"ஊழலை பற்றி பேச பிரதமர் நரேந்திர மோதிக்கு என்ன உரிமை உள்ளது?" - குமாரசாமி

ஊழலை பற்றி பேச பிரதமர் மோதிக்கு என்ன தார்மிக உரிமை உள்ளது? படத்தின் காப்புரிமை Getty Images

ஊழலுக்கு எதிராக பா.ஜ.க போராடுவதால்தான், ஊழல் நிறைந்த எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியதை ஏளனம் செய்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

"அதை யார் கூறுவது? கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் என்ன செய்துள்ளார்? நாட்டில் ஊழலை ஒழிந்து விட்டதா? அவரின் அமைச்சகத்திலேயே பலரும் ஊழலில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் பிபிசியிடம் பேசிய முதல்வர் குமாரசாமி.

"கர்நாடக தேர்தலில் பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளராக பி. எஸ். எடியூரப்பாவை நிறுத்திய நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவிற்கு ஊழல் குறித்து பேச என்ன தார்மிக உரிமை உள்ளது? அவர் எப்படி ஊழலை தடுப்பார்?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

மத்தியில் ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், ஒடிஷா மாநிலம் கட்டக்கில் பேசிய பிரதமர் மோதி, "கருப்புப்பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடியதால், பரம எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறியுள்ளனர். இதுதான் இவர்களை இணைத்து ஒரே மேடையில் நிற்க வைத்துள்ளது. பெரிய பெரிய ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்" என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகாவில், காங்கிரசுடன் கூட்டணி வைத்து மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட போது கலந்து கொண்ட மேற்கு வங்கம், கேரளா, டெல்லி மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட 23 கட்சிகளின் தலைவர்கள் கூடியதைதான் பிரதமர் மோதி குறிப்பிடுகிறார்.

பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு ஒன்று சேர்ந்தது, "தனிப்பட்ட தலைவர்களின் நன்மைக்காக அல்ல, நாட்டின் நலனுக்காக ஒரு தளத்தை உருவாக்க ஒரு சிறிய சோதனை இது. இதுவே அந்த தளத்திற்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்" என்றார் முதல்வர் குமாரசாமி.

எதிர்கட்சி தலைவர்களின் மேடையை தேசிய அளவில் எடுத்துச் செல்ல ஒரு "ஊக்கமளிப்பவராக" தம்மால் செயல்பட முடியாது என்பதில் அவர் தொளிவாக உள்ளார். "நான் அதற்கு சிறிய மனிதன். என் பணி கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே. என் தந்தை (முன்னாள் பிரதமர் தேவே கௌடா) அவருக்கு என்று ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கிறார். அவருக்கு என தனி மரியாதை உண்டு. எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரு குடைக்குள் கொண்டுவர அவரால் முடியும்" என்று குமாரசாமி தெரிவித்தார்.

ஆனால், கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரசும், மதசாரபற்ற ஜனதா தளமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர் நினைப்பதாக தோன்றுகிறது.

படத்தின் காப்புரிமை PTI

"எந்த பிரச்சனையாக இருந்தாலும், என் நிலையில் முடிக்க முயற்சிப்பேன். தேவே கௌடா அல்லது சோனியா காந்தி அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய தேவை இருக்காது" என்றார் அவர்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதினால் மட்டும் அத்துறையில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்பதிலும் முதல்வர் குமாரசாமி தெளிவாக உள்ளார்.

"விவசாய கடன் தள்ளுடி என்பது தற்காலிக தீர்வுதான். கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக விவசாயிகள் கடும் வரட்சியை சந்தித்துள்ளனர். மேலும், 58,000 கோடி ரூபாய் அளவிலான பயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

"பயிர் முறையில் மாற்றம் கொண்டுவரவில்லை என்றால், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து விவசாயிகளை சமாதானபடுத்த வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் பொறுப்பேற்றுக் கொண்ட 24 மணி நேரத்தில், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று குமாரசாமி அறிவித்திருந்தார். தற்போது கூட்டணியில் இருப்பதால், இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் முன் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

சமூக நலனுக்காக கடந்த ஆட்சியில் சித்தராமையா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த வேண்டாம் என்பதிலும் முதல்வர் குமாரசாமி தெளிவாக உள்ளார். "ஏழை மக்களுக்கு நன்மை தரும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து நீடிக்கும்" என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: