முசாஃபர்நகர் கலவரம்: வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா?

  • பிரியங்கா டூபே
  • பிபிசி
கள நிலவரம்

தனது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களின் படுகொலை சம்பவங்களை நீங்கா வடுக்களாக நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் முசாஃபர் மற்றும் ஷாம்லி பகுதி மக்கள், அதற்கான காரணத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அதிர்ச்சியை மேலும் அதிகமாக்கும் விதமாக, படுகொலைக்கான நியாயம் கிடைப்பதற்காக இருந்த ஒரே வழியையும் அடைக்கும் விதமாக உத்தரப்பிரதேச மாநில அரசு வழக்குகளை திரும்பப்பெற்று கொள்ளும் நடைமுறையை தொடங்கியது அனைவரையும் திகைக்கச் செய்திருக்கிறது.

தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான பிபிசியின் சிறப்பு தொடரின் ஒரு பகுதியாக 2013ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் பிபிசி செய்தியாளர் பிரியங்கா டூபே.

முசாஃபர்நகர் கலவரங்களின்போது அதிகம் பாதிக்கப்பட்ட லிஸாட் மற்றும் லக் பாவ்டி கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்களிடம் கடந்த காலத்தில் எதிர்கொண்ட கொடுமையான நிகழ்வுகளின் தாக்கம் இன்னமும் நீடிக்கிறது.

கலவரங்களுக்குப் பிறகு, அக்கம்பக்கத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாறி புதிய சூழலில் வாழத் தொடங்கினாலும், மூத்தோர்கள் மற்றும் குழந்தைகளின் நினைவில் வசந்தமாக இருந்த 'வீடு' குறித்த நினைவுகள், இன்றும் அவர்களுடைய இதயத்தில் இருக்கிறது, ஆனால் `கொடூரங்களை` பார்த்த இடமாக பதிவாகியிருக்கிறது.

கந்த்லாவில் வசிக்கின்றனர் ஷம்ஷாத்-முன்னி குடும்பத்தினர். கலவரங்களுக்கு முன்பு லிஸாட் கிராமத்தில் வசித்தபோது, ஷம்ஷதின் தாய் ஜரீஃபன், தனது கருப்பு-வெள்ளை குதிரைகளையும், எருமைகளையும் நேசித்தார். தனது மாமியாரும், மாமனார் ஹாஜி நப்புவும் கால்நடைகள் மீதிருந்த அன்பால் வீட்டை விட்டு வெளியேற மறுத்து விட்டனர் என்கிறார் 50 வயது முன்னி.

படக்குறிப்பு,

ஷம்ஷாத்-முன்னி குடும்பம்

லிஸாட்டில் கலகம் வெடித்த நான்கு நாட்களுக்குப் பிறகு ஜரீஃபனின் வெட்டப்பட்ட சடலம் ஒரு கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. ஹாஜி நப்பு கொலை செய்யப்பட்டதற்கு சாட்சிகள் இருந்தாலும், இன்றுவரை அவரது இறந்த உடல் கிடைக்கவில்லை.

பெற்றோர்களின் இறப்புக்காக கிடைத்த இழப்பீட்டுத் தொகையில் காந்த்லாவில் கட்டியிருக்கும் தனது புதிய வீட்டின் முற்றத்தில் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் ஷம்ஷாத் வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறார். செங்கல் சூளை வேலை செய்யும் அவரது முகம் இறுகிக்கிடக்கிறது.

தோளில் தொங்கும் துண்டில் பொங்கும் வியர்வையுடனும் கண்ணீரையும் சேர்த்து துடைக்கும் அவர், "2013ஆம் ஆண்டு, செப்டம்பர் 7ஆம் தேதி மாலை முதலே கலவரம் தொடர்பான வதந்திகள் வரத் தொடங்கிவிட்டன. இன்று இரவு முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று ஜாட் இனத்தை சேர்ந்தவர்கள் கூறினார்கள். மாலையில், அன்சார் ஜுலேஹேவை கத்தியால் குத்தி கொன்றுவிட்டார்கள் என்று செய்தி வந்தது.

