காலா ரஜினி போராடினால் சரி; தூத்துக்குடி மக்கள் போராடினால் தவறா?

"காலா ரஜினி சொன்னதைதான் தூத்துக்குடி மக்கள் செய்தார்கள்" படத்தின் காப்புரிமை Getty Images

எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் வெடித்தது, காவல்துறையினரை தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக இன்று அங்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசும்போது, "கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடந்த தாக்குதல்கள், குடியிருப்புகளை எரித்தது நிச்சயமாக சாமானிய மக்கள் அல்ல. விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இதில் நுழைந்திருக்கிறார்கள் அவர்களது வேலைதான் இது'"  என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு சென்னை வந்த ரஜினி, செய்தியாளர்களிடம் பேசியபோது, "எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்" என்று கோபத்துடன் கூறிவிட்டுச் சென்றார். 

ரஜினிகாந்தின் இன்றைய கருத்துகள் அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

"மக்கள் வேறு வேலையில்லாமல் போராடவில்லை"

ரஜினியின் கருத்துக் குறித்துப் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், "அந்த மக்கள் 100 நாட்கள் போராடியபோது நடிகர் ரஜினி அங்கு சென்று பார்க்கவில்லை. அந்த மக்கள் தீரமாகப் போராடி படுகொலைக்கு ஆளாகியிருக்கும்போது, என் முகத்தைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றெல்லாம் அவர் பேசியது அறிவுக்குப் பொருந்தாதது. ரஜினிகாந்த், உரிமைகளுக்கு எதிரானவர்; உரிமைப் போராட்டங்களுக்கு எதிரானவர். அதிகாரவர்க்கத்தின் கையாள். எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்பது முட்டாள்தனமாக கருத்து."

படத்தின் காப்புரிமை facebook/spudayakumaran

மேலும்,"மக்கள் வேறுவேலையில்லாமல் போராடவில்லை. அவர்கள் வருங்காலம் கேள்விக்குள்ளாகும்போது என்று அவர்கள் போராடுகிறார்கள். அப்படிப் போராடுவதன் மூலம்தான் மக்கள் வாழ முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் ரஜினி என்ன சொல்ல வருகிறார். ரஜினி முழுக்க முழுக்க மக்கள் விரோதமான நபர். தமிழ்நாடு சுடுகாடானால் பரவாயில்லை. அம்மாதிரி சூழல் வரும்போது நாங்கள் மாநிலத்தை காப்பாற்றிக்கொள்வோம். அவர் வெளியேறிவிடட்டும்." என்று தெரிவித்தார்.  

அவமானப்படுத்துவதாக இருக்கிறது

ரஜினியின் பேச்சு பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார். "தூத்துக்குடிக்கு அவர் நேரடியாகச் சென்று பார்த்தால் அவருக்கு ஒரு தெளிவு ஏற்படுமெனக் கருதினேன். ஆனால், இந்தப் பிரச்சனையில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த அவர் அங்கு சென்றதுபோல தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் விதிமீறல் இருப்பதால்தான் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணையில் இறங்கியுள்ளது.

ரஜினி தொழில் வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார். தொழில் வளர்ச்சியை எல்லோரும் வரவேற்கிறார்கள். ஆனால், பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் வேறு காரணங்களால் மூடப்பட்டபோது ரஜினி எங்கே போனார்?  எல்லாத் தொழிற்சாலைகளையும் மக்கள் எதிர்க்கவில்லை. ஸ்டெர்லைட்டைவிட பெரிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. யாரும் எதிர்க்கவில்லை.  ரஜினியைப் போன்ற ஒருவர், மக்கள் பிரச்சனையை புரியாத ஒருவர், கண்மூடித்தனமாக காவல்துறையை ஆதரிக்கும் ஒருவர் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாடு சுடுகாடாகும். மிக மிக ஆபத்தான ஒருவராக ரஜினி இருக்கிறார் என்பதற்கு அவருடைய இன்றைய பேட்டி சான்று." என்கிறார் ரவிக்குமார்.

அரசியல்மயப்படுவதை விரும்பவில்லை

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், "ரஜினி இப்படி பேசியதில் எந்த வியப்பும் இல்லை. இவ்வாறாக பேசாவிட்டால்தான் வியப்பாக இருக்கும்" என்கிறார்.

"எதிர் அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார் ரஜினி . அதாவது, மக்கள் யாரும் அரசியல்மயப்படுவதை அவர் எதிர்க்கிறார் என்பதுமட்டுமல்ல அவரே அரசியல்மயப்படவில்லை; அதனையும் அவர் விரும்பவில்லை" என்கிறார் அ.மார்க்ஸ்.

மேலும், “அரசின் வார்த்தைகளை அவர் அப்படியே பேசிவிட்டு சென்று இருக்கிறார். எந்தப் பகுதியில் பிரச்சனையோ, அந்த பகுதி மக்கள்தான் போராட வேண்டும் என்று குறுக்க முடியாது. குறிப்பாக சூழலியல் சார்ந்த பிரச்சனைகளில். கல்பாக்கத்தில் ஏதேனும் விபத்தென்றால் சென்னை பாதிப்படையும். கல்பாக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் சென்னை மக்கள் பங்குகொள்ளத்தான் செய்வார்கள். இது அனைத்து போராட்டங்களுக்கும் பொருந்தும். இவ்வாறாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடுவதை அரசு விரும்புவதில்லை. அரசின் விருப்பத்தைதான் வேறு வார்த்தைகளில் ரஜினி வெளிப்படுத்துகிறார்" என்கிறார் மார்க்ஸ்.

இதயத்திலிருந்து பேசியிருக்கிறார்

ரஜினி எந்தப் பின்னணியில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லையென்கிறார் ரஜினி குறித்து புத்தகம் எழுதியவரும் எழுத்தாளருமான ராம்கி. "ஸ்டெர்லைட் போராட்டம் நியாயமான விஷயம்தான்; 99 நாள் நன்றாக நடந்தது என தெளிவாக சொல்லியிருக்கிறார். எல்லோ விஷயங்களுக்கும் போராடினால் தொழில்வளம் பாதிக்கப்படும் என்கிறார். இதில் என்ன தவறு?" என்று கேள்வி எழுப்புகிறார் ராம்கி.

"காலா பட வெளியீட்டையும் இதையும் இணைத்துப் பேசுகிறார்கள். ஒரு படம் வெளியாகும்போது இப்படிச் செய்ய ரஜினிக்கு எந்த அவசியமும் இல்லை. அவர் இதயத்திலிருந்து பேசியிருக்கிறார். இதை யாரும் புரிந்துகொள்ளவில்லை" என்கிறார் ராம்கி. 

நிலம் நீர் உரிமை போராடுவோம்

"நிலம் நீர் உரிமை போராடுவோம். நிலம் தான் வாழ்வாதாரம் என்கிறார் காலா ரஜினிகாந்த். அதைதானே மக்கள் செய்கிறார்கள். தங்கள் நிலத்திற்காக, நீர் மாசுக்கு எதிராக போராடும் மக்களை பார்த்து 'தொடர்ந்து போராடினால் நாடு சுடுகாடு' ஆகும் என்று சொல்வது வன்மம் அன்று வேறில்லை" என்கிறார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி.

"மருத்துவமனையில் சந்தோஷ் என்ற இளைஞர் 'நீங்கள் யார்? இத்தனை நாட்கள் போராடினோமே ஏன் வரவில்லை?' என்று கேள்வி எழுப்பி உள்ளார். என் கேள்வியும் அதுதான், நூறுநாட்களாக மக்கள் போராடி இருக்கிறார்கள். உண்மையான அக்கறை இருந்தால் அப்போதே சென்று இருக்கலாமே, இவர் சொல்லும் சமூக விரோதிகளிடமிருந்து மீட்டு இருக்கலாமே? இப்போது சென்று அரசின் வார்த்தைகளை அப்படியே எதிரொலிப்பது எப்படி நியாயமாகும்?" என்று கேட்கும் ஜோதிமணி, "மக்கள் அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடவில்லை. தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது மட்டும்தான் வீதிக்கு வருகிறார்கள் என்கிறார்.

தவறான புரிதல்

படத்தின் காப்புரிமை Kaala

பிரச்சனைகளைப் பற்றிய ரஜினிகாந்தின் புரிதல்கள் தவறாக இருக்கின்றன என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ராமசுப்பிரமணியன். "அரசியலுக்கு வர விரும்பும் ரஜினி இதுபோல தொடர்ச்சியாக தவறான கருத்துக்களைத் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய பேச்சு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது. எந்தெந்த போராட்டங்கள் தமிழகத்தை சுடுகாடாக மாற்றும், எது மாற்றாது என்பதை அவர் சொல்ல வேண்டும். 

கெயில், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், நீட், கூடங்குளம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். இதில் எந்தப் போராட்டம் தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். அரசியலுக்கு வர விரும்பும் அவர் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்" என்கிறார் ராமசுப்பிரமணியன்.

பாலைவனம் ஆகும்

போராடினால் சுடுகாடு ஆகும் என்கிறார் ரஜினி. ஆனால், போராடாவிட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்பதுதான் இன்றைய நிலை என்பது பூவுலகு சுந்தராஜனின் கருத்து.

படத்தின் காப்புரிமை facebook/Sundarrajan

"மீத்தேன், ஹைட்ரோகார்பன், பெட்ரோலிய மண்டலம், நியூட்ரினோ என்று தமிழக வளங்களை சூறையாடும், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை முன்மொழிந்து கொண்டிருக்கிறது அரசு. இதனை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடத்தான் செய்வார்கள். அவர்களை போராட வேண்டாம் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்? " என்று கேள்வி எழுப்புகிறார் சுந்தராஜன்.

"உலகெங்கும் சமூகம் முன் நகர்ந்து இருப்பது போராட்டங்களால் மட்டுமேதான்." என்கிறார் பூவுலகு சுந்தராஜன்.

ஆக்கபூர்வமாக செயல்படுவோம்

ரஜினியின் கருத்தை தான் முழுமையாக ஆதரிப்பதாக கூறுகிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன்.

படத்தின் காப்புரிமை Facebook

"பாரதிய ஜனதா கட்சி மற்றும் மோதியை எதிர்ப்பது என்பது வேறு. தேசிய ஒருமைப்பாட்டை எதிர்ப்பது என்பது வேறு. அரசுக்கு எதிராக இருக்கும் இளைஞர்களை சிலர் தேசத்திற்கு எதிராக திசை திருப்பும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். அதைதான் ரஜினி மறைமுகமாக குறிப்பிடுகிறார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தமிழருவி மணியன்.

போரட்டம் தொடர்பான ரஜினியின் கருத்தையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று சொல்லும் தமிழருவி மணியன், "அண்மையில் அபுதாபி சென்று இருந்தேன். அங்கு இருந்த இளைஞர்களிடம், 'நீங்கள் எல்லாம் நன்கு பொருளீட்டிவிட்டு தமிழகம் வருவீர்களா?' என்று கேட்டதற்கு, அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், 'மாட்டோம்.. அங்கு எப்போதுமே போராட்டமாக இருக்கிறது. நெகட்டிவ் எனர்ஜியாக இருக்கிறது' என்றார்கள். இப்படி ஒரு தோற்றம் இருப்பது நல்லதல்ல." என்கிறார்

ஆக்கபூர்வமான முறையில் நம் கோரிக்கைகளை எடுத்து செல்ல வேண்டும். கிராம சபாவில் தீர்மானங்களை நிறைவேற்றலாம். சட்ட ரீதியாக போராடலாம். இதைதான் ரஜினி வலியுறுத்துகிறார் என்று விவரிக்கிறார் தமிழருவி மணியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்