காங்கிரஸ் கட்சியிடம் உண்மையில் பணம் இல்லையா?

காங்கிரஸ் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சி, தொடங்கப்பட்டு 133 ஆண்டுகளில் முதல்முறையாகக் கட்சிக்கு நிதி கேட்டு டிவிட்டரில் வெளிப்படையாக வேண்டுகோள் வைத்துள்ளது.

1885 இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவுஜீவிகளால் தொடங்கப்பட்டது காங்கிரஸ் கட்சி. இந்தியா சுதந்திரம் பெற்ற 71 ஆண்டுகளில், 49 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பொது மக்கள் 'சிறிய பங்களிப்பு' வழங்குமாறு அக்கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டுக்கு கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ரீடிவீட் செய்தனர். ஆனால், பலர் இந்த வேண்டுகோளை கண்டு ஆச்சரியமடைந்தனர். இந்தியாவின் " பழைமையான கட்சி"யில் நிதி் குறைபாடு இருப்பதாக நம்புவது அவர்களுக்குக் கடினமானதாக இருந்தது.

காங்கிரஸ் கட்சி தனது ஆதரவாளர்களிடம் நிதி கேட்டு, தன்னை ஒரு வெளிப்படையான அமைப்பாக நிலைநிறுத்த முயற்சிக்கிறதா அல்லது அக்கட்சி உண்மையிலேயே நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறதா?

காங்கிரஸ் கட்சியிடம் எவ்வளவு பணம் உள்ளது?

''எங்களிடம் பணம் இல்லை'' என ப்ளூம்பெர்கிடம் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தள தலைவர் திவ்யா ஸ்பந்தனா.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின்படி, 2017ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சி 33 மில்லியன் டாலர் வருவாய் வைத்துள்ளது.

இது ஒரு சிறிய தொகையைப் போல தோன்றாமல் போகலாம். ஆனால், பாஜக அறிவித்திருப்பதை விட காங்கிரஸ் கட்சியின் நிதி மிக தொலைவில் உள்ளது. 151.5 மில்லியன் டாலர் வருமானத்துடன் பாஜக இந்தியாவின் பணக்கார கட்சியாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

காங்கிரஸ் இன்னும் இந்தியாவின் இரண்டாவது பணக்காரக் கட்சியாக உள்ளது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் அதன் வருமானம் 5.3 மில்லியன் டாலர் குறைந்துள்ளது.

கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வருமானம், நன்கொடைகள், கட்சி உறுப்பினர்கள் செலுத்தும் கட்டணங்கள், சேமிப்பு மற்றும் பிற நிதி திட்டங்களில் பெறப்பட்ட வட்டி ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. ஆனால், இக்கட்சிகளுக்கு மற்ற வழிகளில் வருமானம் வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் வருமானத்தை அறிவிக்க வேண்டும் என்றாலும், அவற்றின் நிதிகள் வெளிப்படையானது அல்ல.

அரசியல் கட்சிகளில் 69% நிதிகள் ''தெரியாத இடத்தில்'' இருந்து வருகின்றன என 2017-ல் வெளியான ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கை கண்டறிந்தது. அப்படி என்றால், இந்த பணத்திற்கு அதிகாரபூர்வ பதிவு எதுவும் இருக்காது.

இந்தியாவில் தேர்தல்கள் விலை உயர்ந்தவை. 2014 தேர்தலின் போது, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 5 பில்லியன் டாலர் பணத்தை செலவழித்துள்ளனர். இத்துடன் ஒப்பிடும் போது, 2012 அமெரிக்க தேர்தலில் 6 பில்லியன் டாலர் பணம் செலவழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

எனவே, ஒரு கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்தால், அக்கட்சி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை, அக்கட்சியின் நிதி பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கர்நாடகா, பஞ்சாப் ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களிலும், வேறு இரண்டு சிறிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

இந்தியாவில் 29 மாநிலங்களில் 22 மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே ஆட்சியில் உள்ளது.

2019 தேர்தலில் இது காங்கிரஸ் கட்சியைப் பாதிக்குமா?

''இது காங்கிரஸ் கட்சியின் சிறந்த காய்நகர்த்தல்'' என்கிறார் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஒரு உறுப்பினர்ட் விபுல் முட்கால்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற பணக்கார நன்கொடையாளர்களிடமிருந்து போதுமான பணத்தை நாங்கள் பெறவில்லை. எனவே நாங்கள் சுத்தமான கட்சி என காங்கிரஸ் கட்சி தன்னை காட்டிக்கொள்ளும் என்கிறார் விபுல்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி கடைசியாக ஆட்சியில் இருந்தபோது, உயர்மட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சி மீது சுமத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசியல் கட்சிகள் உண்மையில் எவ்வளவு நிதியைப் பெறுகின்றன என்பதை அறிவதற்கு எந்த வழியும் இல்லை என்பதே மிகப்பெரிய பிரச்சனை என்கிறார் விபுல்.

ஒரு மாநில தேர்தலில் ஒரு வேட்பாளர் சுமார் 1.4 மில்லியன் டாலர் பணம் செலவு செய்கிறார். ஆனால் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள வருமானம், அதை விட மிக குறைவாக உள்ளது என்கிறார் விபுல்.

''தேர்தல்கள் கருப்பு பணத்தைச் சாப்பிடும் ஒரு அசூரன்'' என்கிறார் விபுல்.

பிரசாரம், பேரணிகளுடன், தனி விமானங்களும், சமூக வலைத்தள திட்டங்களும் தேர்தலின் போது தேவையானதாக உள்ளது. எனவே 2019 தேர்தலின் போது 545 இடங்களில் போட்டியிடுவது நிச்சயம் எந்த கட்சியின் கருவூலத்தையும் காலியாக்கிவிடும். இந்தியாவின் பழமையான கட்சி இதில் இருந்து தப்புமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்