பாலியல் குற்றம் செய்வோர் விவரங்களை தொகுக்கும் ஆவணப் பதிவேடு: இந்தியா திட்டம்

  • சரோஜ் சிங்
  • பிபிசி இந்தி

நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை கருத்தில் கொண்டு, இந்திய அரசு பாலியல் குற்ற ஆவணப் பதிவேடு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. உலகில் பாலியல் குற்றங்களுக்காக இதுபோன்ற ஆவணப் காப்பகத்தை உருவாக்கும் ஒன்பதாவது நாடு இந்தியா ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, டிரினிடாட் & டொபைகோ ஆகிய எட்டு நாடுகளில் மட்டும்தான் இதுவரை பாலியல் குற்றவாளிகள் பதிவேடு பராமரிக்கப்படுகின்றது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், இதற்கான பணியில் ஈடுபடும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பாலியல் குற்ற ஆவணப் பதிவேடு என்றால் என்ன?

உள்துறை அமைச்சகத் தகவல்களின்படி:

•புதிதாக உருவாகும் தேசிய பாலியல் குற்ற ஆவண காப்பகத்தில் பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் பதிவுகள் இடம்பெறும்.

•குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நபர்களின் பெயர்களும் அந்த பதிவேட்டில் பதிவேற்றப்படும்.

•குற்றவாளிகளின் பெயர், புனைபெயர், கல்வி பயின்ற பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரிந்த இடம், செய்த வேலைகள், வீட்டு முகவரி, மரபணு தகவல்கள் (டி.என்.ஏ) என பல்வேறு தகவல்களும் இந்த பதிவேட்டில் தரவேற்றப்படும்.

•மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், என்.சி.ஆர்.பிக்காக இந்த பதிவேட்டை உருவாக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஒப்பந்த ஏலம் கோரப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பாலியல் குற்றவாளிகள் ஆவணப் பதிவேட்டிற்கான அவசியம் என்ன?

இந்தியாவில் பாலியல் குற்றத்திற்காக ஆவணப் பதிவேடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக வாக்களிக்கக் கோரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு change.org மூலம் ஒரு பிரசாரம் தொடக்கப்பட்டது. ஆவணப் பதிவேடு உருவாக்கவேண்டும் என்பதை இதுவரை 90 ஆயிரம் பேர் ஆதரித்துள்ளனர்.

change.org என்ற இந்த இணையதள பக்கத்தை தொடங்கிய மடோனா ரோசியோ ஜென்செனிடம் பிபிசி பேசியது. "நிர்பயா விவகாரம் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. ஒரு சாதாரண குடிமகனாக இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு ஏதாவது செய்ய விரும்பிய நான், இந்த இணையதள பக்கத்தை தொடங்கி பொதுமக்களை இதில் கோரிக்கையை முன்வைக்கச் சொன்னேன்."

இந்த வெகுஜன மனுவின் நோக்கம் பற்றி கூறும் அவர், "இதுபோன்ற பதிவேட்டை பராமரிப்பது, வேலை கொடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த பதிவேட்டை பொதுமக்கள் பார்க்கும் உரிமை கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றால், போலிசுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்படவேண்டும். குறைந்தபட்சம் போலீஸ் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உண்மை வெளிவரும்."

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வாழ, புதிய வாழ்க்கையைத் துவங்குவதில் சிக்கல் ஏற்படாதா?

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் மடோனா, "சிறார்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஒருவருக்கு எந்தவொரு பள்ளியிலும் பணி வழங்கக்கூடாது. ஆனால் திருந்தி வாழ விரும்பும் அவருக்கு வேறு துறையில் கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்."

பிரச்சனை என்ன?

தேசிய பாலியல் குற்ற ஆவண பதிவேடு உருவாக்க மத்திய அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்தாலும், மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணிபுரியும் நேஷனல் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் (தேசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம்) என்ற அமைப்பு 'எவ்ரி ஒன் பிளேம்ஸ் மீ' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் ஆசிரியரான ஜெயஸ்ரீ பாஜாரியாவிடம், பாலியல் குற்றவாளி ஆவணப் பதிவேடு பற்றி பிபிசி பேசியது.

ஜெயஸ்ரீயின் கூற்றுப்படி, "அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இதுபோன்ற பதிவேடு ஏற்கனவே உள்ளது. அதிலிருந்து கிடைத்த படிப்பினைகளின்படி, பாலியல் குற்றவாளி பதிவேட்டை பராமரிப்பதில் நன்மைகள் குறைவாகவும் இழப்பு அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது."

