நாளிதழ்களில் இன்று: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா அதிகாரி வருத்தம்

இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள்.

தினத்தந்தி

சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட வந்த ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,'' இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையைப் பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வுகள் கிடைக்கும் என நம்பிக்கை கொள்கிறேன். திட்டங்களை அமல்படுத்தும் முன் மக்களிடம் பேச வேண்டும்.'' என கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

நேற்று வெளியான சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், சென்னை பிராந்தியம் 93.87 தேர்ச்சி சதவிகிதம் பெற்று, தேர்ச்சி சதவிகிதத்தில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை பிராந்தியமானது, தமிழ்நாடு, புதுவை, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, அந்தமான் பகுதிகளை உள்ளடக்கியது. நொய்டாவை சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா 500க்கு 499 மதிப்பெண் பெற்று, இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 5-ம் ஆண்டு தொடக்க விழா ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோதி,''பாஜகவை வீழ்த்துவதற்காக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியாகத் திரண்டுள்ளனர். கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாகவே தங்களைக் காத்துக்கொள்ள இன்றைக்கு கைக்கோர்க்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது'' என பேசியுள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் வைரஸ் பரவியதற்கு வௌவால்கள் காரணம் அல்ல என்று மத்திய குழு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. மத்திய மருத்துவக்குழு சார்பில் சுகாதார துறை அமைச்சகத்திடம் சனிக்கிழமை சர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேறு எந்த வகையில் நிபா வைரஸ் பரவி இருக்கும் என்பது பற்றி மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து தமிழ்

தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அதைத் தடுக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார் என்ற செய்தியும், தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து பொதுமக்களை திசை திருப்பவே ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்ற செய்தியும் தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: