ஸ்டெர்லைட்: விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதா துப்பாக்கிச் சூடு?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது மே 23, 24 ஆகிய தேதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சீருடை அணியாத காவலர்கள், காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று சுடும் காட்சிகளும் சில தொலைக்காட்சிகளில் வெளியாகின.

பட மூலாதாரம், Getty Images

இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை சென்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். அதற்கு முன்பாக தமிழக காவல்துறை அளித்த விளக்கத்தில், "போராட்டக்காரர்களைச் சட்டவிரோதமான கும்பல் என அறிவித்து, அந்தக் கும்பல் பொதுமக்கள் உயிருக்கும் பொதுச் சொத்துகளுக்கு ஆபத்து விளைவிப்பதை தடுக்கும் பொருட்டு, தகுந்த எச்சரிக்கைக்குப் பின் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தும் தடியடி பிரயோகம் செய்தும் அக்கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்ததால் காவல்துறையினர் வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதனையடுத்து அக்கும்பல் அங்கிருந்து கலைந்தது." என்று கூறியுள்ளது.

துப்பாக்கிச் சூடு என்பது எம்மாதிரியான பின்னணியில், எந்த விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது என தமிழ்நாடு காவலர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளருமான சித்தன்னனிடம் கேட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான விதிமுறைகள் தெளிவாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

ஒரு இடத்தில் கலவரம் ஏற்படுவது போன்ற சூழல் உருவாகுமெனத் தெரிந்தால் அங்கு முதல்கட்டமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். நகரப் பகுதியாக இருந்தால் காவல்துறை ஆணையரும் ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியரும் இந்த உத்தரவைப் பிறப்பிப்பார்கள். 8 விதமான சந்தர்ப்பங்களில் இம்மாதிரி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, காவல்துறையின் அனுமதியின்றி ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது சட்டவிரோதம் என அறிவிக்கப்படும்.

ஆனால், இதையும் மீறி ஒரு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 129, 130, 131 பிரிவுகளின் கீழ் கூட்டத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN

1973ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 129ன் படி இதற்கான ஆணையை, அரசு நிர்வாகத்திலிருந்து மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பிக்க முடியும். கலவரம் ஏற்படும் சூழலில் வருவாய் அதிகாரி ஒருவர் அங்கிருக்கும்படி காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்படுவார். ஆனால், அந்த அதிகாரியும் ஏதோ காரணங்களால் அங்கிருந்து சென்றுவிடும்பட்சத்தில், அல்லது வராத பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை துணை ஆய்வாளர் மட்டத்திற்கு கீழ்ப்படாத காவல்துறை அதிகாரி தீர்மானிக்க முடியும். இந்தப் பிரிவின்படி, கூட்டத்தில் உள்ள நபர்களை வலுக்கட்டாயமாக அகற்றலாம் அல்லது கைதுசெய்து அடைக்கலாம்.

அதையும் மீறிய சூழல் ஏற்படும் பட்சத்தில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைக்கலாம். அல்லது கூட்டத்தில் உள்ளவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

கலவரம் ஏற்படும் சூழலில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 131வது பிரிவின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை ஏற்று ஆயுதப் படையினர் செயல்பட வேண்டும். அவரைத் தொடர்புகொள்ள முடியாத பட்சத்தில், அந்த ஆயுதப் படை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அந்த அதிகாரி முடிவெடுக்கலாம்.

அதனை எவ்வாறு செய்ய வேண்டுமென தமிழக காவல்துறையின் பயிற்சி விதி 703 வரையறுக்கிறது.

1. முதலில் அந்தக் கூட்டம் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு, கலைந்துசொல்ல ஆணையிடப்பட வேண்டும்.

2. அப்படி கலைந்துசெல்லாத பட்சத்தில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீச வேண்டும்.

3. அதையும் மீறி கூட்டம் கலைந்து சொல்லாமல் இருக்கும்பட்சத்தில் வஜ்ரா போன்ற கலவரத் தடுப்பு வாகனங்களின் மூலம் தண்ணீரைப் பீச்சியடித்து கூட்டத்தைக் கலைக்கலாம்.

4. இதுவும் பலனளிக்காத பட்சத்தில் தடியடி பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைக்கலாம்.

5. மேலே சொன்ன எந்த முயற்சிகளுமே பலனளிக்காதபட்சத்தில், கலவரக்காரர்கள் பெருமளவில் பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிப்பார்கள் அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பார்கள் என்ற நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.

ஆனால், இப்படியான துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்போது, கூட்டத்தைக் கலைப்பது மட்டும்தான் நோக்கமாக இருக்க வேண்டும்; ஆட்களைக் கொல்வது அதன் நோக்கமல்ல. ஆகவே முடிந்த அளவுக்கு இடுப்புக்குக் கீழே சுடும்படி வலியுறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரத்தை இந்திய தண்டனைச் சட்டம் 100, 103 ஆகியவை அளிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்:

"பொதுவாக இம்மாதிரியான சூழலில் "pellet shot" எனப்படும் குண்டுகள்தான் முதலில் பயன்படுத்தப்படும். அவற்றைப் பயன்படுத்தி ஒரு முறை சுட்டால், அந்த குண்டு சிதறி, பலருக்கும் காயம் ஏற்படும். ஆனால், யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படாது. தூத்துக்குடி கலவரத்தைப் பொறுத்தவரை, அம்மாதிரி குண்டுகளை அதிகம் பயன்படுத்தியிருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்காது எனத் தோன்றுகிறது. ஆனால், அங்கு நிலவரம் எப்படியிருந்தது என்பதை அங்கிருக்கும் அதிகாரிகள்தான் முடிவுசெய்ய முடியும்" என்கிறார் சித்தன்னன்.

தவிர, இம்மாதிரி கலவரங்களைக் கட்டுப்படுத்த சாதாரண ரைஃபிள்களையே பயன்படுத்தும். செமி - ஆட்டோமேட்டிக் ரைஃபிள்களோ, தானாக குண்டு நிரப்பும் ஆட்டோமேடிக் ரைஃபிள்களோ பயன்படுத்தப்படுவதில்லை.

"ஊடகங்களில் வந்த வீடியோக்களைப் பார்த்தால், ஆட்டோமேட்டிக் ரைஃபிள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. பொதுவாக தீவிரவாதிகளுடனான மோதலில்தான் இம்மாதிரி துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும். காரணம், நாம் சாதாரண ரைஃபிளைப் பயன்படுத்தினால், நாம் ஒவ்வொரு முறையும் குண்டு நிரப்புவதற்குள்ளாக அவர்கள் பலமுறை சுட்டுவிடுவார்கள். ஆகவே அந்தத் தருணங்களில் ஆட்டோமேட்டிக் ரைஃபிள்கள் பயன்படுத்தப்படும். ஆனால், கலவரக்காரர்களைப் பொறுத்தவரை பெட்ரோல் குண்டோ, கற்களோ, கட்டைகளோதான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு எதிராக இம்மாதிரி துப்பாக்கியை காவல்துறை ஏன் பயன்படுத்தியது என்பது தெரியவில்லை" என்கிறார் சித்தன்னன்.

ஆனால், இதையெல்லாம் அங்கிருக்கும் நிலவரத்தை வைத்துத்தான் முடிவெடுப்பார்கள். அங்கே நிலவரம் எப்படி இருந்தது என்பது சரியாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: