பாம்பு கடித்த தாயும், அவரிடம் பால் குடித்த சேயும் மரணம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெள்ளியன்று, பாம்பு கடித்தது தெரியாமல் தனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தனர்.

snake

அதே நாளன்று (மே 25,2018) பாம்புக்கடியை 'உலகளவில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய சுகாதார பிரச்சனையாக' உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 81,000 முதல் 1,38,000 பேர் இறக்கின்றனர். அவற்றில் பாதி மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன.

பாம்புக்கடி - எவ்வளவு பெரிய பிரச்சனை?

உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் பாதிப் பேரின் உடலிலேயே நஞ்சு செலுத்தப்படுகிறது.

உடல் பாகங்களை இழத்தல், கண் பார்வை இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் லட்சக்கணக்கானவர்களுக்கு உண்டாகிறது. வெப்பமண்டலப் பகுதிகளில் உண்டாகும் நோய்களில் அதிகம் கவனம் செலுத்தப்படாத நோய்கள் என்று அவற்றை உலக சுகாதார நிறுவனம் விவரிக்கிறது.

மக்கள்தொகை அதிகம் உள்ள சாகாரா பாலைவனத்துக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகள், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் பாம்புக்கடிகள் அதிகம் நிகழ்கின்றன.

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பாம்புக்கடி பாதிப்பு உண்டாகும்போது போதிய நச்சு முறிவு மருந்துகள் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுகிறார்கள்.

பாம்புக்கடியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் நச்சுமுறிவு மருந்துகளை தயாரிக்க போதிய வசதிகள் இல்லை. பாம்பின் நஞ்சு உடலில் பரவும் முன்பு அந்த மருந்து உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த புதிய முடிவால், பாம்புக்கடியை தவிர்ப்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றில் அனைத்து நாடுகளும் பொது செயல்திட்டத்தை பின்பற்றும்.

நச்சுத்தன்மை மிகுந்த பாம்பு கடிக்கும்போது என்ன ஆகும்?

நிலையான நச்சுப்பற்கள் உடைய பாம்புகள் கடிக்கும்போது அது நரம்பு மண்டலத்தை பாதித்து மூச்சுக்கோளாறு உண்டாக்கும்.

மடங்கும் தன்மை உடைய நச்சுப்பற்கள் கொண்ட பாம்புகள் இறைகளை பிடிக்கவும் ஆபத்து உண்டாக்குபவர்களை தாக்கவும் பயப்படுகின்றன. தோலின் தசைகளை தாக்கும் இத்தகைய பாம்புக்கடிகள் உடலின் உள்ளேயே ரத்தக்கசிவு ஏற்படுத்தும் தன்மை உடையவை.

அதிக நச்சு உடைய பாம்புகள் எவை?

அதிக நச்சு உடைய பாம்புகளை மற்றும் மனிதர்களுக்கு அதிக ஆபத்து உண்டாக்கும் பாம்புகளை கண்டறிவது முக்கியம்.

நிலத்தில் உள்ள பாம்புகளிலேயே அதிக நச்சு உடையது ஆஸ்திரேலியாவின் 'இன்லேண்ட் டைபான்' வகைப் பாம்புகள்தான்.

ஒரே கடியில் 100 பேரைக் கொல்லப் போதிய நச்சு உள்ளதாக அந்தப் பாம்பு கூறப்பட்டாலும், ’இன்லேண்ட் டைபான்’ கடித்து இறந்ததாக இதுவரை ஆதாரங்கள் இல்லை.

கடலில் உள்ள பாம்புகளும் அதிக நச்சுத்தன்மை உடையவை. எனினும் மனிதர்களிடம் அவை அதிக தொடர்பற்று இருப்பதால் அவற்றால் அதிக பாதிப்பு இல்லை.

நச்சு குறைவாக இருந்தாலும் கோஸ்டல் டைபான் மற்றும் பிளேக் மாம்பா வகை பாம்புகள் மனிதர்களுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.

பிற பாம்புகளின் நச்சைவிட இவற்றின் நச்சு அதிக வேகத்தில் செயல்படுவதால், உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் கடிபட்டவர் அரை மணி நேரத்தில் இறக்க வாய்ப்புண்டு.

அதிக மரணத்தை உண்டாகும் பாம்புகள் எவை?

 • சுருட்டை விரியன் (புல் விரியன் அல்லது சிறு விரியன் என்றும் அழைக்கப்படும்) வகை பாம்புகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவை ஆபத்து மிகுந்த பாம்புகளில் ஒன்றாக உள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் காணப்படும் இந்தப் பாம்புகள் இருள் சூழ்ந்தபின்தான் பெரும்பாலும் கடிக்கவே செய்கின்றன.
 • சுமார் 5 அடி ஒன்பது அங்குலம் வரை வளரக்கூடிய கட்டு விரியன் பாம்புகளும் இரவில் அதிகம் தாக்கி சேதத்தை உண்டாக்குகின்றன.
 • இந்தியாவிலும், பிற தெற்காசிய நாடுகளிலும் காணப்படும் கண்ணாடி விரியனும் ஆபத்து மிகுந்த பாம்பு வகைகளில் ஒன்று.
 • இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவியுள்ள நாக பாம்புகள் அதிக மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளிலும் அதிகம் வசிக்கின்றன.
படக்குறிப்பு,

கடல் பாம்புகள் அதிக நச்சுடன் இருந்தாலும் அவை மனிதர்களை கடிக்கும் வாய்ப்புகள் குறைவு

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

 • பதற்றப்படாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடுங்கள்.
 • பாம்பு கடித்த பகுதியை அதிகம் அசைக்கக் கூடாது.
 • நகை, கைக்கடிகாரம் ஆகியவை இருந்தால் உடனே கழட்டி விடவும்.
 • ஆடைகளைத் தளர்த்திக்கொள்ளவும். ஆனால், முற்றுலும் கழட்டிவிடக் கூடாது.

பாம்பு கடித்தால் என்ன செய்யக் கூடாது?

 • பாம்பின் நச்சை கடிபட்ட இடத்தில் வாயை வைத்து உறிஞ்சக்கூடாது.
 • ரசாயன மருந்து, ஐஸ் கட்டி ஆகியவற்றை பாம்புக்கடிபட்ட இடத்தில வைக்கக்கூடாது.
 • கடிபட்டவரை தனியாக விட்டுச்செல்லக் கூடாது.
 • கை, கால்களில் இறுக்கமாக எதையும் கட்டக்கூடாது. இவ்வாறு செய்வது நச்சு பரவுவதை தடுக்காது. ஆனால், வீக்கத்தை அதிகரிக்க செய்து, கை, கால்களை துண்டித்து எடுக்கும் நிலைக்கு கொண்டுசெல்லலாம்.
 • நச்சுப்பாம்புகளை பிடிக்கவோ, அடைக்கவோ முயலக்கூடாது. இறந்த பாம்புகளின் உடலைக்கூட கவனமாகக் கையாள வேண்டும். ஏனெனில், இறந்தபின்னும் அவற்றின் நரம்பு மண்டலம் சிறிது நேரம் செயல்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: