அனிதாவும், பிரதீபாவும்: நீட் மரணங்கள் எதனால்?

பிரதீபா- அனிதா
Image caption பிரதீபா- அனிதா

கடந்த ஆண்டு அனிதா.. இந்த ஆண்டு பிரதீபா என நீட் தேர்வினால் இரண்டு மாணவிகளைத் தமிழகம் இழந்திருக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக தமிழக மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன?

2018-ம் ஆண்டின் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதிய 1,14,602 தமிழக மாணவ- மாணவிகளில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், குறைவான மதிப்பெண்கள் பெற்றதால், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரவலூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான பிரதீபா நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரதீபாவின் அப்பா கொத்தனாராக வேலை செய்கிறார். அம்மா கூலி வேலை பார்க்கிறார். இந்த சமூகநிலையிலும், 10-ம் வகுப்பில் 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பிரதீபா பெற்றிருந்தார்.

Image caption பிரதீபாவின் வீடு

ஒரு மருத்துவராக வேண்டும் என்பது பிரதீபாவின் கனவாக இருந்தது. இதற்காகக் கடந்த வருடம்(2017-18) நீட் தேர்வு எழுதிய அவர், 155 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இடம் கிடைத்தது. போதிய பணம் இல்லாததால் அவரால் கல்லூரியில் சேரமுடியவில்லை. விடா முயற்சியாக இந்த வருடமும் நிட் தேர்வு எழுதிய பிரதிபா, 39 மதிப்பெண்களைப் பெற்றார். இதனால், மனமுடைந்த பிரதிபா தற்கொலை செய்துகொண்டார்.

"எல்லாவற்றையும் விட உயிரே முக்கியம்"

மாணவிகளின் தொடர் தற்கொலைக்கான காரணங்களை விளக்கிய மனநல மருத்துவர் ஷாலினி,'' நமது சமூகத்தில் காலம் காலமாக எந்த அதிகாரமும் அற்றவர்களாகப் பெண்கள் இருந்தார்கள். கல்வி மட்டுமே பெண்களை அதிகாரத்திற்கு உயர்த்தும் கருவியாக இருக்கிறது. அந்த உயர்ந்த கல்வியும் கைவிட்டு போகும் போது பெண்கள் எளிதில் உடைந்துபோகிறார்கள்'' என்றார்.

வழக்கமாக பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என கூறும் ஷாலினி,'' தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? மானம் போய்விட்டதே என எண்ணி உயிரை துச்சமாக நினைக்கிறார்கள்'' என்கிறார்.

''வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட உயிரே முக்கியம் என்ற கருத்தினை பெண் குழந்தைகளுக்கு தினமும் சொல்லிக்கொடுக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

பதின் பருவத்தில் உடல் மாற்றம், சமூக மாற்றம், படிப்பு என பல சிரமங்களை பெண் குழந்தைகள் எதிர்க்கொள்கின்றனர் என்றும் கூறும் அவர், இப்பருவத்தில் அதிகளவில் எதிர்மறை எண்ணங்கள் பெண்கள் மத்தியில் இருக்கும் என்பதால் அவர்கள் ஆழ்ந்து சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

Image caption ஷாலினி

'' நீட் தேர்வு, பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளதாக, என்னிடம் ஆலோசனைக்கு வந்த நிறைய மாணவ- மாணவிகள் கூறினார்கள். அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றார் போல கல்வி முறை இருக்க வேண்டுமே தவிர, எல்லோருக்கும் சமமான கல்வி என கூறி வேறு கல்வி முறையை அவர்கள் மீது திணிப்பது மன உளைச்சலுக்கே வழிவகுக்கும்'' என தன் கருத்தை முன் வைத்தார் ஷாலினி.

"கல்வியிலும், பயிற்சியிலும் சமன்பாட்டை ஏற்படுத்தாமல் நீட் தேர்வு மூலம் சமூகத்தில் செயற்கை சமன்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்" என ஷாலினி குற்றஞ்சாட்டுகிறார்.

"ஒரு தோல்வியை சந்திக்கும்போது மனது படபடப்பது இயல்பானதே ஆனால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது இயல்பானது அல்ல என கூறும் அவர், மனமே உயிரை காப்பாற்றும் கருவி என்பதால் தோல்வி ஏற்படும்போது மனதை ஆறப்போட மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்" என்கிறார்.

''மனதை பக்குவப்படுத்த கற்றுக்கொடுப்பது ஒரே நாளில் நடப்பது அல்ல. தினந்தோறும் வீட்டிலும், பள்ளியிலும், சமூகத்திலும் இதனை கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்கிறார் ஷாலினி.

Image caption அனிதாவின் தந்தை மற்றும் பாட்டி

''கடுமையாய் உழைத்து படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 90க்கு மேல் மதிப்பெண் எடுத்த அனிதாவும், பிரதீபாவும் தற்கொலை செய்துகொண்டதற்கு ஒரே காரணம் நீட் தவிர வேறு ஒன்றும் இல்லை.'' என்கிறார் சமூக செயற்பாட்டாளரான கீதா நாராயணன்.

''மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதாவுக்கும், கூலி தொழிலாளியின் மகளான பிரதீபாவுக்கும் படிப்புதான் மரியாதை. தவித்து நின்ற தங்களது குடும்பத்தை உயர்த்தும் ஒரே வாய்ப்பாகக் கல்வியை இவர்கள் இருவரும் கருதினார்கள். நன்றாக படித்தபோதிலும் கல்வி மறுக்கப்பட்டதால் இம்முடிவுக்குச் சென்றுள்ளனர்.'' என்கிறார் அவர்.

மருத்துவ தாய் தந்தைக்குப் பிறந்து சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்தனாவும், பிரதீபாவும் ஒன்றா? பிறகு ஏன் இவர்களுக்கு ஒரே முறையில் தேர்வு வைக்கிறார்கள்? என கேள்வி எழுப்புகிறார் கீதா.

படத்தின் காப்புரிமை GEETHA NARAYANAN/FACEBOOK
Image caption கீதா நாராயணன்

''நீட் தேர்வில் தோல்வியடைந்த பிரதீபாவும், மருத்துவ வாய்ப்பு கிடைக்காத அனிதாவும் திறமை இல்லாத பெண்கள் என கூற முடியாமா? முடியாது. இருவரும் நல்ல திறமையாக படித்த மாணவிகள். ஆனாலும், இவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு கிடைக்காததற்கு சமமான கல்வி முறை இல்லாததும், சமூக காரணங்களும் முக்கிய காரணிகளாக உள்ளன''

ஒரு பணக்கார மாணவி, நீட் தேர்விலோ மற்ற நுழைவு தேர்விலோ தோல்வியை சந்தித்தால், தற்கொலை செய்துக்கொள்ள மாட்டார். ஏனெனில், வேறு படிப்பு படித்து ஒரு மருத்துவமனையையே நிர்வகிக்கும் பொறுப்புக்கு அவரால் வர முடியும். ஆனால், அனிதாவுக்கும், பிரதிபாவுக்கும் படிப்பை விட்டால் வேறு வழியே இல்லை எனக்கூறும் கீதா, தற்கொலை மட்டுமே அனைத்துக்கும் தீர்வு அல்ல என்கிறார்.

மருத்துவம் இல்லை என்றாலும், வேறு படிப்புகள் படிக்கலாம் என்ற மனநிலையை ஏழை மாணவிகளுக்கு பொற்றோர்களும், ஆசிரியர்களும் ஏற்படுத்த வேண்டும் என்கிறார் கீதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: