விவசாயிக்கு இழப்பை உண்டாக்கிய 'அணிலின் வால்'

அணில் படத்தின் காப்புரிமை AFP

தெலங்கானா மாநிலத்தின் மக்பூபாப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ரெட்டி எனும் விவசாயிக்குக் கடந்த 3 வருடங்களாக ஒரு அணில் தொல்லை கொடுத்து வருகிறது. அந்த அணில் உண்மையில் இருக்கிறதா அல்லது கற்பனையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

2015-ம் ஆண்டு தனது ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தில், கரும்பு சாகுபடி செய்ய ஆரம்பித்தார். ஒரு நாள் அவரது நிலத்தில் இருந்த 11 கிலோ வாட் மின் கம்பி அறுந்ததால், அவரது பயிர்கள் எரிந்துபோயின. பயிர்களுடன் சொட்டு நீர்ப்பாசனத்திற்கான உபகரணங்களும் எரிந்து போயின.

சம்பவம் பற்றி அறிந்த பிறகு, வருவாய் மற்றும் மின்சாரம் துறையின் அலுவலர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மின்சார கேபிளிள் அறுந்துபோனதால் பயிர் இழப்பு ஏற்பட்டது என அவர்கள் கூறினர்.

மின்சாரத் துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட விவசாயி இழப்பீடு கேட்டபோது, ஒரு அணிலின் வாலினால் மின்சார கேபிள் அறுந்து போனதாக அவர்கள் சொன்னார்கள்.

படத்தின் காப்புரிமை CHEVELLA RAJESH
Image caption வெங்கடேஸ்வர ரெட்டி

''ஒரு அணில் 11 கிலோ வாட் மின்சாரக் கம்பி மீது ஏறியது. அதன் வால் 11 கிலோ வாட் கம்பி மீது உரசியதால், கம்பி வெடித்தது. இதனால் கரும்பு சாகுபடி எரிந்தது'' என அதிகாரிகள் கூறியதை கேட்டு அந்த விவசாயி அதிர்ச்சியடைந்தார்.

தை எப்படி நம்புவது?

மூன்று ஆண்டுகளாக மின்சார துறையில் கோரிக்கை வைத்தபோதிலும், எந்த பலனும் இல்லை என்றும், தனக்கு அதே பதிலே கிடைப்பதாகவும் வெங்கடேஸ்வர ரெட்டி கூறுகிறார்.

'' இழப்பீட்டுக்காக மின்சாரத்துறை அதிகாரிகளைப் பல முறை சந்தித்துவிட்டேன். அணிலின் வால் காரணமாகவே பயிர் எரிந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். எனது கோரிக்கையை அவர்கள் கருத்தில் கூட கொள்ளவில்லை'' என பிபிசியிடம் தொலைப்பேசியில் பேசிய வெங்கடேஸ்வர ரெட்டி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை CHEVELLA RAJESH

''ஒர் உயர் அழுத்தக் கம்பி அணிலின் வாலினால் அறுந்தது என கூறுவதை எப்படி நம்புவது?'' என அவர் கேட்கிறார்.

''மின்சாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், நான் ஆறு லட்ச ரூபாயை இழந்துவிட்டேன். சாகுபடி அழிந்துவிட்டதால், வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் எனது நிலத்தை பறித்துக்கொண்டனர். எனக்கு அரசு உதவ வேண்டும்'' என்கிறார் அவர்.

''அணிலின் வால் பட்டதால் ஏற்பட்ட மின் கோளாறின் காரணமாக, பயிர்கள் எரிந்தன'' என்கிறார் மின்சாரத் துறையில் கூடுதல் மண்டல பொறியாளர் நவீன் குமார்.

படத்தின் காப்புரிமை CHEVELLA RAJESH

'' அணிலின் வால் வயரில் பட்டதால் மின் கோளாறு (ஷாட் சட்க்யூட்) ஏற்பட்டது. அங்கு இறந்துபோன அணிலையும் நாங்கள் கண்டெடுத்தோம். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் அறிக்கையைக் கொடுத்தோம். '' என்கிறார் அவர்.

பிபிசியிடம் பேசிய தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு மின்சாரத்துறை அதிகாரி, '' 11 கிலோ வாட் வயர், அணிலின் வாலினால் அறுந்துபோவது சாத்தியமற்றது என்கிறார்.

படத்தின் காப்புரிமை CHEVELLA RAJESH

''மின்சாரத்துறை அமைத்த வயரின் காரணமாகவே, பயிர் எரிந்தது. எனவே அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். பயிருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மின்சாரத் துறையில் எந்த விதிகளும் இல்லை என்றாலும், இது போன்ற அரிய சம்பவங்களுக்கு மின்சாரத் துறை பொறுப்பேற்க வேண்டும்'' என்கிறார் அவர்.

பல விவசாயிகள், எந்தவொரு நன்மையும் எதிர்பார்க்காமல் தங்கள் விவசாய நிலங்களில் மின் கம்பிகளை அமைக்க அனுமதிக்கின்றனர். இந்நிலையில், இதுபோன்ற அரிய சம்பவங்களில் மின்சாரத்துறை பொறுப்பேற்காதா? எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்