சர்வதேச கால்பந்தில் மாரடோனா அடித்த கடைசி கோல்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக செயலாற்றிய டீகோ மாரடோனா 1986ஆம் ஆண்டு அந்த அணியை உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.

படத்தின் காப்புரிமை DANIEL GARCIA

1990இல் நடந்த கால்பந்து உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்லாவிட்டாலும், இறுதிப்போட்டி வரை சென்றது. இந்தத் தொடரிலும் மமாரடோனாதான் அர்ஜென்டினா அணியின் கேப்டன்.

ஊக்கமருந்து பயன்படுத்தியதால் விளையாட விதிக்கப்பட்ட தடை, காற்றழுத்தத் துப்பாக்கியால் ஊடக நிருபர் ஒருவரைச் சுட்டதால் விதிக்கப்பட்ட, இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிறை தண்டனை ஆகிய அனைத்துக்கும் பிறகு, அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் கலந்துகொண்டார் மாரடோனா.

இந்த முறையும் கேப்டனாகவே தொடரைத் தொடங்கிய மரடோனா முதல் போட்டியில் கிரீஸ் அணிக்கு எதிராக ஒரு கோலை அடித்தார். இடதுகாலில் அவர் உதைக்க, வலையின் மேல்பக்கத்தை உரசிக்கொண்டு உள்ளே விழுந்தது அந்தப் பந்து.

கோல் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய மாரடோனா, கண்களை அகலமாக விரித்துக்கொண்டு, ஆக்ரோஷமாக அங்கிருந்த கேமராவை நோக்கி ஓடிச் சென்று கூச்சலிட்டுக் கொண்டாடினார்.

இந்தக் கொண்டாட்டம் அவரது விளையாட்டு வாழ்க்கையில், சர்வதேசப் போட்டிகளில் அடித்த கடைசி கோலுக்கான கொண்டாட்டம் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் அவரது மன நலம் குறித்த ஐயங்களை உண்டாக்கியது.

அடுத்த போட்டியில் நைஜீரிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினாலும் மரடோனா கோல் எதையும் அடிக்கவில்லை. மாரடோனாவின் 91வது சர்வதேச கால்பந்து போட்டியான அந்தப் போட்டியே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது.

அவர் கொண்டாட்டம் உண்டாக்கிய சந்தேகத்தால், எஃபிட்ரைன் எனும் ஊக்க மருந்துக்காக மாரடோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த சோதனையில் மாரடோனா தோல்வி அடைந்ததால், அவருக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்த முடிவைக் கேட்ட மாரடோனா, "அவர்கள் கால்பந்து விளையாட்டிலிருந்து எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டனர். என் ஆன்மா உடைந்துபோயுள்ளது," என்றார்.

இந்தக் கால்பந்து உலககோப்பைத் தொடரில் அர்ஜென்டினா இரண்டாம் சுற்றிலேயே வெளியேறியது. பிரேசில் இறுதியாட்டத்தில் இத்தாலிக்கு எதிராக வெற்றிபெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்