கேள்விக்குறியானது எங்கள் எதிர்காலம்: ஸ்டெர்லைட் ஊழியர்கள் கவலை

தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட நேற்று அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்துரி முன்னிலையில் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.இதனால் ஆலையில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனை பதிவு செய்ய ஆலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் பேசியது பிபிசி தமிழ்.

"நாங்க எல்லாம் ரொம்ப வருஷமா காண்ட்ராக்ட்ல வேல செஞ்சுகிட்டு இருந்தோம். பொருளாதர ரீதியா எங்க குடும்பங்களுக்கு பயங்கர நஷ்டம். நான் மெக்கானிக். இங்க இல்லாட்டாலும் வேற எங்கையாவது போய் வேலை செஞ்சுருவேன். ஆனா எங்க கம்பெனில வேலை செய்யுறவங்க பல பேருக்கு என்ன செய்யுறதுன்னு தெரியாத நிலை தான். ஆலை மறுபடியும் திறப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியாம ரொம்ப கஷ்டத்ததுல இருக்கோம். இப்போ சும்மா வீட்டுலதான் இருக்கோம். ஆலையில வேலை செய்யுற ஆப்ரேட்டர், டிரைவர்னு எல்லாத்துக்கும் ரொம்ப பாதிப்பு தான். இந்த ஆலைய மூடுறதுனால நிச்சயம் தூத்துகுடி மாவட்டத்திற்கே வர்த்தக ரீதியா ரொம்ப பாதிப்புதான். போராட்டக்காரங்க ஸ்டெர்லைட் ஆலைய மூடனும்னு வெளிப்படையா போராடுறாங்க. ஆனா நாங்க ஆலைய திறங்கன்னு வெளிப்படையா போராட முடியாது. இனிமேல் வேதாந்தா குழு கையிலதான் இருக்கு" என ஒப்பந்த ஊழியர் மாடசாமி கூறினார்.

"இத மூடுனதுனால எல்லோரும் வேலை இல்லாம சும்மாதான் இருக்காங்க. அடுத்த என்ன என்னனு கேட்டுகிட்டே இருக்காங்க. ரொம்ப மன உளைச்சல்லதான் இருக்காங்க. எங்ககிட்ட மட்டும் 850 ஒப்பந்த ஊழியர்கள் மாத சம்பளத்துக்கு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரது வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது" என ஒப்பந்த ஊழியர்களின் முகவர் முகமது கூறினார்.

"இந்த ஆலையை மூடுனதால அடுத்து என்ன செய்ய போறோம்னு சொல்லுறதுக்கே இல்ல. எங்க எதிர்காலம் கேள்விக் குறிதான்", என ஒப்பந்த ஊழியர் செல்வராஜ் கூறினார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைVEDANTA

ஸ்டைர்லைட் மூலமா கிட்டத்தட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவங்க வேலைவாய்ப்பு கெடச்சு பயனடஞ்சு வந்தாங்க. இப்புடி ஆலைய மூடினா நாங்க எங்க போறது? எங்களுக்கு என்ன செய்யுறதுன்னே தெரியாம முழிச்சுகிட்டு இருக்கோம். இதே மாதிரி 2013 ல் மூடினப்ப தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. நீங்க வேனும்னா பாருங்க இன்னும் மூணு மாசத்துல தூத்துக்குடி மக்களே ஆலைய திறக்க சொல்லுவாங்க பாருங்க", என ஸ்டெர்லைட்டில் பணிபுரியும் தற்காலிக ஊழியரின் தாய் தனம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்