தூத்துக்குடி கலவரம்: முதல்வர் குற்றச்சாட்டு; சட்டமன்றத்தைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு

ஸ்டாலின் படத்தின் காப்புரிமை ARUN SANKAR

தூத்துக்குடி கலவரத்திற்குக் காரணம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கும் நிலையில், முதல்வர் பதவிவிலகும்வரை சட்டப்பேரவையை புறக்கணிக்கப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், முதல் நாளே மிகப் பரபரப்பானதாக அமைந்தது. தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர தி.மு.க. கோரியபோது, அது ஏற்கப்படவில்லை.

இதற்குப் பின் எஸ்.பி. சண்முகநாதன், டிடிவி தினகரன், தமீமுன் அன்சாரி ஆகியோர் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடி கலவரம் குறித்து ஐந்து பக்க அறிக்கை ஒன்றை முதல்வர் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலவரம் குறித்தும் அதற்குப் பிறகு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் தொடர்பாக டிடிவி தினகரன், சண்முகநாதன், தமீமுன் அன்சாரி ஆகியோர் பேசிய பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டுமென்றும் கூறிவிட்டு வெளிநடப்புச் செய்வதாக அறிவித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யும் வரையிலும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்படும் வரையிலும் அவை நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தார்.

தூத்துக்குடி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கறுப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்திருந்தனர்.

தமீமுன் அன்சாரி, கருணாஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததாக முதல்வர் கூறுகிறார். ஆனால், உளவுத் துறை என்னை உளவு பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறது?" என்று கேள்வியெழுப்பினார்.

படத்தின் காப்புரிமை Facebook/MK Stalin

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக அவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி நீண்ட விளக்கமளித்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீண்ட இந்த விளக்கத்தில் தி.மு.க. மீது முதல்வர் குற்றம் சாட்டினார்.

இந்தப் போராட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவி, காவலர்களை தாக்கியதாகவும் 32 அரசு வாகனங்கள், 2 காவலர் வாகனங்கள் 110 பொது மக்களுக்குச் சொந்தமான வாகனங்கள் ஆகியவை எரிக்கப்பட்டதாக முதல்வர் தெரிவத்தார்.

ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் கடந்த 99 நாட்களாக நடந்தாலும் அதில் வன்முறை ஏதும் வெடிக்கவில்லையென்றும் ஆனால், நூறாவது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது என்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள் இதற்கு முக்கியக் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

ஸ்டெர்லைட் குடியிருப்பிற்குள் கலவரக்காரர்கள் புகுந்து தீ வைத்ததில் 24 கார்களும் 1 இரு சக்கர வாகனமும் கொளுத்தப்பட்டது என்றும் தூத்துக்குடியில் உள்ள சில காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் திரேஸ் புரத்தில் கூடிய கலவரக்காரர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்குள் புக முயன்றதாகவும் முதல்வர் குற்றம் சாட்டிப் பேசினார்.

தனது பேச்சின் இடையில் அவர் பல புகைப்படங்களையும் ஆதாரமாக அவர் காட்டினார்.

இதற்கிடையில், சட்டமன்ற புறக்கணிப்பை அறிவித்திருக்கும் தி.மு.க. நாளை கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடிக்கு வருகை தந்து கலவரம் குறித்து விசாரிக்கப்போவதாக அந்த ஆணையம் தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்