இந்த பதிவேட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் ஜெயஸ்ரீ, நேஷனல் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்சின் இரண்டாவது அறிக்கையை சுட்டிக்காட்டுகிறார். No easy answers: Sex offender laws in US என்ற இணையதளத்தின்படி:

•பாலியல் குற்றவாளி பதிவேட்டில் இடம்பெறுபவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

•பொதுமக்கள் இந்த பட்டியலை அணுகும் அனுமதி கொடுக்கப்பட்டால், பட்டியலில் இருப்பவர்களின் தகவல்களை தெரிந்துக் கொண்டு பொதுமக்கள் அவர்களை அநாவசியமாக இலக்காக்கலாம்.

•குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க வேண்டிய கட்டாயத்தை இது பல சந்தர்பங்களில் ஏற்படுத்துகிறது.

இது அமெரிக்காவின் நிலைமை.

பட மூலாதாரம், Getty Images

இந்தியச் சூழலில் தனது ஆட்சேபனைகள் எப்படி இருக்கலாம் என்பதை முன்வைக்கிறார் ஜெய்ஸ்ரீ.

என்.சி.ஆர்.பி புள்ளிவிவரங்களைப் பற்றிக் குறிப்பிடும் ஜெய்ஸ்ரீ, "இந்தியாவில் பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் ஈடுபடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்களாகவே இருக்கின்றனர்." என்.சி.ஆர்.பி புள்ளிவிவரங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அதுபோன்ற நிலையில் பாலியல் துன்புறுத்தல்கள் பதிவாகும் சந்தர்ப்பங்களே குறைவாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் போலிசிடம் செல்வதற்கும், நீதிமன்ற சிக்கல்களும் தேவையில்லாத அலைச்சல் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். அதிலும் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றவாளிகள் பதிவேடு உருவாக்கப்பட்டால், குற்றங்கள் பதிவாவதே மிகவும் குறைந்துவிடும்."

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, சுமார் 35 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிலும் தாத்தா, தந்தை, சகோதரர்கள், என மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களே இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

தரவு பாதுகாப்பு மிகப்பெரிய சிக்கல் என்று தனது மூன்றாவது கவலையை பட்டியலிடுகிறார் ஜெயஸ்ரீ. ஆதார் அட்டை பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவில் எழுந்துள்ள விவாதங்களை மறந்துவிடக்கூடாது. ஆதார் அட்டை, மிஸ்ட் கால், ஃபேஸ்புக் மற்றும் பிற பயன்பாடுகள் மூலம் தகவல்கள் எடுக்கப்பட்டதான பல குற்றச்சாட்டுகள், தரவு பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றன. இதனை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பாலியல் குற்றவாளி ஆவணப் பதிவேட்டில் இடம்பெறுபவர்களின் தகவல்கள் எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்ற அச்சம் எழுகிறது."

பிற நாடுகளில் பாலிய குற்றவாளி பதிவேடு

1997ஆம் ஆண்டுக்கு பிறகு பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளின் தகவல்களை பதிவேடாக பிரிட்டன் பராமரிக்கிறது.

குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையின் அடிப்படையில்தான் அவர்களின் பெயர் இந்த பதிவேட்டில் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.

குறைவான தண்டனை பெற்றவர்களின் பெயர், பதிவேட்டிலிருந்து விரைவில் நீக்கப்படும் என்பது பிரிட்டனின் நடைமுறை.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் ஒருவரின் பெயர் இந்த பதிவேட்டில் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டால் அதற்கு சவால் விடுக்கும் உரிமை பாலியல் குற்றவாளிக்கு உண்டு.

இந்திய உள்துறை அமைச்சக தகவல்களின்படி, இந்தியாவில் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் முழுமையான குற்றப் பதிவுகள் இந்த பதிவேட்டில் சேர்க்கப்படும்.

பாலியல் குற்றவாளியாக கருதப்படும் ஒருவரால் சமூகத்திற்கு குறைவான அச்சுறுத்தல் இருப்பதாக நம்பப்பட்டால், அவரின் தகவல்கள் 15 ஆண்டுகள் பதிவேட்டில் இருக்கும். சமூகத்திற்கு அதிகமான அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் பாலியல் குற்றவாளியின் தகவல்கள் 25 ஆண்டுகளுக்கு பதிவேட்டில் பராமரிக்கப்படும்.

ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அந்த குற்றவாளியின் தகவல்கள் வாழ்நாள் முழுவதும் இந்த ஆவண பதிவேட்டில் பராமரிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: