மரணித்தவர்களே, அதற்கான ஆதாரத்தையும் கொடுக்க முடியுமா? #bbcgroundreport

बीबीसी
Image caption பல்டன் ராம்

துறவியான பல்டன் ராமுக்கு தனது வயது என்ன என்பது தெரியாது. ஆனால் இப்போது பிடிமானம் இல்லாமல் நிற்க முடிவதில்லை.

மெலிந்த உடலுடன் இருக்கும் அவரின் முடியோ நரைத்து சடைமுடியாக இருக்கிறது. தனது வீட்டின் முன் தளர்ந்து போய் அமர்ந்திருக்கும் அவர் அனைத்தையும் துறந்தது விருப்பத்துடன் அல்ல.

அவர் சாமியார் ஆன கதை, அவரது கிராமத்தின் கதையும்கூட.

பிஹார் மாநிலம் பதானி கிராமத்தை சேர்ந்தவர் பல்டன் ராம். 1996ஆம் ஆண்டு, ஜூலை 21ஆம் தேதியன்று பதானி கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்புகள் மீது 'ரண்வீர் சேனா' தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில், 11 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 21 தலித்துகளும் முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர்.

Image caption 14 பேர் கொல்லப்பட்ட மார்வாரி சௌத்ரி மல்லாவின் வீட்டின் முற்றம்

'பதானி டோலா படுகொலை' என அறியப்படும் இந்த கொலை, நாடெங்கிலும் உள்ள தலித்துகளுக்கு எதிரான வன்முறை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்டன் ராமின் 13 வயது மகள் ஃபூலா குமாரியும் இந்த கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர்களின் நினைவாக கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவுச் சின்னத்தில் உயிரிழந்த அனைவரின் முகங்களையும் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நினைவுச்சின்னத்தின் முன் பல்டன் ராமின் ஒற்றை அறை கொண்ட வீடு அமைந்துள்ளது.

Image caption பதானி டோலா கிராமத்திற்கு செல்லும் சாலை

தடுமாறும் பேச்சு

சடை விழுந்த தனது நீண்ட தலைமுடியை விரித்துப் போட்டு அமர்ந்திருக்கும் பல்டன் ராமுக்கு வயது மூப்பின் காரணமாக சில ஆண்டுகளாக காது கேட்பதில்லை.

ஃபூலா குமாரி பற்றி அவரிடம் விசாரித்தபோது, பல்டன் ராம் தனது கையை உயர்த்தி, எதிரில் அமைந்திருக்கும் நினைவிடத்தை சுட்டிக்காட்டுகிறார். "என் மகள் ஃபூலாவை இங்கிருந்து தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறுகிறார்.

சொல்லும்போதே அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிகிறது. மகள் இறந்த மூன்று ஆண்டுகளில் அனைத்தையும் துறந்து துறவியாகிவிட்டார் பல்டன் ராம்.

ரண்வீர் சேனா

பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்த இந்த வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 23 பேர் குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Image caption படாலானி டோலா படுகொலையை நேரில் கண்டவர்கள் (இடப்புறம் இருந்து) ஹீராலால், யமுனா ராம், கபில் மற்றும் மார்வாரி செளத்ரி மல்லாஹ்

2010 மே மாதம் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மூன்று பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிலர் இறந்துபோக, பிறருக்கு கொலையில் தொடர்பில்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஆனால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை 2012 ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்த பாட்னா உயர் நீதிமன்றம், 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்டவர்களில் ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங்கும் அடங்குவார்.

’மேல் சாதியை’ சேர்ந்த ஜமீந்தார்களுக்காக ஆயுதம் ஏந்திய படையாக ரன்வீர் சேனாவை உருவாக்கிய பிரம்மேஷ்வர் சிங் 2012ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட பின், நியாயம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை பதானி டோலா கிராமத்தினர் அணுகினாலும் அங்கு அவர்களுக்கு கிடைத்த தீர்ப்பில் நீதி கிடைக்கவில்லை.

தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என்பதற்கான சமீபத்திய உதாரணம் பதானி டோலா படுகொலை கொடூர நிகழ்வு.

'தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நீதி கிடைப்பதற்கான சாத்தியங்கள் என்ன?'

தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான பிபிசி சிறப்புத் தொடருக்காக, இந்த கேள்விக்கான பதிலை தேடி பதானி டோலா படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது யாரும் நிம்மதியாக இல்லை என்று தெரியவந்தது.

Image caption அர்பல் மாவட்டத்தின் சோன் நதிக்கரையில் உள்ள லக்ஷ்மண்புர் பாதே கிராமம். தலித்கள் குடியிருப்பிலிருந்து சோன் நதிக்கு செல்லும்போது ரன்வீர் சேனா 1997 டிசம்பர் முதல் நாளன்று இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தினார்கள்.

தேசிய குற்ற ஆவணப் காப்பகத்தின் (NCRB) இந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, 1996இல், வகுப்புவாத வன்முறையால் பதானி குடியிருப்பு தலித்துகள் மட்டுமே பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் (2007-2017) என்.சி.ஆர்.பியின் தரவுகளின்படி, இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளில் 66 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு ஒரு தலித் மீது வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் என்.சி.ஆர்.பி வெளியிட்ட தரவுகளின்படி, தலித்துகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2015 ஆம் ஆண்டில் 38,670 என்றும், 2016இல் 40801 ஆக உயர்ந்துவிட்டதாகவும் தெரிகிறது.

உள்துறை அமைச்சகம் 2018 ஏப்ரலில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, தலித்துகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் 16.3 சதவீதத்தினருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

'ரண்வீர் பாபா வாழ்க' முழக்கம்

Image caption 'பாதே படுகொலை'யில் 57 தலித்துகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரை 2013 அக்டோபரில் பாட்னா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த படுகொலைகளில் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை இழந்த மகேஷ் குமார்

பதானி குடியிருப்பில் பல்டன் ராமுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, கிராமத்தினர் எங்களை சூழ்ந்துக்கொண்டனர். அங்கிருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் இருக்கும் மார்வாரி சௌத்ரி மல்லாஹின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வீட்டின் முற்றத்தில்தான் பதானி படுகொலை சம்பவத்தின்போது பெண்கள், குழந்தைகள் என 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

தற்போது செங்கலால் கட்டப்பட்ட வீடு, அன்று மண்வீடாக இருந்தது.

இந்த கிராமத்தில் வசிக்கும் தலித்துகளுக்கு நிலம் இல்லை, கூலி வேலைக்கு செல்பவர்கள். ஜூலை மாதத்தின் அந்த படுகொலை சம்பவ நாளன்று கிராமத்தின் பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு சென்றிருந்தனர். 'ரண்வீர் பாபா கி ஜெய்' என்ற முழக்கங்களை எழுப்பியவாறு மதிய வேளையில் கிராமத்திற்குள் ரண்வீர் சேனாவினர் நுழைந்தனர்."

கூலி உயர்வு கோரிய தலித்துகள்

Image caption பதானி கிராமத்தில் தியாகிகள் நினைவிடத்தில் பல்டன் ராம் மற்றும் யமுனா ராம்

"தீபாவளி பட்டாசு வெடிப்பது போல துப்பாக்கிச் சூட்டின் ஓசை கேட்டது. வந்த 60 பேரின் கைகளிலும், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வாள்கள் அரிவாள்கள் என ஆயுதங்கள் இருந்தன. அரை மணி நேரத்திற்குள் 21 பேரை கொன்றுவிட்டார்கள். சமுத்ரி தேவி, லாகியா மற்றும் 11 வயது பேத்தி புத்னா என என்னுடைய குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கொன்றுவிட்டார்கள்" என்று துயரத்துடன் சொல்கிறார் ஹீராலால்.

கொடூரமான கொலைகளை நேரில் பார்த்த ஹீராலாலின் கூற்றுப்படி, வேலைக்கான கூலியை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தி கொடுக்குமாறு விடுத்த கோரிக்கையே இந்த படுகொலைக்கு காரணம்.

"தொடக்கத்தில் சுமார் 150 தலித் தொழிலாளர்கள் அடிமைகளாக இருந்தோம். 1979இல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற மனோஜ் குமார் ஸ்ரீவஸ்தவ், தொழிலாளர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி எங்களை விடுவித்தார். இது கிராமத்தில் இருந்த மேல்சாதியினருக்கு பிடிக்கவில்லை."

மிகக்குறைந்த கூலி

"அதற்குப் பிறகு நாங்கள் தினக்கூலிகளாக மாறினோம். அரசு நிர்ணயித்திருந்த கூலி நாளொன்றுக்கு 21 ரூபாய் என்ற நிலையில் முதலாளிகள் எங்களுக்கு 20 ரூபாய் கொடுத்தார்கள். கூலி உயர்வு கேட்டதற்கு நக்சலாக மாறாதீர்கள் என்று எச்சரித்தார்கள். பிகாரில் ரண்வீர் சேனா என்ற அமைப்பை உருவாக்கி, பதானியை அழித்து விடுங்கள் என்று கட்டளை இட்டார்கள்."

Image caption பதானி கிராமத்தில் தியாகிகள் நினைவிடத்தில் பல்டன் ராம் மற்றும் யமுனா ராம்

"நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த யமுனா ராம், "ஐந்து மாத கர்பிணியான என் மகள் ராதிகா தேவியும் மார்பில் சுடப்பட்டார். காயமடைந்த ராதிகாவும் கொலைகளை நேரில் பார்த்த சாட்சியாக இருந்தார். சாட்சி சொல்ல நாங்கள் இருவரும் நீதிமன்றத்திற்கு பலமுறை சென்றோம். அலைகழிக்கப்பட்டோம். உன்னை சுட்டவர்கள் யார் என்று அடையாளம் காட்டு என்று கேட்டார்கள், நீதிபதியும் பல கேள்விகள் கேட்டார், நாங்கள் எல்லாவற்றிகும் பதில் சொன்னோம். ஆனால் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையே?" என்று விரக்தியாக சொல்கிறார் அவர்.

இதைச் சொல்லும் யமுனாவின் முகத்தில் தெரியும் சுருக்கங்கள், அவர் கடந்த 22 ஆண்டுகளாக விட்ட தாரை தாரையாக விட்ட கண்ணீரின் சுவடுகளோ என தோன்றுகிறது.

அச்சத்தில் வாழ்க்கை

மார்வாரி முற்றத்தில் எங்களுக்கு எதிரில் அமர்ந்திருக்கும் 50 வயது கபில், கிராமத்தில் தலித்துகள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார்.

அவர் கூறுகிறார், "அவர்கள் எங்களை துன்புறுத்தினாலும் பேசாமல் இருக்கும் வரைதான் அமைதி இருக்கும். இன்றும்கூட, தலித்துகளின் தினக்கூலி 100 ரூபாய் மட்டுமே. இதுதான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கூலி. தலித்துகளான எங்களிடம் நிலம் இல்லை, வேலைக்கான வேறு வாய்ப்புகளும் இல்லை என்பதால் அவர்கள் சொல்வதை மறுபேச்சு இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் உற்றார் உறவினர்களை படுகொலை செய்தவர்களிடம்தான் தலித்துகளாகிய நாங்கள் வேலை செய்ய வேண்டும்."

Image caption லக்ஷ்மண்பூர் பாதே படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த 57 தலித்துகளின் நினைவாக, கிராமத்தின் தலித் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் 'தியகிகள் நினைவிடம்'

"படுகொலை செய்தவர்கள் எங்கள் முன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தைரியமாக சுற்றுகிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால், பழைய சம்பவத்தை மறந்துவிட்டீர்களா என்று நையாண்டி செய்வார்கள்." என்கிறார் கபில்.

அங்கு உள்ள தலித் மக்கள் இன்றும் அச்சத்தில் வாழ்கின்றனர்.

தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள்

ஹீராலால் மேலும் கூறுகிறார்: "நாட்டு நடப்பை நீங்களும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்? தலித்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இந்து மதத்தின் பெயரில் எதாவது ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு மீண்டும் இங்கு வந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மிகத் தீவிரமான குற்றங்களை செய்தாலும் விடுதலையாகும் உயர் சாதியினரின் மன தைரியம் அதிகரித்துவிடுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட நாங்கள் மேலும் அச்சத்தில் ஒடுங்கிப் போகிறோம்."

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நீண்ட காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, தற்போது சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியின் கருத்துப்படி, தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் தற்போது அதிகரித்திருப்பதாக கூறுகிறார்.

"என்.ஆர்.ஆர்.பியின் சமீபத்திய தரவுகளைப் படித்தேன். பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் பிற மாநிலங்களைவிட மிக அதிகமாக இருப்பது தெரிகிறது. இந்த அரசின் தலித் விரோத மனப்பான்மை தெளிவாக தெரிகிறது. தலித் மற்றும் பிற்படுத்த மக்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக 'வளர்ச்சிக்கான பயணத்தின்' பின், போலிசும், அரசு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன" என்று அவர் கூறுகிறார்.

இது தாராபுரியின் தனிப்பட்ட கருத்து. ஆராவில் வசிக்கும் மொஹம்மத் நயீமுதீனுடன் பேசினோம்.

'22 ஆண்டுகளாக சரியான உறக்கமில்லை'

பதானி குடியிருப்பு படுகொலையில் மொஹம்மத் நயீமுதீன் குடும்பத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்கு பிறகு அவர் எஞ்சியிருந்த குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி ஆராவிற்கு குடிபெயர்ந்துவிட்டார்.

மூத்த சகோதரி, பெரிய மருமகள், பத்து வயது மகன், மூன்று மாத பேத்தி உட்பட ஆறு பேரை ரண்வீர் சேனாவினர் கொன்று குவித்தனர்.

தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நீதி கிடைக்கிறதா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது அவரின் கண்களில் நீர் வழிகிறது, தொண்டை அடைத்துக் கொள்கிறது.

22 ஆண்டுகள் ஆனபோதும் பசுமரத்தாணி போல அவர் மனதில் ஆறாப் புண்ணாக இருக்கும் துன்பத்தின் வலி, அவரது கண்ணில் இருந்து கண்ணீராக பெருகுகிறது.

கண்ணீரைக் கட்டுப்படுத்த ஒரு குவளை தண்ணீரை குடித்துவிட்டு பதிலளிக்கிறார் நயீமுதீன். "குடும்பத்தில் ஆறு பேருக்கும் இந்த கையால்தான் காரியம் செய்தேன். 22 ஆண்டுகளாக நிம்மதியான உறக்கம் இல்லை. ஐந்து பேரின் சடலங்களை ஒரே டிராக்டரில் வைத்து எடுத்துச் சென்றோம். பத்து வயது மகனின் கழுத்தை பின்புறம் இருந்து வெட்டியிருந்தார்கள். 20 நாட்கள் வரை பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவன் இறந்துவிட்டான்".

Image caption ஆராவில் வசிக்கும் மொஹம்மத் நயீமுதீன்

'வழக்கை கண்டுகொள்ளாத நீதிபதி'

"எங்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்?" என்று அவர் எதிர்கேள்வி எழுப்புகிறார். உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால் வக்கீலிடம் வழக்கு பற்றி கேட்கும் போதெல்லாம், நீதிபதி வரவில்லை என்ற பதிலே கிடைக்கும். எங்களால் என்ன செய்ய முடியும்?

நயீமுதீன் கூறுகிறார், "எங்கள் வழக்கை விசாரிக்க நீதிபதி உட்காரமாட்டார். எப்போதாவது வந்தாலும், எங்கள் வழக்கைப் பார்க்க மாட்டார். தலித்துகளின் வழக்கு தானே, யார் கேட்கப் போகிறார்கள் பரவாயில்லை என்று நினைத்திருப்பார்."

நயீமுதீனின் அருகில் அவரது மூத்த மகன் இமாமுதீன் அமர்ந்திருக்கிறார். அவரது மனைவி நக்மா காதூனும் இறந்தவர்களில் ஒருவர். அவர்களுக்கு அப்போதுதான் திருமணம் நடந்திருந்தது.

Image caption மொஹம்மத் நயீமுதீனின் வீடு இருக்கும் தெரு

"அந்த சம்பவத்தின்போது கிராமத்தில் வளையல்கள் விற்பனை செய்துக் கொண்டிருந்த நான் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட எல்லா பெண்களும் குழந்தைகளும் மார்வாரியின் வீட்டிற்குள் ஓடினர்கள். உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் அடைக்கலம் புகுந்த அந்த வீட்டிற்குள் புகுந்து அவர்களை கொன்று போட்டார்கள். நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று அச்சுறுத்தினார்கள், ஆனால் நான் பல முறை நீதிமன்றத்திற்குச் சென்றேன், சாட்சி சொன்னேன்".

அழும் என்னை ஆரா நீதிமன்ற நீதிபதி என்னை சமாதானப்படுத்துவார், அமைதியாக இரு, நீதி கிடைக்கும் என்று அவர் சொல்வார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று பேருக்கு மரண தண்டனையும் வழங்கினார். ஆனால் வழக்கை ஆறு மாதம் மட்டுமே விசாரித்த உச்ச நீதிமன்றம் 21 பேர் கொல்லப்பட்டதற்கு யாரும் காரணம் இல்லை என்று சொல்லி விடுதலை செய்துவிட்டது.

சாட்சிகள் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னார். சாட்சிகளை கொண்டு வரவேண்டியது போலிசின் வேலை தானே? கொல்லப்படும்போதும், நாங்கள் கொல்லப்பட்டோம் என்று சாட்சியையும் நாங்களே கொடுத்துவிட்டுத்தான் சாக வேண்டுமா? இல்லை என்றால் நீதி கிடைக்காதா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்