கிராமத்தில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஓடினார்கள். லிஸாடில் இருந்து முஸ்லிம்கள் அனைவரையும் ஒழித்துவிடப்போகிறோம் என்று சொன்னார்கள். என் மகன் வசிமின் திருமணத்திற்காக எனது மகளும் கணவன் வீட்டில் இருந்து வந்திருந்தாள். மாலை நேரத்தில் வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நாங்கள், வெயிலாக இருக்கிறது, மொட்டைமாடியில் அமர்ந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

அதற்குள் வீட்டை சுற்றி பலர் சூழ்ந்து கொண்டார்கள். உயிரை காப்பாற்ற வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் தலைதெறிக்க ஓடினோம் வழி கிடைத்தவர்கள் தப்பிப் பிழைத்து ஓடினோம், ஆளுக்கொரு திசையில் பிரிந்த நாங்கள் அடுத்த நாள் காலை லிஸாடிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருந்த முகாமில் சந்தித்துக் கொண்டோம். ஆனால் அம்மாவும், அப்பாவும் வரவேயில்லை, அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்று பிறகுதான் தெரிந்தது."

குதிரை வண்டியில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு, அதை கிடங்குக்கு கொண்டு சேர்க்கும் வேலை பார்த்து வந்த 80 வயதான ஹாஜி நப்புவும், அவரது மனைவி 75 வயது ஜரீஃபானும், கிராமத்தின் ஜாட் இன மக்கள் அவரைப் போன்ற வயதானவர்களை விட்டுவிடுவார்கள் என்று நம்பி வீட்டை விட்டு தப்பித்துச் செல்லவில்லை.

தனது கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசுகிறார் முன்னி. "ஏழு மகன்கள், ஏழு மருமகள்கள் பேரப்பிள்ளைகள் என பெரிய குடும்பம் இருந்தாலும், அவர்களுக்கு இறுதி காரியம் செய்ய முடியவில்லை, அவர்களின் சடலத்தைக் கூட பார்க்கமுடியவில்லை. வயதானவர்களையும் வெட்டிக் கொல்வார்கள் என்று யாருமே நினைக்கவில்லை! குடும்பத்தின் மூத்தவர்களை ஒழுங்காக அடக்கம் செய்ய முடியவில்லை."

அந்த நாளை அச்சத்துடன் நினைவுகூர்கிறார் ஷம்ஷாத், "எங்களுடனே வந்துவிடுங்கள் என்று எவ்வளவோ சொன்னோம். அதற்கு அவர்கள், இது எங்கள் கிராமம், இத்தனை ஆண்டுகளாக இங்கு இருந்திருக்கிறோம், வயதானவர்களை கொல்லும் அளவுக்கு இரக்கமற்றவர்கள் யாரும் இங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அம்மாவுக்கு குதிரை, எருமைகளை விட்டு வர மனமில்லை. உங்களுடன் வந்துவிட்டால், வாயில்லா ஜீவன்களுக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள் என்று சொல்லி, வர மறுத்த அம்மா எங்களை கிளம்பிப் போக சொன்னார், நாங்கள் வேறு வழியில்லாமல் கிளம்பினோம்."

ஷம்ஷாத் மேலும் கூறுகிறார், "எங்கள் குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மறுநாள் காலையில் தாத்தா பாட்டியை பார்க்கச் சென்றார்கள். அவர்கள் உயிருடன்தான் இருந்தார்கள். ஆனால் வீட்டிற்கு அருகே வசித்த காசிம் என்ற தையல்காரரின் வீட்டிற்கு தீ வைத்துக் கொண்டிருந்தவர்கள் எங்கள் வீட்டை நோக்கி திரும்பினார்கள். சிறுவர்கள் அங்கிருந்து தப்பி, கரும்புக் காட்டுக்குள் சென்று உயிர் தப்பிவிட்டார்கள்.

வயதானவர்களால் விரைவாக ஓட முடியாத நிலையில், கலகக்காரர்கள் அவர்களை வெட்டினார்கள். பிறகு நாங்கள் அவர்களை தேடி அலைந்தோம். ஆனால் அவர்களின் சடலங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு, கால்வாயில் இருந்து அம்மாவின் சடலம் கிடைத்ததாக போலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் வந்தது. ஆனால் உடலை கொடுக்கவில்லை. அப்பாவைப் பற்றிய தகவல்கள் எதுவுமே இதுவரை தெரியாது."

ஷம்ஷாதின் பெற்றோர் கொலை செய்யப்பட்ட வழக்கு முஜாஃபர் நகரிலுள்ள ஃபுகானா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், லிஸாட் கிராமத்தை சேர்ந்த 22 இந்துக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச அரசு திரும்பப் பெற்றுக் கொள்வதாக சொல்லப்பட்ட 131 வழக்குகளில் ஷம்ஷாதின் பெற்றோரின் கொலை வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

"இரண்டு பேர் இறந்திருக்கும் நிலையில் நான் எப்படி வழக்கை வாபஸ் வாங்குவேன்? எங்களுக்கு பணத்தாசை காட்டினார்கள், அச்சுறுத்தினார்கள் என்றாலும் நாங்கள் வழக்கை திரும்பப்பெறவில்லை. பழைய விசயங்களை எல்லாம் மனசில வைத்துக் கொள்ளவேண்டாம், வழக்கை திரும்பப் பெற்றுக் கொள் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். எங்கள் நிலம், வீடு வாழ்வாதாரம் என அனைத்தையும் பறித்துக் கொண்டு, எதையும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று எப்படி சொல்கிறார்கள்?"

லிஸாடில் எரிக்கப்பட்ட தங்கள் வீட்டின் நினைவு ஷம்ஷாதை வருத்தப்படவைக்கிறது. "மகனின் திருமணத்திற்காக முழு வீட்டையும் மீண்டும் கட்டினேன். லிண்டர் போட்டு புதிய அறைகளை கட்டினோம். பேரனின் திருமணத்திற்கு முன் புதிய மாடி கட்டவேண்டும் என்ற என் அம்மாவின் விருப்பத்தையும் நிறைவேற்றினேன். 12 முதல் 15 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய வீட்டில் ஒரு நாள் இரவுகூட தூங்கவில்லை. எங்களுக்கென்று இருந்த அனைத்தையும் இழந்துவிட்டோம். நாங்கள் எப்படி வழக்கை திரும்பப் பெறுவோம்?" என்று குமுறுகிறார் ஷம்ஷாத்.

குறையும் நீதிக்கான வாய்ப்புகள்

ஷாம்லி மாவட்டம் கைரானா வார்டு எண் -8இல் லியாகத் கான் என்ற 40 வயது நபரை சந்தித்தோம். லக் பாவ்டி கிராமத்தில் வசித்த லியாகத், கலவரங்களுக்குப் பிறகு, கைரானாவிற்கு வந்துவிட்டார். அந்த கலவரத்தில் லியாகத் இழந்தது தனது ஒரு காலை மட்டுமல்ல, தன்னம்பிக்கையும்தான். 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த கொடூரமான இரவை இன்று நினைத்தாலும் லியாகத்தின் கண்கள் அச்சத்தில் உறைந்துபோகின்றன.

"முஸ்லிம்களை கொல்லப்போவதாக கிராமத்தில் பேச்சு பரவியதும், அனைத்து முஸ்லிம் மக்களும் என் வீட்டில் கூடிவிட்டார்கள். அச்சத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்த நாங்கள், கதவை உடைக்கத் தொடங்கியதும் விதிர்விதித்துப் போனோம். என் அருகில் இருந்த தில்ஷாத், இக்ரா என்ற சிறுமி, அவளின் தாய் என அனைவரையும் கொன்று குவித்தார்கள், என்னையும் வெட்டினார்கள். முதல் வெட்டு என் வயிற்றில் விழுந்தது பிறகு வயிற்றிலும் தொடர்ந்து காலையும் வெட்டினார்கள். கைகளையும் விட்டு வைக்கவில்லை."

லியாகத் தனது சோகமான அனுபவத்தை சொல்வதைக் கேட்டு அவரது தந்தை மக்சூதும் தாய் சீதோவும் அழுகின்றனர். தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அந்த குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.

அரசு இந்த வழக்கையும் திரும்பப் பெறப்போவதைப் பற்றி கூறும் லியாகத், "ஒருபோதும் வழக்கைத் திரும்பப் பெறமாட்டேன். என் கால் துண்டிக்கப்பட்டது உடல் முழுவதும் முழு காயங்கள் இனிமேல் என்னால் வருமானம் ஈட்ட முடியாது, என்னால் நடக்க முடியாது. என் வாழ்க்கையையே பாழாக்கிய அந்த கொடுமைக்கு எனக்கு நீதிவேண்டும். அரசு எப்படி என்னுடைய வழக்கை திரும்பப்பெறமுடியும்? அரசாங்கம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமானது அல்ல, அனைவருக்கும் ஆனது. அரசுதான் பெற்றோர், மக்கள் எல்லாரும் அதன் பிள்ளைகள் தானே? பெற்றவர்களே கைவிட்டால் பிள்ளைகள் எங்கே போவோம்?" என்று உணர்ச்சி பொங்க அவர் கூறுகிறார்.

