அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கான #நான்தான்பாரஜினிகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்த், அங்கிருந்த காயம்பட்ட ஒருவரிடம் கூறிய "நான்தான்பா ரஜினிகாந்த்" என்ற வார்த்தைகள் புதன்கிழமை மாலை முதல் அகில இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று (புதன்கிழமை) நேரில் சென்றிருந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களிடம் ரஜினி விசாரிக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

அதில் சந்தோஷ் என்ற இளைஞரிடம் ரஜினி உடல்நலம் குறித்து விசாரிக்க ஆரம்பிக்க, அவர் ரஜினியைப் பார்த்து, "யார் நீங்க?" என்று கேட்கிறார். அதற்கு ரஜினி, "நான்தான்பா ரஜினிகாந்த்" என்கிறார். "ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் கேட்டவுடன் "நான் சென்னையிலிருந்து வருகிறேன்" என்கிறார் ரஜினி. அதற்கு, சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா என அந்த இளைஞர் கேட்க, ரஜினி அந்த இடத்தைவிட்டு செல்வதுபோல அந்த வீடியோவில் இருந்தது.

இதற்கிடையில், சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது "எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்" என்று கோபத்துடன் பதிலளித்தார்.

இதையடுத்து பல அரசியல் தலைவர்கள் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் ரஜினியின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் எழுப்பப்பட்டது. அவரது அந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியானதும் மாலையில் #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹாஷ்டாகுடன் ட்விட்டரில் கருத்துக்களைப் பதிவுசெய்ய ஆரம்பித்தனர்.

இந்த ஹாஷ்டாக் சில மணி நேரங்களிலேயே அகில இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் இந்த ஹாஷ்டாகுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பெரும் கேலியுடனும், கடும் விமர்சனத்துடனும் ரஜினியின் தூத்துக்குடி பயணம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: