சேலம்: ஆயிரக்கணக்கான மீன்கள் இறக்க காரணமான சாயப்பட்டறைகள் இடிப்பு

  • 29 மே 2018
சேலம்

சேலத்தில் உள்ள ஏரி ஒன்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாயப்பட்டறைக் கழிவுகள் தண்ணீரில் கலப்பதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சேலம் அருகே நெய்க்காரப்பட்டி பகுதியிலுள்ள கொட்டநத்தான் ஏரி சுமார் 390 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். கொண்டாலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் முக்கிய ஏரியாக இந்த ஏரி உள்ளது.

இந்த ஏரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் நெய்க்காரப்பட்டி ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரையோரத்தில் மிதப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் முழுவதுமாக மாசடைந்து நிறம் மாறி உள்ளது. இது போக, ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மீன்கள் செத்து மிதப்பதற்கு ஏரியின் அருகே உள்ள சாயபட்டறைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதுதான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேலத்தில் சேகரிக்கப்படும் பல்வறு கழிவு பொருட்களை சிலர் கொண்டு வந்து இரவு நேரங்களில் நெய்காரப்பட்டி ஏரியில் கொட்டிச் செல்வதாலும் நீர் மாசடைவதாகவும் கூறப்படுகிறது.

அவ்வப்போது இது போல நடக்கும் சம்பவங்களை தடுக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது. கொண்டலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் சாயப்பட்டறை கழிவுநீர் மற்றும் ஏரியின் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஏரியில் கலப்பதாலும், கோழி இறைச்சி கழிவுகள் இந்த ஏரியில் கொட்டப்படுவதாலும் இந்த ஏரியில் உள்ள மீன்கள் இறப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அவ்வப்போது ஏரியில் மீன்கள் இறப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்றும் அவலம் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கும் பொதுமக்கள் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் பொது பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.

மாசுகட்டுப்பாடு வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் விஸ்வநாதன் இது குறித்து கூறுகையில், பருவநிலை மாறுபாடும் இவ்வாறு மீன்கள் இறக்க காரணமாக இருக்கலாம் என்றார் அதிகப்படியான வெயிலும், அதிகபடியான திடீர் மழையும் வரும்போது, DO எனப்படும் டிஸ்ஸால்வ் ஆக்ஸிஜன் என்னும் நிலையினால் இவ்வாறாக மீன்கள் இறப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு என தெரிவித்தார். ஆனால், மக்களின் குற்றசாட்டின்படி கழிவு நீரை வெளியேற்றிய சாயப்பட்டறைகளும் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்