வழக்கு குறித்த அரசின் நிலைப்பாடு

இந்த ஆண்டு மார்ச் மாதம், உத்தரப்பிரதேச அரசு முசாஃபர்நகர் கலவரம் தொடர்பான 131 வழக்குகளைத் திரும்பப் பெறும் நடைமுறைகளை தொடங்கியுள்ளது. இந்த 131 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலோனோர் இந்துக்கள். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, இனவாத உணர்வுகளை தூண்டுவது, கொள்ளை, தீ வைத்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கை, கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துயரத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற முசாஃபர்நகர் கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். வன்முறைக்குப் பின்னர், அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசு, ஷாம்லி மற்றும் முசாஃபர்நகரில் வெவ்வேறு காவல் நிலையங்களில் 1455 பேருக்கு எதிராக 503 வழக்குகளை பதிவு செய்தது.

தற்போது, 13 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 131 வழக்குகளை அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

நீதிமன்ற விசாரணையின்றியே இந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் நடைமுறைகளை செயல்படுவதற்கு வழிவகுக்கும் பொருட்டு, உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் இருக்கும் ஜாட் தலைவர்களின் குழு பிப்ரவரி மாதம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது. இந்த குழுவுக்கு தலைமை வகித்தவர்கள் பா.ஜ.க எம்.பி. சஞ்சீவ் பால்யான் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ உமேஷ் மலிக் ஆகிய இருவருமே.

அப்போது ஊடகங்களிடம் பேசிய சஞ்சீவ் பால்யான், கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 850 இந்துக்களுக்கு எதிரான 179 வழக்குகளை திரும்பப் பெற கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, வழக்குகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தொடங்கும் முதல் அறிவிப்பை உத்தரபிரதேச அரசு வெளியிட்டது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மாநில சட்ட அமைச்சர் பிரஜீஷ் பாடக், கலவரத்தின்போது 'அரசியல் உந்துதல்' காரணமாக அன்றைய அரசாங்கம் தொடுத்த வழக்குகளை திரும்பப்பெறும் செயல்முறை தொடங்கும் என்று கூறினார்.

'சர்வதேச மத சுதந்திரம் பற்றிய அமெரிக்க ஆணையம்' என்ற அமெரிக்காவின் அதிகாரபூர்வ அமைப்பு, சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது, சமீபத்தில் வெளியான அதன் ஆண்டறிக்கையில் - "மோதி அரசு வகுப்புவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை, இந்த வன்முறைகளில் பலவற்றில் மோதியின் கட்சித் தலைவர்களின் தூண்டுதல் பேச்சே பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணமாக இருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த 'மைனாரிடி ரைட்ஸ் க்ரூப் இண்டர்நேஷனல்' என்ற சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 700 இனவாத வன்முறை சம்பவங்கள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களே. இனவாத வன்முறை வழக்குகளில், போலிஸ் மற்றும் நிர்வாகத்தின் தடுமாறும் அணுகுமுறையின் காரணமாக பெரும்பான்மை சமூகத்தினர் வன்முறைகளை செய்வதற்கு ஊக்கமளிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் நீண்ட காலமாக பணியாற்றியவரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் சமூக சேவகரான எஸ்.ஆர் தாராபுரி, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது என்கிறார். அவரின் கருத்துப்படி, "முசாஃபர்நகர் கலவரம் போன்ற ஒரு தீவிர கலவரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளும் தற்போதைய யோகி அரசின் போக்கு இதுவரை நடந்திராதது. "

"சிறுபான்மையினர் மீதான இந்த அரசாங்கத்தின் பாகுபாடான அணுகுமுறை தெளிவாகத் தெரிகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் அல்லது உத்தரப்பிரதேசம் என எந்த மாநிலமாக இருந்தாலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் மற்றும் பொதுமக்கள் முஸ்லிம்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் "பொதுவானவை" என்று மாறி வருகிறது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது" என்று சொல்கிறார் எஸ்.ஆர் தாராபுரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: