தூத்துக்குடியில் திரும்புகிறது சகஜ நிலை

திரும்பும் சகஜ நிலை
Image caption பேருந்துகள்

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில்நிகழ்ந்த போலீஸ் துப்பாக்கிச் சூடு, கலவரங்கள் ஆகியவற்றால் கடந்த மூன்று நாள்களாக இயல்புநிலை பாதித்து முற்றிலும் முடங்கிக் கிடந்த தூத்துக்குடி நகரம் நான்காவது நாளான வெள்ளிக்கிழமை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

வெளியூர்ப் பேருந்துகள் இன்னமும் இயங்கத் தொடங்காவிட்டாலும் உள்ளூர்ப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்போடு இயங்கத் தொடங்கியுள்ளன. காய்கறி மார்க்கெட், சில தேநீர்க் கடைகள் போன்றவையும் இயங்கத் தொடங்கியுள்ளன.

Image caption திறக்கத் தொடங்கிய கடைகள்

வெள்ளிக்கிழமை காலை பழைய பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (60), கடந்த மூன்று நாள்களாக தாம் எங்கும் போகவில்லை என்றும் இன்றாவது வேலை கிடைக்குமா என்று பார்க்கப்போவதாகவும் பிபிசி தமிழ் சேவையின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் கூறினார்.

அண்ணாநகர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற பதற்றம் நிலவிய பகுதிகளைத் தவிர பிற இடங்களில் போலீஸ் காணப்படுவது குறைந்துள்ளது.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இணையதள வசதி மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.

ஆட்டோ, டேக்சி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரோடு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சில டேக்சிகள், ஆட்டோக்கள் வெளியே வந்து பயணிகளுக்காக காத்திருக்கத் தொடங்கியுள்ளன என்றார் அச்சங்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார். ஆங்காங்கே மருந்துக் கடைகளும் திறந்திருக்கின்றன.

இணையச் சேவை குறித்துக் கேட்டபோது, விரைவில் சகஜ நிலை திரும்பினால் இணையத் தடையை அகற்றும்படி அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு மக்களுக்கு இன்னமும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கிறார் பிரமிளா கிருஷ்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்