நாளிதழ்களில் இன்று: சிறையில் சந்தித்து கண்ணீர் விட்டு அழுத நளினி-முருகன்

  • 17 ஜூன் 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததைத் தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோர் நேரில் சந்தித்ததாகவும், அப்போது இருவரும் கண்ணீர் விட்டு அழுததாகவும் சிறைக்காவலர்கள் தெரிவித்ததாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிராகரித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார், தன்னையும் தன் மகனையும் கருணைக்கொலை செய்வதற்கு அரசு உத்தரவிட வேண்டுமென்று கூறியிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்)

படத்தின் காப்புரிமை Getty Images

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இருந்து வாபஸ் பெற்று தேர்தலை சந்திக்கப் போவதாக எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் அறிவித்ததில் எந்த தவறும் இல்லையென்று டிடிவி தினகரன் கருத்துத் தெரிவித்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்குத் தொடர்ந்துள்ள மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகரின் முடிவை சட்டரீதியாக சந்திக்கவுள்ளதாக தெரிவித்தாலும், தங்கதமிழ்செல்வனின் இந்த முடிவு அரசியல் ரீதியாக சரியாகத்தான் இருக்கிறது என்றும் வழக்கில் இருந்து வாபஸ் பெற்று ஆண்டிபட்டி தொகுதியில் தங்கதமிழ்செல்வன் குக்கர் சின்னத்திலே போட்டியிடப் போவதாகவும் தினகரன் கூறியதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

டெல்லியின் ஆளுநர் அனில் பைஜால் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடுவதை நிறுத்தக்கோரி, கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அம்மாநில முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதலமைச்சர்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப்பிரதேச முதல் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் குமாரசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் "அரசியல் செய்யாமல், டெல்லியில் நிலவும் இந்த பிரச்சனையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று கூறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து

படத்தின் காப்புரிமை EPA

ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு & காஷ்மீரில் செயல்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்த மத்திய அரசின் முடிவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரம்ஜான் மாதத்தின்போது காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டதாகவும், அதன் காரணமாக போராளிகளின் இறுதிச் சடங்குகளே நடைபெறவில்லை என்றும் அம்மாநில டிஜிபி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :