சாமியார்கள் மீதான பாலியல் குற்றங்களும்.. மது சர்ச்சையும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பதில்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் படத்தின் காப்புரிமை AFP

பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான வன்முறைகளுக்கு மதுவும், தடை செய்யப்பட்ட பொருட்களுமே காரணம் என்கிறர் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

தனது ஆசிரமத்தில் பிபிசியிடம் பேசிய அவர், ''தில்லி திஹார் சிறையில் உள்ள பெண்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்த 95% பேர், மது அல்லது போதை மருந்துகள் உட்கொண்டிருந்தபோதே குற்றம் புரிந்துள்ளனர்'' என்கிறார் திஹார் சிறையில் யோகா முகாம் நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

''மது மற்றும் போதை பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்காமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியாது'' என்கிறார் அவர்.

ஆனால், ரவிசங்கர் கூற்றை பெண் செயற்பாட்டாளர்கள் மறுக்கின்றனர். அனைத்து இந்திய முற்போக்கு மகளிர் அமைப்பி தலைவர் கவிதா கிருஷ்ணன், மதுவுடன் பாலியல் பலாத்காரத்தைத் தொடர்புப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கான உண்மையான பிரச்சனையில் இருந்து திசை திருப்புவதாகும் என்கிறார்.

'' எல்லா பிரச்சனைகளுக்கும் மதுவே காரணம் என கூறி, மது மீதே முழு பழியினையும் போட பார்க்கிறார்கள்'' என்கிறார் கவிதா கிருஷ்ணன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமூக சீர்திருத்தத்தையும், மக்களின் மன மாற்றத்தையும் வலியுறுத்துகிறார். ''பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த சமூக தீமையை எதிர்கொள்ளக் கல்வியும், பயிற்சியும் அவசியம்'' என்கிறார் அவர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மதுவிலக்கு மட்டும் போதாது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குஜராத்தில் முழு மதுவிலக்கு இருந்தபோதிலும், உண்மையில் இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் பலாத்கார வழக்குப் பதிவாகிறது. இதில் எத்தனை வழக்கு, மதுவுடன் தொடர்பு உள்ளது என கூறுவது கடினம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மதுவும், போதைப் பொருட்களும் ஒரு சிறிய காரணம் என்பதைச் சமூக செயற்பாட்டாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற ஆண்களின் நம்பிக்கையும், பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கமுமே காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் கத்துவாவில் 8 வயது சிறுதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், இதில் ஈடுபட்டவர்கள் யாரும் மது அருந்தியிருக்கவில்லை. கத்துவா சம்பவம் குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் கேட்டபோது, அதில் ஈடுபட்டவர்களும், அதனை ஆதரித்தவர்களும் பைத்தியக்காரர்கள் என்கிறார்.

சமீப காலத்தில், மத குருக்களின் ஆசிரமத்தில் நடந்து வெளிச்சத்திற்கு வந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாட்டை உலுக்கின.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யமுனா கரையில் நடந்த விழா

அந்த மத குருக்களை கண்டிக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அனைத்துத் துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், வேறு துறைகளில். யமுனா நதிக்கரையில், மூன்று நாட்கள் விழா நடத்தியதில், சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ரவிசங்கர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

தாங்கள் அமைப்பு நடத்திய பிரம்மாண்ட விழா யமுனா கரையின் சமவெளியை பாதிக்கவில்லை என்றும், அப்பகுதி இப்போது பசுமையாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

தனது நற்பெயரைக் கெடுக்க, சிலர் இந்த சர்ச்சையை உண்டாக்கினர் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நம்புகிறார்.

இந்தியாவில் நதிகளைச் சுத்தப்படுத்தும் பிரசாரத்தைத் தான் நடத்துவதாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகிறார். ''35 நதிகளில் எங்கள் பணிகளை செய்து வருகிறோம். 2009-ல் யமுனா நதியைச் சுத்தப்படுத்தி 500 டன் குப்பையை நீக்கியுள்ளோம்'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்