இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையை விண்வெளியிலிருந்தும் காணலாம்

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையை அளப்பதற்கான வழியா?

படத்தின் காப்புரிமை NASA

பொருளாதார வல்லுநர்கள் ப்ரவீண் சக்கரவர்த்தியும், விவேக் தெஹிஜியாவும் அவ்வாறாகதான் கருதுகிறார்கள்.

அவர்கள் அமெரிக்க வான்படை வானிலை சார்ந்த செயற்கைக்கோள் திட்டத்தில் எடுக்கப்பட்ட சில செயற்கைக்கோள் படங்களை பெற்று இருக்கிறார்கள். இது பூமியின் மேற்பரப்பை படம்பிடித்திருக்கிறது.

இந்த செயற்கைகோள்கள் பூமியை ஒரு நாளுக்கு 14 முறை சுற்றி வந்து, பூமியின் மேற்பரப்பில் இரவு நேரத்தில் வெளிச்சம் இருக்கும் இடங்களை படம் பிடிக்கிறது.

இந்த இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட தரவுகளை கொண்டு, அவர்கள் இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 640 மாவட்டங்களில் 387 மாவட்டம் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 85 சதவீத பேர் இந்த மாவட்டங்களில்தான் வசிக்கிறார்கள். இந்த மாவட்டங்கள்தான் இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீத பங்களிக்கிறது.

இந்த வித்தியாசமான முறையை கொண்டு, இந்த பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவில் நிலவும் வருவாய் வித்தியாசங்களை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒளிரும் நகரங்கள்

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இரவில் இருள் சூழ்ந்து இருக்கிறது. இதற்கு காரணம் சிறிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகள்தான் இரவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதே சமயம், விண்வெளியிலிருந்து ஒளிமிகு இந்திய நகரங்களையும் காண முடிந்து இருக்கிறது. இது இந்திய நகரங்களுக்குள்ளும், நகரங்கள் இடையேயும் நிலவும் சமத்துவமின்மையை காட்டுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுடன் ஒப்பிட்டால் இந்த 12 மாநிலங்களில் உள்ள 380 மாவட்டங்கள், ஐந்தில் ஒரு பங்குதான் வெளிச்சமாக இருக்கிறது.

இந்தியாவின் வளம் மிகுந்த மூன்று மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்ட்ரா) சராசரியாக ஒருவரின் வருமானம், இந்தியாவின் மூன்று ஏழை மாநிலங்களில் வசிக்கும் (பீகார், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்) ஒருவரின் சராசரி வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்பதனை 2014 ஆம் ஆண்டு பொருளாதார வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

"பொருளாதார செயல்பாடு ஏற்றத்தாழ்வுகள் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே அதிகரித்து வருகிறது. இதற்கு பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழை ஆகிறார்கள் என்று பொருள் இல்லை. இந்த பொருளாதார சமனின்மையை சமனாக்க ஏழைகள் செல்வமீட்டும் வேகம் போதிய அளவுக்கு வேகமாக இல்லை. "என்கிறார் மும்பையில் உள்ள ஐடிஎஃப்சி நிறுவனத்தை சேர்ந்த சிந்தனையாளர் விவேக் தெஹிஜியா.

ஏன் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கிறது?

மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டாலும் ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவில் அதிகரிப்பது ஏன்? மோசமான நிர்வாகம் மற்றும் பணி புரிவதற்கான போதுமான திறன் இல்லாமல் இருப்பது ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், இந்த ஏற்றத்தாழ்வானது மக்களிடையே விரோதத்தை வளர்க்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை கொள்கிறார்கள்.

இரவு வெளிச்சம் நல்ல அளவுகோலா?

இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை அளவிட இந்த இரவு வெளிச்ச அளவீடானது நல்ல முறை என்கிறார் தெஹிஜியா.

மக்கள் மின்சாரத்தை எவ்வளவு நுகர்கிறார்கள் என்பதை கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுகிறது அமெரிக்கா.

படத்தின் காப்புரிமை AFP

இரவு வெளிச்சத்தை கணக்கிடுவதிலும் சில சவால்கள் உள்ளன. நிலாவின் வெளிச்சம் இதை கணக்கிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. செய்றகைக்கோள்களில் உள்ள உணர்கருவிகள் தகவல்களை தருகின்றன.

அதுமட்டுமல்லாமல் ஆய்வாளர்கள் இதனை கணக்கிட புதிய மென்பொருளையும் உருவாக்கிவருகிறார்கள்.

இது குறித்து ஆய்வு செய்த யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பார்டெண்டு பாண்டே, "பூமியின் 800 கி.மி. மேற்பரப்பிலிருந்து அவதானிக்கப்படும் தகவல்கள் நமக்கு மற்ற தரவுகளைவிட மனித நடவடிக்கை குறித்து அதிக தகவல்களை தருகின்றன" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: