ஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த கந்தக அமிலத்தால் பாதிப்பு இல்லை: ஆட்சியர் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலை படத்தின் காப்புரிமை VEDANTA

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கழிவால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கழிவு கசிவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை பாதிப்பதாகக் கூறி கடந்த மே 22ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையில் இருந்து ரசாயனக் கழிவு வெளியேறுவதாக ஆலை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் குழு ஒன்று ஞாயிறுக்கிழமை ஆய்வு நடத்திவருவதாகத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தற்போது ஏற்பட்ட கசிவால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கொள்கலனில் இருந்து அமிலம் கசிந்தது என்று கூறினார். ஆனால், அதன் அளவு இன்னும் தெளிவாக மதிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

''அமிலம் கசிவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கசிவால் அச்சப்படக்கூடிய அளவில் பாதிப்பு இல்லை. எங்களது குழு ஆய்வு நடத்திவருகிறது. நாளையும் ஆய்வு நடைபெறும். நிலைமை கட்டுக்குள் உள்ளது. எல்லா விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதிபடுத்தி வருகிறோம்,'' என்று அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, ''தற்போது உள்ள நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளோம். அச்சப்படும் சூழல் எதுவும் இல்லை. கசிவுக்குக் காரணமான கொள்கலனை வெளியேற்றுவது குறித்து ஆலோசித்துவருகிறோம்,'' என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் வசித்து வரும் சரோஜாவிடம் பேசியபோது, ஆய்வு முடிந்தவுடன் பொதுமக்களிடம் தகவலை மாவட்ட நிர்வாகம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

''பல அதிகாரிகள் வருகிறார்கள். ஆலையில் என்ன நடந்தது என்பதை விளக்கினால் எங்களுக்கு பயம் இருக்காது. அச்ச உணர்வில்தான் தற்போதுவரை இருக்கிறோம்,'' என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்