மேலும், தங்களது தரப்பின் கருத்தைக் கேட்ட பிறகே அரசாணையை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிர் மனுதாரரின் (கே.பாலு) கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அரசாணையால் பாதிப்பு ஏதும் இருப்பதாக எதிர் மனுதாரர் கருதினால், அதற்கு உரிய தீர்வு காண்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் கோடை விடுமுறைக்குப் பிறகு நடைபெறும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு தமிழக அரசுக்கு அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது." என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தி இந்து - `முதல்வர் பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்'

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்க்காத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் கூறினார் என்கிறது ஹி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி. மேலும் அவர், போலீஸ் ஏ.கே 47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகளை பயன்படுத்தியதாகவும் கூறி உள்ளார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: