ஸ்டெர்லைட் ஆலை மூடல்: சட்டப்படி இது நிரந்தரமா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும், ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றங்களை நாடி நிவாரணம் தேட முயற்சிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை எந்த அளவுக்கு நீதிமன்றத்தில் நிற்கும்?

படக்குறிப்பு,

ஸ்டெர்லைட் ஆலை.

"தற்போது இந்த அரசாணையை 1974ஆம் ஆண்டின் நீர் பாதுகாப்புச் சட்டத்தின் படி மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. இது போதுமானதாகத் தோன்றவில்லை. காற்றுப் பாதுகாப்புச் சட்டத்தையும் அரசு குறிப்பிட்டிருக்கலாம். தவிர, இந்த ஆலை எவ்விதமாகவெல்லாம் சூழலை மாசுபடுத்தியது, விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்தும் அந்த அரசாணையில் ஏதும் இல்லை" என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

வெறும் பொதுநலன் என்ற வார்த்தை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருக்கும் விதிமுறைகளை பின்பற்றுவதாகக் கூறி அந்த நிறுவனம் நீதிமன்றங்களை நாட முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார் வெற்றிச்செல்வன்.

படக்குறிப்பு,

"மக்களின் உணர்வுகள் ஆலைக்கு எதிராக இருப்பதால் அரசு உறுதியாக இருக்குமென நம்பலாம்"

"தமிழ்நாட்டில் தாமிர உருக்காலை இது ஒன்றுதான். ஆகவே, தமிழகத்தில் தாமிர உருக்காலைகள் அமையக்கூடாது என்பதை ஒரு கொள்கை முடிவாகவே, சட்டமாகவே அறிவிக்கலாம். ஒரு மாநிலத்தில் எவ்விதமான தொழிற்சாலைகள் இருக்கலாம் என்பதை அந்த மாநில அரசுகள் முடிவுசெய்ய முடியும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசு இதற்காக ஒரு சட்டத்தை இயற்றியிருக்க வேண்டும்" என்கிறார் வெற்றிச்செல்வன்.

"தேவை அரசாணை"

அவர், "இந்த அரசாணையை சுலபமாக நீதிமன்றத்தில் உடைத்து விட முடியும். இப்போதைய தேவை `கொள்கை முடிவு` தான். புரிந்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டுமென்றால், அரசு இலவச மடிக்கணினி தருவது கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட்டு, இனி இலவச மடிக்கணினி தர கூடாது என்று சொல்ல முடியாது. அது போல, இனி சூழலியலை பாதிக்கும் தாமிர உருக்காலைகளை இனி தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு கொள்கை முடிவினை எடுக்க வேண்டும். அதுதான் நிரந்திர தீர்வாக இருக்க முடியும்." என்கிறார்.

இதே கருத்தைதான் முன்வைக்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன்.

"இந்த அரசாணையை நான் முழுவதுமாக வரவேற்கிறேன். ஆனால், நிரந்திரமாக ஸ்டெர்லைட் உருக்காலையை மூட வேண்டுமென்றால், அமைச்சரவை கூடி கொள்கை முடிவெடுக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவாக மாற வேண்டும்." என்கிறார்.

"பலமுறை மூடி திறக்கப்பட்டுள்ளது"

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனும் தமிழக அரசின் இந்த அரசாணை நீதிமன்றத்தை தாண்ட வேண்டும் என்கிறார். "இந்த ஸ்டெர்லைட் ஆலையின் வரலாற்றைப் பார்த்தால் அந்த ஆலை இதற்கு முன்பாக பல முறை மூடப்பட்டு, நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுத் திறக்கப்பட்டுள்ளது தெரியவரும்" என்கிறார் அவர்.

இதற்கு முன்பாக 1998ல் அரசால் இந்த ஆலை மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டும் ஹரி பரந்தாமன், அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆகியவை ஒரே குரலில் பேசியதை நினைவுகூர்கிறார்.

"அப்போது ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு, நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது ஸ்டெர்லைட் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் இனியும் கடைப்பிடிக்கும் என்று கூறியது. ஸ்டெர்லைட்டும் அதையே கூறியது. ஆகவே ஒரே மாதத்தில் ஆலையைத் திறக்க உத்தரவிடப்பட்டது" என்கிறார் ஹரி பரந்தாமன்.

அதேபோல 28.9.2010ல் ஸ்டெர்லைட்டை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மூன்றே நாட்களில் மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக இருந்ததால் ஆலை மூன்றே நாட்களில் திறக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் ஹரி பரந்தாமன்.

2013லும் இதேபோல ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால், அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று ஆணை பெற்று ஆலையைத் திறந்ததை சுட்டிக்காட்டும் ஹரி பரந்தாமன், இப்போதும் அந்தஆலை நீதிமன்றத்திற்குச் செல்லும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அப்படி நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்றால் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்; இந்த முறை போராட்டம் பெரிதாக மக்களின் உணர்வுகளும் ஆலைக்கு எதிராக உருவாகியிருப்பதால் அரசு உறுதியாக இருக்குமென நம்பலாம் என்கிறார் ஹரி பரந்தாமன்.

"ஏமாற்று வேலை"

பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார், இந்த அரசாணை என்பது ஏமாற்று வேலை என்கிறார்.

"பல ஆண்டுகாலமாக சூழலியலுக்கான போராட்ட களத்தில் இருக்கிறோம். அரசு எவ்வாறு சூழ்ச்சி செய்யும்; மக்களை எப்படி எல்லாம் திசை திருப்ப முயற்சிக்கும் என்பது நன்கு தெரியும். இந்த அரசாணையும் அப்படியான சூழ்ச்சிதான்.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கை ஸ்டெர்லைட்டை நிரந்திரமாக மூட வேண்டும் என்பதுதான். மக்களை தற்காலிகமாக அமைதிபடுத்துவதற்கு இந்த முடிவினை அரசு எடுத்துள்ளது. அரசின் இந்த அரசாணையை சுலபமாக நீதிமன்றத்தில் உடைக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு கண்துடைப்பு." என்கிறார்.

மொன்னையான காரணங்கள்

"அரசு மிகவும் மொன்னையான காரணங்களை கூறி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடி உள்ளது. இந்த காரணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் செல்லாது" என்கிறார் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

"மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் உரிமத்தை புதுபிக்க மறுத்தது. மே 23 அம் தேதி ஆலையை மூடுவதற்கான உத்தரவும் அதனை தொடர்ந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றாலும், சட்டரீதியாகவும், தொழிற்நுட்ப ரீதியாகவும் கூர்மை இல்லாத காரணங்கள் சொல்லி இந்த ஆலையை மூடி இருக்கிறார்கள்.2013 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இப்படியான மொன்னை காரணங்கள் சொல்லிதான் ஆலையை மூடினார்கள். ஆனால் என்ன நடந்தது? மீண்டும் ஆலை இயக்கப்பட்டதுதானே? " என்கிறார்.

மக்கள் நலனில் அரசுக்கு உண்மையாக அக்கறை இருந்தால், ஸ்டெர்லைட் செய்துள்ள வலுவான சட்ட மீறல்களை சொல்லி அந்த தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று சொல்லும் நித்தியானந்த், அவர்கள் செய்துள்ள 5 விதிமீறல்களை பட்டியலிடுகிறார்.

ஐந்து விதிமீறல்கள்:

"900 டன் உற்பத்தியிலிருந்து, 1200 டன் தின உற்பத்தி திறன் அளவுக்கு 2007 ஆம் ஆண்டு இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கம் செய்யும் போது தங்களிடம் 172 ஹெக்டேர் நிலம் இருப்பதாக ஸ்டெர்லைட் சொல்கிறது. இந்த நிலத்தில் தங்களால் தேவையான அளவுக்கு மரங்களை நட முடியும் (Green Belt area), திடக்கழிவு மேலாண்மை செய்ய முடியும் என்கிறது நிறுவனம். ஆனால், அந்த நிறுவனத்திடம் அப்போதும் 172 ஹெக்டேர் நிலம் இல்லை. இப்போதும் அவ்வளவு நிலம் இல்லை. அதாவது பொய் சொல்லி அந்த அனுமதியை வாங்கி இருக்கிறார்கள்" என்கிறார்.

"இரண்டாவது விதிமீறல் புகை போக்கி. நிறுவனம் வளர வளர புகை போக்கியும் வளர வேண்டும். அந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு 40,000 டன் என்பது அதன் உற்பத்தி திறன். அப்போது அதன் புகை போக்கியின் உயரம் 60 மீட்டர். இப்போது அதன் உற்பத்தி திறன் 4 லட்சம் டன். ஆனால், இப்போதும் அதன் புகை போக்கியின் உயரம் அதே 60 மீட்டர்தான் புகை குழாய்."

மூன்றாவது விதிமீறல் என்று அவர் பட்டியலிடுவது கிரீன் பெல்ட்டை. அவர், "மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அபாயகரமான தொழிற்சாலைகள் இருந்தால், அதனை சுற்றி அரை கிலோமீட்டரிலிருந்து, ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பசுமை பகுதி இருக்க வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு அதிலிருந்து விதிவிலக்கு. இதன் பசுமைபகுதி 25 மீட்டர் சுற்றுக்கு இருந்தால் போதும். ஆனால், அந்த 25 மீட்டருக்கு கூட அவர்கள் பசுமை பகுதியை அமைக்கவில்லை இல்லை. சுலபமாக புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், வெவ்வேறு மரங்களை, வெவ்வேறு உயரங்களில் வளர்க்க வேண்டும். தொழிற்சாலை உமிழும் மாசை குறைக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், இதையும் அவர்கள் செய்யவில்லை" என்கிறார்.

நான்காவது விதிமீறல் - சுகாதார ஆய்வு."மீண்டும் ஸ்டெர்லைட் இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தபோது, இந்த தொழிற்சாலை ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுகாதார கண்காணிப்பு ஆய்வு செய்ய வேண்டும் என்றது. ஆனால், இப்போது வரை இதனை செய்யவில்லை. மருத்துவ முகாம் மட்டுமே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சுகாதார ஆய்வு செய்தால் தங்களுக்கு எதிரான தகவல்கள் வரும் என்பதற்காக இதனை செய்யவில்லை"என்கிறார் நித்தியானந்த்.

"நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் படி, அபாயகரமான தொழிற்சாலைகள் அவ்வாறான தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும்தான் அமைக்க வேண்டும். ஆனால், இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடம் மக்கள் பகுதியில்" என்கிறார்.

இந்த விதிமீறல்களை சொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருந்தால் நீதிமன்றத்திலும் அவர்களை சுலபமாக எதிர்கொண்டிருக்க முடியும் என்கிறார்.

வேதாந்தா நிறுவனம் என்ன சொல்கிறது?

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த வேதாந்தா நிறுவனம், ''தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நன்கு படித்தபிறகு, எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்'' என்று தெரிவித்துள்ளது.

''ஆலையை மூட உத்தரவிடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், நாங்கள் 22 ஆண்டுகள் ஆலையை வெளிப்படையாக நடத்தினோம்'' என்றும் வேதாந்தா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: