சேலம்: 'துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை' - ஏரியில் இறங்கி மக்கள் போராட்டம்

  • 19 ஜூன் 2018

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீர் கலந்து ஏரியில் பத்து நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ளது கொட்டணத்தான் ஏரி. பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்காரப்பட்டி பகுதியிலுள்ள கொட்டநத்தான் ஏரி சுமார் 390 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். கொண்டாலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் முக்கிய ஏரியாக இந்த ஏரி உள்ளது.

ஏரியில் மழை காலங்களில் அதிகளவு தண்ணீர் வருவது வழக்கம் இதன் அடிப்படையில் சேலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

இதைப் பயன்படுத்திக் கொண்ட சாயக்கழிவுகளின் உரிமையாளர்கள் சாயக் கழிவுகளை ஆற்றில் கலப்பதோடு சிலர் செப்டிக் டேங் கழிவுகளை நேரடியாக ஏரியில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனால் ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகி விட்டது. .இதனால் தற்போது ஏரி மாசு ஏற்பட்டு மாசடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டு ஏரியில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஏரியில் இறங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றபடி தங்களை பாதுகாக்க வேண்டும் தூய்மையான குடிநீருக்கு வழிவகை செய்ய வேண்டும் சாயக்கழிவுகள் கலப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏரியை தூய்மைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் விரைவில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரப்பரப்பாக காணப்படுகிறது.

ஏரியை ஒட்டியுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேறு வழியின்றி தவிக்கின்றனர். எனவே, அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த ஏரியில் மீன்கள் கொத்துகொத்தாக இறந்து மிதந்ததும், இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்த முறையற்ற வகையில் இயங்கின சில சாயப்பட்டறைகள் மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளால் இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சேலம் கொட்டநத்தான் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேலம் கொட்டநத்தான் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள் (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :