நாளிதழ்களில் இன்று: "எத்தனை எதிர்ப்பு வந்தாலும் 'நீட்' தொடரும்": பா.ஜ.க

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தொடரும்: பா.ஜ.க

எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், நீட் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக, மாணவி பிரதீபா மரணம் அடைந்தது மிகுந்த மனவேதனை அளிப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் சுயநல அரசியலுக்காக நீட் தேர்வை காரணம் காட்டி பொய் பிரசாரத்தை சில கட்சிகள் செய்து வருவதாக கூறினார்.

தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத்திலும் நீட் தேர்வை வேண்டாம் என்கின்றனர். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை திணிப்பது போல சொல்வது தவறு.

எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக மேலும் விவரிக்கிறது இந்த செய்தி.

நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்கள் 1,337 பேர் மட்டுமே தேர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 1,337 மாணவ மாணவிகள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 45,336 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக சிபிஎஸ்இ அறிவித்தது.

தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 39.6ஆக உள்ள நிலையில், இதில் அரசு பள்ளி மாணவர்கள் 2.94 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று இந்நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

பெட்ரோல் - டீசல் மீதான வரி குறைக்க ஆலோசனை : ஓ.பி.எஸ்

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோல் - டீசல் மீதான வரியை தமிழகத்திலும் குறைக்க சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நடந்த கேள்வி நேரத்திற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், கேரளத்தில் சில்லறை விலையைவிட, சென்னையில் பெட்ரோல், டீசலுக்கான சில்லறை விலை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி, தமிழகத்தைவிட கூடுதலாகவே உள்ளது.

மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் மாநில அரசு சந்தித்துவரும் வருவாய் பற்றாக்குறையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது குறித்து, முதல்வரிடம் ஆலோசனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்று கூறியதாக இச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: