நாளிதழ்களில் இன்று: 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு "கிங் மேக்கர்" யார்?

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள்.

தினமணி: மக்களவை தேர்தலுக்கு பிறகு யார் "கிங் மேக்கர்"?

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு, மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று பா.ஜ.க கனவு காண்கிறது என்றும் ஆனால், அது நிச்சயம் நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அதெ போல காங்கிரசும் தனது சொந்த பலத்தில் ஆட்சியமைக்க முடியாது.

அதனால், மத்தியில் எந்த கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக, அதாவது கிங் மேக்கர்களாக, மாநில கட்சிகளின் தலைவர்கள்தான் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தியது. இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காத காரணத்தினால், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (தமிழ்) இணையத்தில் வெளியான கார்டூன்

தினமலர்: தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு, ஐ.நா சபை கண்டனம் தெரிவித்துள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், கூண்டோடு ராஜிநாமா செய்வது குறித்து திமுக எம்.எல்.ஏக்களுடன், ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 29ஆம் தேதி தொடங்குகிறது. 23 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில், ஒவ்வொரு நாளும், துறை வாரியான விவாதம் நடக்க உள்ளது.

அதில் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், எம்.எல்.ஏக்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து தினமும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாமா அல்லது கூண்டோடு ராஜினாமா செய்யலாமா என் முக ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

அதற்கு முன்னதாக, தமிழக மக்களின் நலன் கருதி, அதிமுக அரசை வீழ்த்த சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டுள்ளதாக விவரிக்கிறது இந்த செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - புதுவை: போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை இழிவுபடுத்தி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் படி போலீஸாருக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் மனு அளித்ததை தொடர்ந்து கிரண் பேடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: