"புற்றுநோய் தாக்கியதா? என்ன சொல்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள்?"

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், VEDANTA

படக்குறிப்பு,

ஸ்டெர்லைட் ஆலை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடங்கிய போரட்டம், துப்பாக்கிச் சூடு - கலவரத்தில் முடிந்தது. குறைந்தது 13 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர்.

ஸ்டைர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையும், நச்சுக் கழிவுகளும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருப்பபதாகக் கூறியே மக்கள் இந்த ஆலையை எதிர்த்துப் போராடிவருகின்றனர்.

ஆனால் ஆலையில் நடப்பது என்ன? அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்புள்ளதா? அரசு ஆலையை மூடினால் தொழிலாளர்களின் கதி என்ன? இது குறித்து அறிய அந்த ஆலையின் தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசியது பிபிசி தமிழ்:

ஸ்டெர்லைட் ஆலையில் பொறியாளராகப் பணிபுரியும் நந்தகோபால் பேசும் போது "இது ஐ.டி கம்பெனி மாதிரி இல்லை. ஒரு ஐ.டி கம்பெனி மூடினால் மத்த கம்பெனில போய் சேரலாம். ஆனா இது அப்படி இல்லை. இந்தியாவிலேயே இரண்டு கம்பெனிகள்தான் உள்ளன. எல்லோருக்கும் கஷ்டம் தான். தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் மன உளைச்சலில் தான் உள்ளோம். ஆனா என்ன பண்ண முடியும்?".

பொது மக்கள் சொல்வதைப் போல் நோய்கள் ஏதேனும் வருமா? அல்லது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் வந்துள்ளதா என பிபிசி தமிழ் கேட்டபோது, "எதுவுமே உண்மை கிடையாது. எல்லாம் கட்டுக்கதை அறிவியல் ரீதியா யாரையாவது பேச சொல்லுங்க பார்க்கலாம். எல்லாம் மக்களின் உணர்வுகளை மட்டுமே வைத்து பேசுவாங்க. அதுல என்ன ஆச்சரியம்னா. கோவில்பட்டியில யாருக்கு கேன்ஸர் வந்தாலும் ஸ்டெர்லைட்தான் தான் காரணம்னு சொல்லுவாங்க. இவை எல்லாம் அடிப்படையில்லாத குற்றசாட்டு," என்கிறார் நந்தகோபால்.

நீங்கள் எத்தனை வருடமாக வேலை செய்கிறீர்கள்? உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது? என கேட்டபோது, தாமும் இங்கு வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர் உள்ளிட்ட அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார் நந்தகோபால். "இதுவரை எங்கள்ள ஒருத்தருக்கும் புற்றுநோய் வந்ததில்லை. தினம் ஆலைக்குள் வேலை செய்யும் எங்களுக்கு வராம அவங்களுக்கு எப்படி வருதுன்னு தெரியல" என்றார் அவர்.

மக்கள் சொல்லும் குற்றசாட்டை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என கேட்டதற்கு,

"எங்கள் தலைமை அதிகாரி பலமுறை சொல்லி உள்ளார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலை திறந்து இருக்கும். மக்கள் யார் வேண்டுமென்றாலும் உள்ளே வரலாம். ஆலையை முழுவதும் பார்க்கலாம். சந்தேகங்கள் எதேனும் இருந்தால் கேட்கலாம். அவற்றுக்கு நிர்வாகம் நிச்சயம் விளக்கம் அளிக்கும். ஆனால் இதற்கு யாரும் முன் வருவது இல்லை" மேலும் அவர் கூறினார்.

எவ்வளவு தொழிலாளர்கள் ஆலையில் வேலை செய்கிறார்கள் என கேட்டதற்கு, "இப்பொழுது யாரும் வேலை செய்யவில்லை. கடந்த மார்ச் 27 ந் தேதி முதல் ஆலை செயல்படாமல் தான் உள்ளது. தினமும் ஆலைக்குள் வந்து செல்வோர் மட்டும் 2,500 முதல் 3,000 பேர் இருப்பார்கள். தொடர்புடைய வெளித் தொழிலாளர்கள் சுமார் 20,000 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில்தான் உள்ளார்கள்," என்று தொழிலாளர் நிலவலரத்தைப் பேசினார் அவர்.

ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போரட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டியில் 13 பேர் இறந்துள்ளனர். இதனை ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டபோது "சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்க கூடியது. அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை. இப்படி நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" என்றார் அவர்.

முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியரான கார்த்திக்கிடம் பேசியது பிபிசி தமிழ். "நான் தூத்துகுடி மாவட்டம் திரேஸ்புரத்தில் வசித்துவருகிறேன். கடந்த 2014ல் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தேன். அங்கு வேலை செய்தபோது, எனக்கு அவ்வப்போது தலை வலி, சோர்வு, வாந்தி வரும். எனவே ஸ்டெர்லைட் ஆலையைவிட்டு கடந்த ஆறு மாதம் முன்பு விலகி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிமைண்ட் ஆலை ஒன்றில் தற்போது பணிபுரிந்து வருகிறேன்" என்று கூறினார் கார்த்திக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: