'ஆம்… நான் தலித்தான்! எங்களை குற்றவாளியாக சித்தரிக்காதீர்கள்'

(தலித்துகளும் முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஒரு சிறப்புத் தொடரை உங்கள் முன் படைக்கிறது பிபிசி. அதன் ஒரு பகுதி )

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியில் இருக்கும் தலித் பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கிறது.?

நான் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவள் என்பது என் பள்ளிக்காலத்தில்தான் எனக்கு தெரியும்.

அப்போது நான் ஏழாம் வகுப்போ அல்லது எட்டாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்ட சில விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். அந்த விண்ணப்பத்தில் எங்கள் சாதியையும் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது.

நானும் அந்த விண்ணப்பத்தில் என் சாதியை குறிப்பிட்டேன். அந்த தருணத்தில் என் வாழ்க்கையின் அனைத்தும் மாறியது. ஆம், என் சாதியை பார்த்ததும், என்னை சுற்றி இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்க தொடங்கினார்கள்.

நான் 'ஒடுக்கப்பட்ட சாதி'-ஐ சேர்ந்தவள் என்று எனக்கு அப்போது கூறப்பட்டது. ஒவ்வொரு தருணத்திலும் நான் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவள் என்பதை உணரவும் வைத்தார்கள்.

பள்ளியில் என்னுடன் சக மாணவர்கள் பழகும் விதம் மாறியது. என்னுடன் விளையாடும் என் பள்ளி தோழர்கள், என்னை தவிர்க்க தொடங்கினார்கள். என் குறித்த ஆசிரியர்களின் பார்வையும் மாறியது.

எனக்கு ஏன் இவ்வாறு நிகழ்கிறது?

எனக்கு ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று என் அப்பாவிடம் கேட்டேன்.

அவர் என்னிடம், நாமெல்லாம் பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள், நம்மை எப்போதும் அவர்கள் இவ்வாறுதான் நடத்துவார்கள் என்று கூறினார்.

அப்போது எனக்கு இது குறித்து எதுவும் புரியவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு எல்லாம் புரிய தொடங்கியது.

நீங்கள் யாரென்று உங்கள் குறித்த அடையாளம் தெரியாத வரை எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் நல்லவர்தான். ஆனால், நீங்கள் யாரென்றும், உங்கள் சாதி என்னவென்றும் தெரிந்துவிட்டால் அடுத்த கணம் நீங்கள் கெட்டவராக ஆகிவிடுவீர்கள்.

உங்களுடைய எல்லா தகுதிகள் குறித்த பார்வையும் அக்கணத்தில் மாறிவிடும். இடஒதுக்கீட்டால் எல்லா இடங்களிலும் உள்நுழைந்த ஊடுருவல்காரராக நீங்கள் கருதப்படுவீர்கள்.

இடஒதுக்கீட்டின் எந்த பலனையும் நான் இதுவரை அனுபவித்தது இல்லை. என் படிப்பு, என் வேலை என எதற்காகவும் நான் இடஒதுக்கீட்டை பயன்படுத்தியது இல்லை. நான் வணிகவியல் மேலாண்மை படித்தேன், லக்னோவில் உள்ள ரினைசன்ஸ் ஓட்டலில் துணை மேலாளராக பணிபுரிகிறேன்.

இடஒதுக்கீட்டை நான் பயன்படுத்தியதில்லை. அதற்காக நான் அதை எதிர்க்கிறேன் என்று பொருள் அல்ல. எனக்கு அது தேவைப்படவில்லை. ஆனால், பெரும் எண்ணிக்கையிலான தலித்துகளுக்கு அது தேவை. அவர்கள் இடஒதுக்கீடு பெற வேண்டும். அது அவர்களது உரிமை.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு

இடஒதுக்கீடானது சாதி அடிப்படையில் அல்லாமல், பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று சிலர் தற்போது கூறுகிறார்கள். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது நல்லதொரு யோசனை.

சரி.. பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அளிக்கலாம். ஆனால், அதற்கு பின் அதாவது பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பின், சாதி ரீதியலான பாகுபாடு நிறுத்தப்படும் என்று உறுதி தர முடியுமா? தலித்துகள் துன்புறுத்தப்படுவது நிறுத்தப்படுமா?

நான் நல்ல நிலையில் இருக்கிறேன். ஆனால், நீங்கள் இப்போதும் கிராமத்திற்கு சென்று பாருங்கள். சாதி இந்துக்களுக்கு சொந்தமான கிணற்றிலிருந்து ஒடுக்கப்பட்டோர் தண்ணீர் பெறுவதில் சிரமம் இருக்கிறது. பள்ளிகளில் தலித் சிறுவர்கள் தனி வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகிறார்கள். மற்ற மாணவர்களுடன் உணவை பகிர்ந்து கொள்வதெல்லாம் இருக்கட்டும். முதலில், அவர்களுக்கு அமர்ந்து உண்ணுவதற்கு இடம் கூட கிடைப்பதில்லை.

தலித் மணமகன் திருமண ஊர்வலத்திற்காக குதிரையில் ஏறினால் அவர் கொல்லப்படுகிறார். குதிரையில் ஏறுவது என்பது சாதி இந்துக்களானது மட்டும்தான்.

இது அனைத்தும் நிறுத்தப்படுமா?

நான் நன்கு படித்து இருக்கிறேன். நல்ல பணியில் இருக்கிறேன். ஆனாலும் இந்த சாதி பிசாசு என்னை விடுவதாக இல்லை.

நான் டெல்லியில் பணிபுரிந்த போது, நண்பர்களுடனான உரையாடல் ஒன்றில் என் ஜாதி அவர்களுக்கு தெரிய வந்துவிட்டது. அதன் பின் என்ன நிகழ்ந்திருக்கும் என்று உங்களுக்கு சொல்ல தேவையில்லைதானே?

அதன்பின் நான் தனித்துவிடப்பட்டேன். அதனால் என் வேலையை விட திட்டமிட்டேன். நான் மட்டும் அந்த வேலையை விடவில்லை என்றால், நான் மாபெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பேன்.

அதன்பின் ஒரு முடிவெடுத்தேன். என்ன நிகழ்ந்தாலும், என் சாதி மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

இப்போது வரை நான் பணிபுரியும் இடத்தில் நான் என்ன சாதி என்று தெரியாது. என்னுடைய சாதி தெரியவந்தால், நான் வாழ்வாதாரத்திற்காக மிகவும் சிரமப்பட நேரிடும்.

ஆனால், இப்போது இந்த உலகத்தை நேரடியாக சந்திக்க முடிவு செய்துவிட்டேன். ஆம், நான் தலித். நான் எந்த குற்றச் செயலும் செய்யவில்லை. என்னை முதலில் குற்றவாளியாக பார்ப்பதை நிறுத்துங்கள்.

நான் தலித்தின் மகள்

நான் உத்தர பிரதேசத்தில் மூன்று அரசாங்கங்களை பார்த்துவிட்டேன். ஆனால், இங்கு எதுவும் மாறவில்லை. சூழ்நிலை ஒரே மாதிரியேதான் உள்ளது.

மாயாவதி தன்னை தலித்தின் மகள் என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால், தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான எந்த பணியையும் அவர் செய்ததாக தெரியவில்லை.

ஆம், இந்து மதத்தில்தான் அதிகளவில் சாதியம் உள்ளது. ஆனால், மதம் மாற வேண்டும் என்று எனக்கு என்றுமே தோன்றியதில்லை. கடவுள் மீதான நம்பிக்கையையும் கைவிடவில்லை.

நான் வேறு சாதியை சேர்ந்தவர் மீது காதலில் விழுந்தால், நான் அவரை மணம் செய்ய விரும்புவேன்.

என் சகோதரர் ராஜ்புட் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், என் அண்ணியின் குடும்பம் இந்த உறவை அங்கீகரிக்கவில்லை.

எங்கள் ஓட்டலில் எனக்கு கீழ் ஓரணி பணிபுரிகிறது. ஒரு பெண்ணாக, அதுவும் ஒரு தலித்தாக இந்த பணியினை கையாள்வது சிரமமான ஒன்று. மக்கள் உங்களை இழிவுபடுத்துவதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விடுவதில்லை.

நீங்கள் எப்போது தவறு செய்வீர்கள் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நீங்கள் செய்யும் ஒரு தவறை கண்டுப்பிடித்துவிட்டால், அவர்கள் உடனே, 'ஆமாம் இந்த மக்கள் எப்போதும் இப்படிதான். அவர்கள் கடினமாக உழைக்கமாட்டார்கள்' என்பார்கள்.

தலித் என்றாலே இடஒதுக்கீடு என்று மக்கள் நினைக்கிறார்கள். இடஒதுக்கீட்டை பெறுவதை தவிர வேறேதும் எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள்.

(பிபிசி செய்தியாளர் சிந்துவாசினி உடன் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடலை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: