தூத்துக்குடி சாவு 13 ஆனது: போக்குவரத்து, இணையம், கடைகள், வங்கிகள் முடக்கம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Image caption ஸ்டெர்லைட் போராட்டம்

செவ்வாய்க்கிழமை முதலில் துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் 9 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

மறுநாளான புதன்கிழமை இறந்தவர்கள் உடலைப் பெற மறுத்து அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இரண்டாவது முறையாக போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது.

இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை புதன்கிழமை 11 ஆக உயர்ந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மாற்றி அரசு உத்தரவிட்டதுடன், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இணைய சேவையை ஐந்து நாட்கள் துண்டித்தும் உத்தரவிட்டது.

இதனிடையே போராட்டம் தொடர்பான நிகழ்வில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த செல்வகுமார், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (42) ஆகியோர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். இதனால், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இயல்பு வாழ்க்கை முடக்கம்

சம்பவம் நடந்து மூன்றாவது நாளான வியாழக்கிழமை காலை வரை தூத்துக்குடி நகரத்தின் இயல்புநிலை திரும்பவில்லை என்கிறார் பிபிசி செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.

ஏற்கெனவே நிலவும் பதற்றம் காரணமாகவே வங்கிகள் மூடப்பட்டுள்ளன, கடைகள் திறக்கப்படவில்லை, சாலையில் இருசக்கர வாகனப் போக்குவரத்து இருந்தாலும், அரசுப் பேருந்துகளைக் காண முடியவில்லை, இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. எனவே நகரத்தின் இயல்புவாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது என்கிறார் அவர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அண்ணாநகர், பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமே போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. நகரில் பெருமளவு காவல்துறை தொடர்ந்து உள்ளது என்கிறார் அவர்.

கடைகள் மூடியிருப்பதால், காய்கறிவாங்க மிகவும் சிரமப்படும் பொதுமக்கள் காலையில் சிறிது நேரம் திறந்திருக்கும் பாளையங்கோட்டை சாலையில் உள்ள காமராஜ் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு வந்து காய்கறி வாங்கிச் செல்கின்றனர். ஆனால், வழக்கத்தைவிட காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: