தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை சாத்தியமா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

2019ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்தி தூக்கியெறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்தத் தடை சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images

ஜூன் ஐந்தாம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, 2019ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், கொடிகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்துவைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் தமிழகம் முழுவதும் தடைசெய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வராது என்றும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல்தான் இந்தத் தடை அமலுக்கு வருமென்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், இந்தத் தடையை முழுமையாக அமல்படுத்துவதன் சாத்தியம் குறித்தும் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகள் குறித்தும் கவலைகளும் சந்தேகங்களும் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.

பட மூலாதாரம், dipr

"50 மைக்ரான் அளவுக்குக் கீழே பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு ஏற்கனவே இருக்கிறது. ஆனால், யாரும் அதை பின்பற்றுவதில்லை என்பதால்தான் பிரச்சனை" என்கிறார் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். ராக்கப்பன்.

"ஆனால், இந்த ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பொருட்களால்தான் பிளாஸ்டிக் உற்பத்தித் துறையே மிக மோசமான ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் இந்தத் தடையை முழுமையாக செயல்படுத்துவதோடு, குப்பை மேலாண்மையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இன்னமும் இம்மாதிரி பைகள் பயன்படுத்தவே செய்கிறார்கள். ஆனால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதால் பெரிய பிரச்சனை ஏற்படுவதில்லை. இங்கும் அதேபோல செய்ய வேண்டும். அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்" என்கிறார் ராக்கப்பன்.

அதேநேரம், இந்த அறிவிப்பால் ஏற்படக்கூடிய வேலை இழப்புகளையும் அரசு மனதில் கொள்ள வேண்டும் என்கிறார் ராக்கப்பன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 23,450 பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் தொழிற்சாலைகள்தான் ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியக்கூடிய பிளாஸ்டிக் பை, டம்ளர் ஆகியவற்றைத் தயாரிக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளிலும்கூட வேறு பொருட்களோடு சேர்ந்து இந்த பைகள், கப்புகள், ஸ்ட்ரா போன்ற பொருட்களைத் தயாரிக்கின்றன என்கிறார் ராக்கப்பன்.

பட மூலாதாரம், NATIONAL GEOGRAPHIC

இந்தத் தடையை முழுமையாக அமல்படுத்தினால், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் 10-15 பேர் வரை வேலையிழப்பார்கள். ஆக சுமார் 50,000 பேர் வரை வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என்கிறார் அவர்.

பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்றவை எந்த அளவுக்கு தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்த துல்லியமான கணக்குகள் ஏதும் கிடையாது. வெளிமாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு இந்தப் பொருட்கள் கொண்டுவரப்படுவதால் பயன்பாடு எவ்வளவு என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

"பொதுவாக இந்தியாவில் ஒரு தனி நபர் வருடத்திற்கு 12.5 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார். அமெரிக்காவில் தனிநபர் நுகர்வு 51 கிலோ" என்கிறார் ராக்கப்பன்.

காணொளிக் குறிப்பு,

பிளாஸ்டிக் கழிவுகளாகும் உலகப் பெருங்கடல்கள்!

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. 2002ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் (விற்பனை, சேமித்துவைத்தல், கொண்டுசெல்வதற்கு தடை) மசோதா ஒன்றை கொண்டுவந்தார். அப்போதும் இதேபோல ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டது. மீறுவோருக்கு 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

அப்போது அரசின் இந்த அறிவிப்பால், பெரும் வேலையிழப்பு ஏற்படுமென அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நான்கு லட்சம் பேருக்கு மேல் வேலையிழப்பார்கள் என தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டது.

இதற்குப் பிறகு இந்த மசோதா, சட்டமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு இந்த மசோதா 2003 ஜனவரியில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இப்போது மீண்டும் தமிழக முதலமைச்சர் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் ஒருவித குழப்பமே காணப்படுகிறது. இதற்கென புதிதாக மசோதா ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே உள்ள சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

"நான் இந்தத் தொழிலில் பல வருடங்களாக ஈடுபட்டிருக்கிறேன். பத்து - பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இந்தத் தடையை அறிமுகப்படுத்தியபோது இங்கிருப்பவர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். ஆனால், வெளிமாநிலங்களில் அவை உற்பத்தி செய்யப்பட்டு, இங்கே கொண்டுவந்து விற்கப்பட்டன" என்று நினைவுகூர்கிறார் சென்னை ஆவுடையப்பன் தெருவில், இம்மாதிரி ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் கௌதம்.

"சில நாட்கள் ரகசியமாக விற்கப்பட்ட இந்த பிளாஸ்டிக் பைகள், வெகுவாக விற்பனையாகவும் மறுபடியும் நாங்களும் வாங்கிவைத்து விற்க ஆரம்பித்தோம். இம்மாதிரி பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமானால், இந்தியா முழுவதும் தடை வந்தால்தான் உண்டு" என்கிறார் கௌதம்.

சென்னையில் நாராயண முதலி தெரு, ஆவுடையப்பன் தெரு, ஆண்டர்சன் தெரு ஆகிய இடங்களில் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆனால், இங்கிருப்பவர்களைப் பொருத்தவரை, இந்த அறிவிப்பு குறித்து பெரிதாக எந்த கருத்தும் இல்லை. "தடை வரும்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு விற்பனையில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்கிறார் ஆண்டர்சன் தெருவில் உள்ள ஒரு கடைக்காரர்.

இந்த தடையை மாநில அரசு எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதை வைத்தே, இதன் வெற்றியிருக்கிறது. "தமிழ்நாட்டில், கடைகளில் பொருட்கள் வாங்கினால் பிளாஸ்டிக் பைகளை இலவசமாக கொடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், ரிலையன்ஸ் போன்ற பெரிய சூப்பர் மார்க்கெட்களைத் தவிர, வேறு எங்கும் இந்தக் கட்டுப்பாடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை" என்கிறார் ராக்கப்பன்.

பட மூலாதாரம், Biome plastics

இம்மாதிரி தூக்கியெறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி என்றாலே ஒரு வித வெறுப்பும் ஒவ்வாமையும் நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"அரசு இதனை முறையாக அணுக வேண்டும். முதலில், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் கட்டிக்கொடுக்க தடை விதிக்க வேண்டும். தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்" என்கிறார் என்கிறார் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஏ.ஜி.எஸ். நீலகண்டன்.

"பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட எல்லா பொருட்களையும் மறுசுழற்சி செய்ய முடியும். ஆகவே, தீவிரமான மறுசுழற்சி வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்" என்கிறார் நீலகண்டன்.

தமிழ்நாடு அரசு உண்மையிலேயே சூழல் பாதுகாப்பை முன்வைத்து இந்தத் தடையை மிகச் சிறப்பாக அமல்படுத்த விரும்பினால் இரு யோசனைகள் இருப்பதாகக் கூறி அவற்றை முன்வைக்கிறார் அவர். முதலாவதாக, இம்மாதிரி தூக்கியெறியப்படக்கூடிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், உற்பத்தியை நிறுத்த வேண்டும். தொடர் கண்காணிப்பின் மூலமாக இதைச் செய்ய முடியும். அதேபோல குப்பை மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தால் மாநில அரசில் குப்பை மேலாண்மை என்ற பெயரில் இதற்கென தனியாக ஒரு துறையை உருவாக்கி, தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்கை பிரித்து, மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்தத் தடையை தமிழ்நாடு அரசு தீவிரமாக அமல்படுத்துமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இவற்றை ஒழித்தால், பொதுமக்கள் உடனடியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒருபுறமும் இதற்குப் பின்னால் உள்ள வேலையிழப்பு, பொருளாதார சிக்கல்கள் மறுபுறமும் அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறும்.

"உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள பார்களில், இந்தத் தூக்கியெறியக்கூடிய தண்ணீர் டம்ளர்கள் 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. தண்ணீர் பாக்கெட்கள் 3-4 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஆனால், இவை ஒவ்வொன்றின் அடக்கவிலையும் 50 காசுகள்தான்.

இதிலிருந்து உருவாகும் அபரிமிதமான பணம் அதிகாரத்தின் பல மட்டங்களுக்கு சென்று சேர்கிறது. இந்த இரண்டும் தடைசெய்யப்படுமானால், என்ன நடக்குமென யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்தத் தடையை அவ்வளவு சுலமாக நடைமுறைப்படுத்த முடியாது" என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு சமூக ஆர்வலர்.

காணொளிக் குறிப்பு,

பிளாஸ்டிக் பிரச்சனைக்கு ஓர் வெற்றிகரமான தீர்வு

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தத் தடையை வெகுவாக ஆதரிக்கிறார்கள். "இம்மாதிரி பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையை தடைசெய்வது, பயன்பாட்டை தடைசெய்வது ஆகியவை முதல்கட்டத்தில் அவ்வளவு சுலபமல்ல. உற்பத்தியை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். அதுதான் தீர்வு. அரசு மிகுந்த உறுதியுடன் இந்தத் தடையை அமல்படுத்த வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

"மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனில் 40 சதவீதத்தை கடல்தான் உற்பத்தி செய்கிறது. ஆனால், தற்போது கடலில் 5.2 ட்ரில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் மிதக்கிறது. நிலம், நதி ஆகிய எல்லாமே பிளாஸ்டிக்கால் மாசுபட்டிருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம். அரசு இந்தத் தடையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்" என்கிறார் சுந்தர்ராஜன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பிற்குப் பிறகு, இந்தத் தடையை தமிழக அரசு எப்படி அமல்படுத்தப் போகிறது என்பது குறித்து இதுவரை வேறு அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. ஆகவே உற்பத்தியாளர்களிடமும் விற்பனையாளர்களிடமும் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :