வாதம் விவாதம்: 'நீட் தமிழர்களை ஒடுக்கவே வந்தது'

நீட் தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 2.94 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

கல்வி

பட மூலாதாரம், Getty Images

"அரசு பள்ளி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இது வலியுறுத்துகிறதா? அரசு பள்ளி மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்துவதில் உள்ள தொய்வு நிலையை சுட்டிக்காட்டுகிறதா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"பழைய பாடத்திட்டங்களில் படித்த டாக்டர்கள் சிறந்து விளங்கவில்லையா? நீட் தமிழர்களை ஒடுக்கவே வந்தது என்பது அப்பட்டமானது," என்று ரமேஷ் நாராயண் எனும் பிபிசி தமிழ் நேயர் கூறியுள்ளார்.

பொதிகை வேந்தன் இவ்வாறு கூறுகிறார்: "தமிழக கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. இதுவரை சிறந்த மாணவ மாணவிகள் உருவாகியுள்ளனர். தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்படும் அரசியல் ஆயுதமே நீட் தேர்வு. நீட் தேர்விற்கு தகுதிபடுத்துவதை விட , நீட் தேர்வை தடை செய்வதே நல்லது."

"மருத்துவத்தை வசதியாக்குக்குங்கள் என்றால், இங்கு மருத்துவத்தையே வசதியானவர்களுக்கு என்றாக்கிவிட்டார்கள்.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாகிவிட்டது. சென்ற வருடம் இரண்டு அரசு பள்ளிமாணவர்களுக்கே மருத்துவ இடம் கிடைத்தது. ஆனால், இந்த வருடம் அதுவும் சந்தேகமே," ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அஜித் எனும் நேயர்.

"மற்ற மாநில கல்வி தரத்தை விட தமிழக கல்வி தரம் ஒன்றும் தரம் தாழ்ந்ததல்ல,தமிழக பாடத்திட்டங்களே போதுமானதாக இருக்கின்ற போது நீட் தேர்வுக்கு இங்கு அவசியமே இல்லை," என்கிறார் தேவா அன்பு எனும் பிபிசி தமிழ் நேயர்.

"நான் தனியார் பள்ளியில் படித்தபோது அனுபவமற்ற ஆசிரியர் நடத்தியதால் இயற்பியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசு உதவிபெறும் பள்ளிக்கு மாறியபின் சிந்தனை அளவில் நான் ஐசக் நியூட்டன் ஆனேன். நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன்," என்று தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் அபிஷா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: