சென்னை - சேலம் 8 வழிச்சாலை: போராடுபவர்களை ஒடுக்க முயல்வதாக பொதுமக்கள் எதிர்ப்பு

சேலத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பொதுமக்களைத் தூண்டிவருவதாக சிலரை போலீசார் வீடு புகுந்து கைது செய்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா?”

சேலம் முதல் சென்னை வரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசின் நிதியின்கீழ் எட்டு வழிச்சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக 274 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படவுள்ள இந்த சாலைக்காக 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 கிலோமீட்டர் தொலைவு இந்த சாலை அமைய உள்ளதால், இந்த சாலை அமையவுள்ள பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் சாலை அமைப்பதற்கான நிலத்தை அளவை செய்ய வந்த வருவாய்த் துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதம் நடத்தி அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.

இதனையடுத்து இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகதில் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து, போராட்டத்தில் ஈடுபடவுள்ள சிலரது வீடுகளுக்கு சென்று போராட்டக்காரர்கள் சிலரை இன்று அதிகாலை போலீசார் அழைத்துச் சென்றனர்.

Image caption முத்துகுமார்

குப்பனூர் பகுதியில ஐயந்துரை, முத்துகுமார், நாராயணன் ஆகியோர் அம்மாபேட்டை காவல் நிலையத்திலும், பூலாவரி பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் அழைத்துச் சென்றவர்கள் அனைவரும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு காத்திருக்கின்றனர். அதிகாலை அழைத்துச்சென்று விசாரணை முடிந்தவுடன் உடனடியாக அனுப்பிவைப்பதாக கூறினர். ஆனால் பலமணிநேரம் ஆகியும் அவர்களை திருப்பி அனுப்பவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும், தங்களது நிலம் பறிபோவதால் ஏற்பட்ட வேதனையில் அளித்த பேட்டியை கொண்டு போலீசார் மிரட்டி அழைத்துச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில் விவசாய நிலங்களை அழித்து வாழ்வாதரம் அழிப்பதோடு, இயற்கை வளங்களும் அழிந்து போகும்.

இதை தடுக்க முயலும் விவசாயிகளை போலீசார் இவ்வாறாக கைது செய்வதன் மூலம் தங்களை போராட்டம் நடத்த தூண்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனிடையே விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில் முத்துக்குமார் என்பவர் மீது, பொதுமக்களை போராட்டம் நடத்த தூண்டியதுபோல் பேசியதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை விடுவித்தனர். அதேபோல் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர் பியூஸ் மனுஷ் பிபிசி தமிழிடம் கூறும்போது முறைகேடாக நிலங்களை ஆக்கிரமிக்க அரசு முயல்வதாக கூறினர். "இவ்வறான முயற்சினால் கனிம வளங்கள், இயற்கை, விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் அழியும்," என்றார்.

ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு சீரான போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் , பசுமையை அழித்து உருவாக்க முயலும் எட்டு வழிச்சாலை தேவை இல்லை; மேலும், இப்பகுதி இவ்வாறான வழித்தடம் அமைக்க சாத்தியமானதா என பகுத்தறியும் ஆய்வறிக்கை, மற்றும் இவ்வழித்தடம் அமைக்க அரசு முடிவு எடுத்துள்ள பகுதிகளில் வனப்பகுதியும் உள்ளதால், வனத் துறை அனுமதி ஆகியவற்றை அரசு இன்னும் பெறவில்லை," என்கிறார்.

மே 14ஆம் தேதி வரை இவ்வழித்தடம் அமைக்க ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சேபணை மனு அளிக்கலாம் என பத்திரிகை வாயிலாக அரசு தெரிவித்த நிலையில், திடீர் என இவ்வாறாக கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது தவறு என்றும், கண்டிப்பாக சட்டத்திற்குட்பட்ட வழிகளில் போராட்டம் தொடருவோம் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: