மல்லையாவுக்கு கடன் கொடுக்க சொன்னது யார்? - கேள்வி எழுப்பும் வங்கி ஊழியர்

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்.

நாடு முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் எந்தவித அக்கறையும் காட்டாத மத்திய அரசைக் கண்டித்தும், 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்ற இந்திய வங்கிகள் நிர்வாகத்தின் நிலையைக் கண்டித்தும் அகில இந்திய அளவில் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து போராடி வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

வங்கி ஊழியர்களுக்கு அதிக சம்பளம். ஏன் மேலும் மேலும் ஊதியம் உயர்வுக்காக போராடுகிறார்கள் என்ற பொது கருத்து இங்கு நிலவுகிறது.

ஏன் நாங்கள் ஊதிய உயர்வுக்காக போராடுகிறோம் என்று வங்கி அதிகாரி வசுமதி பிபிசியிடம் பேசினார்.

ஜன் தன் யோஜனா முதல் பணமதிப்பழிப்பு வரை

"உண்மையில் இப்போது எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பணிகளையும், எங்கள் ஊதியத்தையும் ஒப்பிட்டுபார்த்தால் இரண்டிற்கும் உள்ள முரண் தெளிவாக தெரியும். மத்திய அரசு தனது அனைத்து திட்டங்களையும், சேவையையும் வங்கிகள் மூலமாகதான் செயல்படுத்துகிறது. முத்ரா, ஜன் தன் யோஜனா திட்டம் எல்லாம் வங்கிகள் சம்பந்தப்பட்ட திட்டம். இதையெல்லாம் விடுங்கள பணமதிப்பிழப்பு திட்டத்தின் போது வங்கி ஊழியர்கள் பகல் இரவாக எப்படி பணியாற்றினார்கள்; அதுவும், குறிப்பாக பெண் ஊழியர்கள் எவ்வாறெல்லாம் சிரமத்திற்கு உள்ளானார்கள் என்று அனைவருக்கும் தெரியும். நாங்கள் ஏதோ சிறப்பு சலுகை கேட்கவில்லை. எங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைதான் கேட்கிறோம். இதை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறினார் வசுமதி.

பட மூலாதாரம், Getty Images

மேலும் அவர், "நாங்கள் ஒப்பிட்டு பேசுவதாக கருத வேண்டாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய குழு அமைத்து சரியான நேரத்தில் சம்பள உயர்வு அளிக்கிறார்கள்தானே? ஏன் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இந்த பாராபட்சம். 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு என்பது எங்களை அவமானப்படுத்தும் செயலன்றி வேறல்ல." என்கிறார்.

யாரால் நஷ்டம்?

"சம்பள உயர்வை பற்றி பேசினால், வங்கிகள் லாபத்தில் செல்லவில்லை என்கிறார்கள். ஆனால், வங்கிகளை தேசியமயமாக்கிய போது என்னவாக அதன் குறிகோள் இருந்தது? நிச்சயம் லாபம் என்பது அதன் லட்சியம் அல்ல... கடைக்கோடி மனிதனின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்த வேண்டும், விவசாய கடன் தர வேண்டும், தொழில் கடன் தர வேண்டும் என்று சாமானிய மனிதனின் நலன் மட்டும்தான் அதன் லட்சியம். ஆனால் இப்போது வங்கிகள் யாருடைய நலனுக்கு செயல்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்." என்று கூறியவர் அது குறித்து விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images

"பெரும் முதலாளிகள் நலன் மட்டும்தான் அரசின் நோக்கமாக இருக்கிறது. ஆனால். சாமனிய மனிதன் கடன் பெற்றால், அந்த கடனை அடைக்க வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். அவ்வாறான எந்த அறமும் பெரும் நிறுவனங்களிடம் இல்லை. சரி... இந்த பெரும் நிறுவனங்களுக்கு எல்லாம் யார் சொல்லி கடன் கொடுத்தோம்? மல்லையாக்களுக்கெல்லாம் யார் சொல்லி கடன் கொடுத்தோம்?அரசு சொல்லித்தானே. ஆனால், இதில் முழு சுமையையும் சுமப்பது யார்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

எங்களை மட்டும் ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?

சம்பள உயர்வு வேண்டும் என்று வீதிக்கு வருபவர்கள் ஏன் வாராகடன், கடனை போக்கெழுதும் போதெல்லாம் வீதிக்கு வருவதில்லை? என்ற குரலும் இங்கு ஓங்கி ஒலிக்கிறது.

அது குறித்து வசுமதி, "இதில் வங்கி ஊழியர்களை மட்டும் குற்றஞ்சாட்டுவது நியாயமல்ல. நாங்கள் எங்களால் இயன்ற வரை போராடி இருக்கிறோம். இதற்காக வேலை நிறுத்தங்களையும் கடந்த காலங்களில் முன்னெடுத்து இருக்கிறோம். ஆனால், அனைவரும் வீதிக்கு வந்தால்தான் வங்கிகளை காக்க முடியும். நான் ஏதோ குற்றஞ்சாட்டுவதாக நினைக்க வேண்டாம்... இதற்காக எப்போது மக்கள் வீதிக்கு வந்து போராடி இருக்கிறார்கள். மக்கள் வீதி வராத போது எங்களை மட்டும் குற்றஞ்சாட்டுவது நியாயம்? நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டிய போராட்டம் இது." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: