சௌதி: பெண்களே இல்லாமல் நடந்த பெண்களுக்கான 'ஃபேஷன் ஷோ'

ஆடையலங்கார அணிவகுப்பில் பெண்களுக்கு பதில் ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? இது கனவோ கற்பனையோ அல்ல, நிஜம்.

செளதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் நடைபெற்ற ஆடையலங்கார அணிவகுப்பில் நவீன ஆடைகள் அணிந்து உலா வரும் பெண்களுக்கு பதிலாக ட்ரோன்கள் அணிவகுத்தன.

ஆனால் ஆடையலங்கார அணிவகுப்பில் கலந்துக் கொள்ளும் பார்வையாளர்களுக்கு வழக்கம்போல் பரவசம் ஏற்படவில்லை, அவர்களிடம் மிகுந்திருந்தது அச்ச உணர்வே.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு துணியை தூக்கியபடி பறந்த டிரோன்கள் பேய்ப்படம் பார்த்த அனுபவத்தை கொடுத்தது. பேய்ப்படங்களில் காலில்லாதா, தலையில்லாமல் பேய் நகர்வதை காண்பிக்க ஆடைகள் மட்டுமே நகர்வதை காட்டுவார்களே, அப்போது அதை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வே அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான அலி நபீல் அக்பர் பிபிசிக்கு அளித்த நேர்காணலில், வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக நடைபெறும் ஆடையலங்கார அணிவகுப்பு இது என்று பெருமையுடன் கூறினார்.

நிகழ்ச்சிக்காக இரண்டு வாரங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டதாக கூறிய அவர், ரமலான் புனித மாதத்திற்கு ஏற்ற ஆடைகளையே இந்த நிகழ்ச்சியில் டிரோன்கள் மூலம் காட்சிப்படுத்தியதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

சமூக ஊடகங்களில் கேலி கிண்டலாக விமர்சிக்கப்படும் இந்த நவீன ஆடையலங்கார அணிவகுப்பு பற்றிய செய்திகள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

மறுபுறத்திலோ, ஆடைகளை அணிந்து நடைபயிலும் உரிமைகூட செளதி அரேபியா பெண்களுக்கு கிடையாது என்று பலரும் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பான பல்வேறு மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கின்றன.

வைலேரி என்பவர், "செளதி அரேபியாவில் பெண்களைவிட ட்ரோன்களுக்கு அதிக உரிமை இருக்கிறது" என்று எழுதியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter

ஜீனா என்பவர், "செளதி அரேபியாவில் நடைபெறும் ஆடையலங்கார அணிவகுப்புக்கு செல்ல விரும்புகிறேன். அங்குதான் மாடல்களே இல்லையே!" என்கிறார்.

ஆடை தொடர்பாக செளதி அரேபிய பெண்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளன. அந்நாட்டு சட்டங்களின்படி பொதுஇடங்களில் பெண்கள் பர்தா அணிவதும், தளர்வான ஆடைகள் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் பெண்கள் சுதந்திரமாக இருப்பதாக கருதப்படும் செளதி அரேபிய நகரங்களில் ஜெட்டா நகரும் ஒன்று.

படத்தின் காப்புரிமை Getty Images

செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் ஆட்சியில், நாட்டில் பல சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை அண்மையில் கொடுக்கப்பட்டதை குறிப்பிட்டு சொல்லலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: