ஸ்டெர்லைட் நிலத்தடி நீரை மாசுபடுத்தவில்லை: 'வேதாந்தா' அனில் அகர்வால்

வேதான்தா உரிமையாளர் அனில் அகர்வால்
படக்குறிப்பு,

வேதான்தா உரிமையாளர் அனில் அகர்வால்

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி இருக்கும் மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு அவசியம் என்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தும் வேதாந்தா நிறுவன உரிமையாளர் அனில் அகர்வால் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு அதற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டது பிபிசி.

மக்களின் விருப்பத்துடன் தொழிலை தொடர வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. ஆனால், மக்கள் இந்த ஆலையை எதிர்த்து நீண்ட காலமாக போராடி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அனில் அகர்வால், தங்களின் ஆலையை சுற்றி இருக்கும் மக்களின் பாதுகாப்பு அவசியம் என்றும் அதற்கு தூத்துக்குடி மட்டும் விதிவிலக்கல்ல என்றும் கூறினார்.

"எங்கள் ஆலை எங்கிருந்தாலும், உள்ளூர் மக்களையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ளும் தத்துவத்தை பின்பற்றுகிறோம். மேலும், கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளை அங்கு அமல்படுத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்கள், சிலரின் தூண்டுதல் பேரில் நடைபெற்றதாக கூறும் அனில் அகர்வால், வேதாந்தா மட்டும் அல்லாது முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக இந்தியா இருக்க, அதற்கு அவதூறு விளைவிக்கவே இது நடத்தப்பட்டது என்றார்.

"தமிழக அரசின் விசாரணையில் உண்மை நிலை என்ன என்பது தெரிய வரும். அதே வேளையில், தூத்துக்குடியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன" என்றார் அவர்.

காவல்துறை மற்றும் நிர்வாகத்துக்கு வேதாந்தா அளித்த அழுத்தத்தினால், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக எழும் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், தாம் நியாயமான முறையில் தொழில் நடத்தி வருவதாகவும், நிர்வாகத்தின் மீது எந்த அழுத்தத்தையும் தாங்கள் கொடுப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மக்களுக்கு இந்த தருணத்தில் எந்த உதவியையும் செய்ய தயார் என்று கூறியுள்ள அனில் அகர்வால், ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என்று வேதாந்தா கூறும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக இந்நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றனவே என்று கேட்டதற்கு, "சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகிய தரநிலைகளை உலகளவில் எங்கள் நிறுவனம் உறுதியாக கடைபிடிக்கிறது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் கடைபிடித்து வருகிறோம். இதையேதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் பின்பற்றினோம்" என்று அனில் அகர்வால் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கியதில் இருந்து, அதிலிருந்து கழிவுகள் வெளிவராத வண்ணம், திடக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி பாதுகாக்கப்பட்ட நில பரப்பு போன்ற வடிவமைப்பில் வெளியேற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

"இதன் மாதிரிகள், மாசுபாடு இருப்பதாகக் காட்டவில்லை. இதிலிருந்து நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது" என்றார் அவர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியதாக சுட்டிக்காட்டும் அனில் அகர்வால், மாதம் தோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செய்யும் ஆய்விலும், நிலத்தடி நீருக்கு பாதிப்பு இருப்பதை காண்பிக்கவில்லை என்றார்.

அதிகளவு மற்றும் குறைந்த விளைவுகளை ஏற்படுத்தும் மற்ற திடக்கழிவுகளான தாமிரக் கசடுகள் மற்றும் ஜிப்சம் ஆகியவை, சிமன்ட், சாலை போடுவது போன்றவைக்கு பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு பிறகு, தாமிரக் கசடுகள் அபாயகரமானது அல்ல என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்ததாகவும், சமீபத்தில் வெளியான தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த கடுமையான சுகாதார பிரச்சனையையும் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் அனில் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: