மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவின் பின்னணி என்ன?
உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு எதற்காக வெளியிடப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, செப்டம்பர் 27ஆம் தேதியன்று பதிவுசெய்யப்பட்ட ஒலிப்பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் சிவகுமார் இந்த ஒலிப்பதிவை இன்று சமர்ப்பித்தார்.
இரு ஒலிப்பதிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 52 வினாடிகள் நீடிக்கும் இந்த ஒலித்தொகுப்பில், ஜெயலலிதா மூச்சுத் திணறலுடன் பேசுவது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவும் மருத்துவர் சிவகுமாரும் உரையாடுகின்றனர். ஜெயலலிதாவின் மூச்சுத் திணறலை ஒலிப்பதிவுசெய்ய முயல்கிறார் சிவகுமார்.
"ஜெயலலிதா: எடுக்க முடியுதா?
சிவகுமார்: இப்ப ஒன்னும் இல்லை.
ஜெயலலிதா: அப்ப இருக்கும்போது கூப்பிட்டேன்.
சிவகுமார்: அப்ப ஆப்ளிகேஷன டவுன்லோடு பண்ண முடியல
ஜெயலலிதா: நீங்க ஒண்ணுகெடக்க ஒன்னு செய்றீங்க
ஜெயலலிதா: எடுக்க முடியலைனா விடுங்க.
ஜெயலலிதா: தியேட்டர்ல ஃப்ரண்ட் சீட்ல விசிலடிக்கறமாதிரி இருக்கு."
இதன் பிறகு, மருத்துவர் அர்ச்சனா, ஜெயலலிதாவின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்கிறார்.
"ஜெயலலிதா: எவ்வளவுமா?
அர்ச்சனா: 140/80 ஹையா இருக்கு.
ஜெயலலிதா: பை?
அர்ச்சனா: 80
ஜெயலலிதா: இட்ஸ் ஓகே ஃபார் மி. நார்மல்".
பட மூலாதாரம், ARUN SANKAR
இந்த ஒலிப்பதிவு எந்தப் பின்னணியில் பதிவுசெய்யப்பட்டது என சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, "ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அப்போதே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. ஆனால், பிறகு சரியாகிவிட்டது. அதன் பிறகு, நுரையீரல் நிபுணரான டாக்டர் நரசிம்மன் அவரை வந்து பார்த்தார். அவரிடம் மூச்சுத் திணறல் பற்றித் தெரிவித்தார் ஜெயலலிதா. இதைக் கேட்ட நரசிம்மன் அடுத்த முறை மூச்சுத் திணறல் வரும்போது, அந்த சத்தத்தைப் பதிவுசெய்யும்படி கூறினார். அடுத்த முறை மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட ஒலிப்பதிவுதான் இது" என்றார்.
அந்தத் தருணத்தில் பதிவுசெய்வதற்கான செல்போன் ஆப் டவுன்லோடு ஆகவில்லை; அதைத்தான் சிவகுமார் ஜெயலலிதாவிடம் விளக்குகிறார் என்றும் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமாருக்கு சம்மன் அனுப்பியது. அவர் ஜனவரி 8ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலமளித்தார். அப்போதே இதுபோல ஒரு ஆடியோ இருப்பதை சிவகுமார் தனது ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஆணையம் இப்போதுதான் அந்த ஆடியோவைக் கொடுக்கும்படி கோரியதால், இப்போது அந்த ஆடியோ கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பிபிசியிடம் தெரிவித்தார் ராஜா செந்தூர்பாண்டியன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்