அயோத்தி வழக்கு: 'நீதிமன்றத்துக்கு வெளியேதான் தீர்வு கிடைக்கும்'

நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்வதுதான் அயோத்தி பாப்ரி மசூதி - ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்வாக அமையும் என்று வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை FAROOQ NAEEM

2010இல் அந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான 13 மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன், நீதிபதி அப்துல் நாஸிர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

வரும் அக்டோபர் மாதம் தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதால் அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

62 வயதாகும் ரவிசங்கர் இந்து மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்குக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறார். பெங்களூரு அருகே உள்ள ஒபராது ஆசிரமத்தில் பிபிசிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் தனது முயற்சிகள் பலனளித்து வருவதாகக் கூறினார்.

சுமார் 500க்கும் மேலான இஸ்லாமிய தலைவர்களை சந்தித்துள்ளதாகவும் இவரது ஆலோசனைகளை அவர்களும் வழிமொழிவதாகவும் கூறுகிறார் ரவிசங்கர்.

எனினும் வழக்கின் ஒரு முக்கிய தரப்பாக இருக்கும் சுன்னி வக்பு வாரியம் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களை இணைக்காது என்று கூறுகிறார் ரவிசங்கர். "ஒருவர் வெற்றிபெற்று கொண்டாடுவதும் இன்னொருவர் தோல்வியடைவதும் நாட்டுக்கு நல்லதல்ல," என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை AFP

"அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்துவிட்டு அனைவரும் வெற்றிபெறும் வகையிலான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இந்துக்கள் கோயில் கட்டிக்கொள்ளட்டும். இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ளட்டும். இருவரும் இதனால் கொண்டாடுவார்கள். இதுதான் நான் மத்தியஸ்தம் செய்வதன் நோக்கம்," என்று ரவிசங்கர் தெரிவித்தார்.

ராமர் கோயில் இடம் மீதான தங்கள் உரிமைகோரலை இஸ்லாமியர்கள் விட்டுவிட வேண்டும் என்பதும், அதற்கு பதிலாக அவர்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள அருகில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்பதே ரவிசங்கர் முன்வைக்கும் தீர்வு. சிலர் இதை வரவேற்றாலும் சிலர் இதை எதிர்க்கின்றனர்.

ஷியா வக்பு வாரியம் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே தீர்வு காண்பதை ஆதரிக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு நிலத் தகராறு எனும் அடிப்படையில் விசாரிக்கிறது.

நாடு முழுதும் 150 ஆசிரமங்கள் கொண்டுள்ள ரவிசங்கர் அங்கு யோகா பயிற்றுவிக்கிறார். பாகிஸ்தான், இஸ்ரேல், இராக் போன்ற நாடுகளுக்கு சென்று அமைதி முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

கொலம்பியா அரசு மற்றும் அதற்கு எதிரான ஃபார்க் கிளர்ச்சிக்குழு இடையே மத்தியஸ்தம் செய்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களிடையே இவர் மேற்கொள்ளும் மத்தியஸ்த முயற்சிகள் பாரதிய ஜனதா அரசின் சார்பிலேயே செய்கிறார் என்று கூறப்படுவதையும் அவர் மறுக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

சர்ச்சைக்குரிய நிலப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேறு சில தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. அந்த இடத்தை அருங்காட்சியகம் ஆக்குவதும் அவற்றுள் ஒன்று.

ஆனால், அந்தத் தீர்வை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. "அங்கு இப்போது ஒரு கோயில் உள்ளது. ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் கோடி கணக்கானவர்களால் வணங்கப்படுகிறது. அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

பல இஸ்லாமிய சமுதாயத்தினர் இவரது தீர்வை ஏற்றுக்கொள்கின்றனர். எனினும், பாப்ரி மசூதி நிலம் இந்துக்களுக்கு வழங்கப்பட்டால், காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களையும் விட்டுத்தர வேண்டும் என்று பயப்படுகின்றனர்.

"நானும் அதைக் கேள்விப்பட்டேன். ராமர் கோயில் கட்ட நிலத்தை இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுத்தால், அது அவர்களின் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக இருக்கும்," என்கிறார் ரவிசங்கர்.

சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான பல தரப்பு மக்களின் உரிமை கோரலை தாம் தடுக்கப்போவதில்லை என்று அவர் கூறினாலும், தனிப்பட்டவகையில் அவற்றை ஆதரிக்கப்போவதில்லை என்றும் கூறுகிறார்.

ராமர் பிறந்த இடத்தில் ஒரு கோயில் இருந்ததாகவும் அங்கு முகலாய மன்னர் பாபர் பாப்ரி மசூதி கட்டியதாகவும் இந்துக்கள் வாதிடுகின்றனர். 1949 முதல் இன்று வரை இந்த சர்ச்சைக்கு தீர்வு காணப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்