கோப்ரா போஸ்ட்: சதித்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா இந்திய ஊடகங்கள்?

இந்திய ஊடகங்கள் படத்தின் காப்புரிமை COBRAPOST.COM

இந்திய ஊடகங்களின் வீழ்ச்சியாகவும், ஜனநாயகத்துக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்திருக்கிறது கோப்ரா போஸ்டின் சமீபத்திய ஸ்டிங் ஆப்ரேஷன்.

பணத்திற்காக, நாட்டிற்கு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராகவும் செயல்பட, ஊடகங்கள் தயங்குவதில்லை என்ற கவலை தரும் செய்தி இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஸ்டிங் ஆப்பரேஷனில் ஒரு செய்தியாளர், வகுப்புவாதம் மற்றும் தேர்தலுக்கு முன் எதிர்கட்சி தலைவர்களை இலக்கு வைப்பதற்கான திட்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசுகிறார். இதனை அந்த செய்தியாளர், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் கூறுகிறார். ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு எதிரான சதி இது என்று தெரியாமல் அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கேட்கின்றனர்.

பணம் பரிமாற்றப்பட்டதோ அல்லது சமூகத்தை பாதிக்கும் விஷயங்கள் எதையேனும் செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பியதா என்பதற்கான எந்த ஆதாரமும் அதில் இல்லை என்றாலும், ஊடகங்கள் தங்கள் கடமையை செய்ய தவறுகின்றனவா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.

செய்தி ஊடகங்கள், வலதுசாரி கட்சிக்கோ அல்லது குறிப்பிட்ட சித்தாந்தம் உடைய கட்சிக்கோ ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனவா என்று ஏற்கனவே கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சாதிய சண்டைகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்த செய்திகளை வெளியிடுதிலும் ஊடகங்கள் குறித்து சந்தேகங்கள் உள்ளன; கார்ப்பரேட் ஊடகங்கள், தனியார் மற்றும் பணம் செலுத்தப்பட்டு வெளியாகும் செய்திகள் (Paid news) என்பது குறித்து பெரும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கோப்ரா போஸ்டின் இந்த செய்தியின் மூலம் இது ஒரு ஆபத்தான் நிலை என்பதை உணர முடிகிறது. ஆபத்தான நிலையை தாண்டாவிட்டாலும் அதற்கு நெருக்கமான நிலை. நாம் தற்போது விழித்து கொள்ளாவிட்டால் இந்த சாக்கடையில் மூழ்குவதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

ஒருவர், ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று செய்தித்தாள்/தொலைக்காட்சி/வலைதளம் என அணுகி பணம் தந்தால், அவர்களும் இது போன்ற தவறான திட்டங்களுக்கு பணம் வாங்கி பழகிவிட்டால், இதனை சாக்கடை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது - ஊடகத்துறையின் பெரும்பாலான பகுதி, அரசாங்கத்தின் கைகளில் அவர்களுக்கான பிரசார கருவியாக பயன்படுத்தப்படுகிறதாக நம்பப்படுகிறது. அரசாங்கம் தவறு செய்தால் அதனை விசாரிக்காமல், எதிர்கட்சி தலைவர்களை வம்பிழுப்பதிலேயே ஊடகங்கள் ஆர்வமாக இருக்கின்றன. ஊடகங்கள், அரசாங்கத்தின் மடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது அடிப்படையற்றது அல்ல.

இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில், யாரென்று தெரியாத ஒருவர், ஊடக நபர்களிடம் பேசி மோசமான விஷயங்களை செய்ய ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்றால், அரசாங்கம் தங்களுக்கு ஏற்றவாறு ஊடகத்தினை எவ்வளவு எளிதாக மாற்ற முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

அரசாங்கத்தின் மடியில் ஊடகங்கள் இருப்பது ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்ல. இது 43 வருடங்களுக்கு முன்பு இந்திரா காந்தி ஆட்சியில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதே இருந்த ஒன்றுதான். அப்போது இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்திரா காந்தி அரசாங்கத்திடம் சரணடைந்தனர்.

படத்தின் காப்புரிமை COBRAPOST.COM

ஆனால், அப்போது இருந்த சூழலுக்கும், தற்போது இருப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அப்போது கொடுமையான சக்தி மற்றும் சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற பயம் இருந்தது. அப்போது பணம் கொடுக்கப்படவில்லை, பயம்தான் ஊடகங்களை முடக்கியது. அந்த பயம் போன பிறகு, ’நியாயமான’ மற்றும் ’சுதந்திரமான’ ஊடகம் மீண்டும் பிறந்தது.

தற்போது இருக்கும் ஆளுங்கட்சி மட்டுமல்ல, எந்த கட்சியாக இருந்தாலும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் அல்லது அது தொடர்பான நிறுவனங்களாக இருந்தாலும், ஊடகங்களை தங்களுக்கு தேவையான மாதிரி எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் ஆட்டி வைக்க முடியும் என்று இந்த கோப்ரா போஸ்ட் ஆப்பரேஷன் நிரூபித்துள்ளது.

மக்கள் தொடர்பு நிறுவனம் (PR company) மற்றும் ஊடகத்துக்கு உள்ள வேறுபாடு என்ன? ஊடக செய்திகளை ஒருவர் எப்படி நம்புவது?

ஊடக நிறுவனங்களின் வேறு சில விஷயங்களையும் இந்த ஸ்டிங் ஆப்பரேஷன் வெளிப்படுத்தியுள்ளது.

உதாரணத்திற்கு, வெளியிடப்பட்ட அந்த டேப்களில், தற்போதுள்ள அரசாங்கத்தின் பெரிய ஆதரவாளர்கள் நாங்கள் என்று ஒருவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேபோல, தாங்கள் இந்துத்துவாவின் ஆதரவாளர்கள் என மற்றொருவர் கூறுகிறார். இது ஊடகத்தின் நோக்கம் மற்றும் அறநெறிகள் குறித்த பெரிய கேள்வியை எழுப்பவில்லையா?

எனினும், இந்துத்வாவை ஆதரிக்கும் ஊடகங்களின் எழுச்சி அல்லது அது போன்ற ஒரு போக்கும் புதிதல்ல. பாபர் மசூதி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, பெரும்பாலான ஊடகங்கள், குறிப்பாக இந்தி ஊடகங்கள், இனவாத மற்றும் முரண்பாடான செய்திகளை வெளிப்படுத்தின.

இதை பற்றி விசாரிக்க இந்திய ப்ரஸ் கவுன்சில் குழுக்களை அனுப்பியது. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மேலோட்டமான விஷயங்கள் சாதாரணமான நிலைக்கு திரும்பியவுடன், ஊடகங்களிலும் இனவாத அலை குறைந்துவிட்டது போல இருந்தது.

தற்போது, அந்த அலை மீண்டும் திரும்பியுள்ளது போல தோன்றுகிறது. அப்போது, எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டது போல அல்ல, தன்னிச்சையாக இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்துத்துவாவின் செயல்திட்டத்தில் ஒரு அங்கமாக, ஊடகங்கள் தயாராக இருப்பதாக இந்த ஸ்டிங் ஆப்பரேஷனில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இருண்ட காலத்தின் அறிகுறியாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒழுங்கமைக்கப்பட்ட, இனவாதத்தின் பிரசாரக் கருவியாக ஊடகங்கள் மாறப்போகிறதா? இது ஒரு முக்கியமான கேள்வி.

ஊடகங்கள் வணிகமையமாக்கப்படுவது, ஆசிரியர் என்ற பொறுப்பின் வீழ்ச்சி, மற்றும் ஊடக நிறுவனங்களின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கவலைக்கான விஷயங்களாக இருக்கிறது. பல்வேறு விதமான விவாதங்களை இது கிளப்பினாலும், இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்ப்பது நம் எல்லோருக்கும் அபாயம்தான். இது ஊடகத்தை பற்றியது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் இருப்பை பற்றியது. நியாயமான மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் இல்லாமல், செழிப்பான ஜனநாயகத்தை பற்றி சிந்திப்பது முட்டாள்தனமானது.

ஜனநாயகத்தை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால், மீடியாவை காக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரே இரவில் ஊடகங்களை காக்க மாய விளக்கு ஏதுமில்லை. அது முடியவும் முடியாது. ஆனால் அதற்கு ஒரு தொடக்கம் வேண்டும். இதற்கு முதல் படி, ஆசிரியர் என்ற பதவிக்கு உயிர்கொடுத்து அதை பலமாக்க வேண்டும்.

ஊடக நிறுவனங்களின் வணிகம் மற்றும் தலையங்கம் பிரிவுகளுக்கு இடையே ஒரு பெரிய சுவர் இருக்க வேண்டும்.

சுதந்திரமான, நியாயமான மற்றும் நம்பகத்தன்மையுடனான ஆரோக்கியமான செயல்முறை ஒன்று, ஊடகத்தின் உள் செயல்பாடுகளை கண்காணிக்கப்பட வேண்டும். இதெல்லாம் எப்படி நடக்கும்? இது ஒரு நீண்ட பாதைதான், ஆனால் நீங்களும் நானும் இதுகுறித்து சிந்திக்க தொடங்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: