ஸ்டெர்லைட்: "என் மகனுக்கும் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை"

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அம்மாவட்ட மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து நடந்த வன்முறையில், போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர்தான் ஆண்டனி செல்வராஜ். இவருக்கும் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆண்டனி செல்வராஜின் குடும்பத்தினர்.

யார் இந்த ஆண்டனி ராஜ்?

தூத்துகுடி மாவட்டம் கிருஷ்னராஜபுரம் பகுதியில் வசித்துவருபவர் ஆண்டனி செல்வராஜ். இவரது மனைவி மரிய கல்பனா மற்றும் மகள் ஜோன்ஸ் அமிர்த சர்மிளா. இவர் தூத்துக்குடியில் அமைந்துள்ள தனியார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆண்டனி செல்வராஜ் காலையில் வேலைக்கு சென்று இரவு விடு திரும்பும் ஒரு அமைதியான நபர்; அவர் எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத நபர் என்கின்றனர் அவரது வீட்டின் அருகில் உள்ளவர்கள்.

கடந்த செவ்வாய்கிழமை வழக்கம் போல் காலை 9 மணிக்கு அலுவலகம் சென்றுள்ளார் ஆண்டனி. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அவரது அலுவலகத்துக்கு விடுப்பு அறிவத்து அங்கு வேலை செய்பவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

இதனையடுத்து ஆண்டனி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலருக்கு வரும் 28ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் தன் மகளின் பூப்புனித விழாவுக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக தூத்துகுடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற போது அப்பகுதியில் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆண்டனி செல்வராஜ் தனது மார்பில் துப்பாக்கி குண்டு துளைத்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். அதன்பின் இறந்த அவரது உடலை போலிஸார் கைபற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த ஆண்டனி செல்வராஜின் தம்பி ராஜேஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "என் அண்ணனுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் சம்பந்தமே இல்லை; காலையில் 9 மணிக்கு வேலைக்கு சென்று 7 மணிக்கு வீடு திரும்பும் மிடில் கிளாஸ் குடும்பம். போலிஸார் தவறுதலாக சுட்டதில் இறந்த என் அண்ணனை ஸ்டெர்லைட் போராட்ட ஒருங்கினைப்பாளர் என தவறான தகலவல்கள் பரப்பட்டு வருகின்றன. பத்து லட்சம் இல்லை ஒரு கோடி கொடுத்தாலும் எங்க அண்ணன் உயிருக்கு ஈடாகாது" என்றார்.

"எங்கள் மகன் போரட்டத்தில்ல ஈடுபட்டு இருந்தாலும் பரவாயில்லை சும்மா போன ஆளை சுட்டு இருக்காங்க. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் மக்களுக்கே பாதுகாப்பு இல்லை" என வேதனையுடன் பிபிசி தமிழடம் பேசினார் ஆண்டனி செல்வராஜின் தந்தை.

"எங்கள் மக்கள் அற வழியில் தான் போரட்டத்தை நடத்தினர் போலிஸார் நடத்திய தடி அடியால்தான் போரட்டம் கலவரமாக மாறியது. காவல் துறையின் தவறால் இன்று நல்ல மனிதரான ஆண்டனி ராஜை இழந்துவிட்டோம்" என்கிறார் ஆண்டனி செல்வராஜின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நந்தா.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: