கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தலித் இளைஞர்கள் கொலையா?

  • 30 மே 2018

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்திக்கு அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் நடந்த தாக்குதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கச்சநத்தம் கிராமத்தில் 28ஆம் தேதியன்று இரவில் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் சண்முகம், ஆறுமுகம் என்ற இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர்.

கச்சநத்தம் கிராமத்திற்குச் சென்று கள ஆய்வில் ஈடுபட்ட எவிடன்ஸ் அமைப்பின் கதிரிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, "கடந்த 26ஆம் தேதியன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தெய்வேந்திரன், பிரபாகரன் ஆகியோர் ஊர்க் கோவிலுக்கு அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகன்கள் இருவர் அதனை எதிர்த்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறை அடுத்து, தாழ்த்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் சந்திரகுமாரை அழைத்து விசாரித்திருக்கிறார். இதையடுத்தே, அந்த சகோதரர்கள் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். சண்முகநாதன் என்பவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது, அவரும் உயிரிழந்தார்.

"இரண்டு தலித் இளைஞர்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள் என்பதற்காக கொலை நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகமான அளவில் ஜாதிப் பூசல்களும் ஜாதி தொடர்பான கொலைகளும் நடைபெறக்கூடிய மாவட்டமாக சிவகங்கை இருக்கிறது. ஆகவே இந்த மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சிறப்பு காவல்துறை பிரிவை அமைக்க வேண்டும் என்கிறார் கதிர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாயும் தமிழக அரசு இழப்பீடாக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்