மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட 3 தலித் சிறுவர்களின் தற்போதைய நிலைமை என்ன?

  • பிரவின் தக்ரே
  • பிபிசி
மகாராஷ்டிரா

பட மூலாதாரம், PRAVIN THAKARE / BBC

'' எனது மகனை தாக்கியவர்கள் தற்போது சிறையில் உள்ளனர். ஆனால், இன்னும் நாங்கள் பயத்தில் உள்ளோம். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். எனது மகனுக்கு நீதி மட்டும் கிடைத்தால் போதும்'' என்கிறார் சுரேகாபாய்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தின் வாக்டி பகுதியில், மூன்று தலித் சிறுவர்கள் அரை நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் நடந்து வாரங்கள் ஆனபோதும் அச்சிறுவர்களின் குடும்பம் அச்சத்தில் உள்ளது.

தாக்கக்கப்பட்ட ஒரு சிறுவரின் தாயான சுரேகாபாய்,'' அன்று நான் வீட்டில் இல்லை. என் மகன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, மறுநாள் மொபைலில் வீடியோ பார்த்தபிறகே அறிந்துக்கொண்டேன்'' என்கிறார்.

''நான் என் மகனை அடித்ததே இல்லை. என் மகன் இப்படி அடிபடுவதை பார்த்து, புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றேன். ஒரு நாள் முழுவதும் என்னை போலீஸார் காக்க வைத்தனர். பிறகு மீண்டும் மறுநாள் சென்றபோது, போலீஸார் எனது புகாரை ஏற்றுக்கொண்டனர்'' எனவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், PRAVIN THAKARE / BBC

தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட பிறகு அங்கு கல நிலவரத்தை அறிய வாக்டி பகுதிக்கு சென்றோம்.

மற்றவர்களை விட்டுவிட்டனர்.. எங்களை பிடித்துக்கொண்டனர்.

என்ன நடந்தது என சுரேகாபாயின் 16 வயது மகனிடம் கேட்டோம்.'' அன்று ஞாயிற்றுகிழமை. மதியம் 2-3 மணி இருக்கும். கிணற்றில் குளித்துவிட்டு, கிணற்றின் அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த நிலத்தின் பணியாளர் சோனு லோஹர் மற்றும் சிலர் எங்களை நோக்கி கத்திக்கொண்டு வந்தனர். அவர்களை பார்த்து பயந்த நாங்கள் மூவரும் தப்பித்து ஓடினோம். ஆனால், எங்களை துரத்தி வந்து பிடித்தனர். எங்களுடன் இருந்த வேறு நில சிறுவர்களை போக சொல்லிவிட்டு, எங்களை மட்டும் பிடித்துக்கொண்டனர்'' என்கிறார்.

''எங்களது ஆடைகளை கழற்றி அடித்தனர். நாங்கள் அருகில் இருந்த மரத்தின் இலையை எங்கள் உடம்பில் சுற்றிக்கொண்டோம். குச்சியாலும், பெல்டாலும் லோஹர் எங்களை அடித்ததை நிலத்தின் உரிமையாளர் வீடியோ எடுத்தார்.'' என்கிறார் அவர்.

பட மூலாதாரம், PRAVIN THAKARE / BBC

மேலும் தொடர்ந்த அவர்,'' எங்களை மன்னித்து விடுமாறு கெஞ்சினோம். ஆனால், அவர்கள் எங்களை விடவில்லை. கடைசியாக எங்களது ஆடைகளை கொடுத்து வீட்டுக்கு செல்ல விட்டனர். எங்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்தபோது, நாங்கள் மோட்டாரை திருடிவிட்டதாக கூறி புகார் அளிக்கப்போவதாக லோஹரும் நிலத்தின் உரிமையாளரும் மிரட்டினர்'' என்கிறார்.

வாக்டி கிராமத்தில் உள்ள நதியின் மற்றொரு புறத்தில், தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் வீடுகள் மூங்கிலாலும், மண்ணாலும் கட்டப்பட்டுள்ளது. சாலைகள் குறுகியதாக உள்ளன.

நம்மிடம் பேசிய சுரேகாபாயின் மகன், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர். இவரது பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இவரது வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தனர்.

''போலீஸிடம் புகார் அளிக்க முடிவு செய்தபோது எங்களுக்கு மிரட்டல் வந்தது. ஆனால், இதனை விடக்கூடாது என நாங்கள் உறுதியாக இருந்தோம்'' என்கிறார் சுரேகாபாய்.

''எனது மகன் சித்திரவதை செய்யப்பட்டுள்ளான். இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக புகார் அளித்தோம்.'' என்கிறார்.

இந்த கிராமத்தில் வாழ வேண்டும் என்றால், புகாரை திரும்ப பெற வேண்டும் என்பது போன்ற மிரட்டல்கள் சுரேகாபாய்க்கு வந்துக்கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், PRAVIN THAKARE / BBC

தாக்கப்பட்ட மூன்று சிறுவர்களில், இளைய சிறுவனின் தந்தை புகார் அளிக்க முன்வரவில்லை. இவர் சிறுவர்களை தாக்கிய நிலத்தின் உரிமையாளரிடம் முன்பு பணியாற்றியவர்.

''நிலத்தின் உரிமையாளரை எங்களுக்கு முன்பே தெரியும். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க எங்களுக்கு அவர் அனுமதி கொடுத்துள்ளார். எனது மகன், அந்த கிணற்றுக்கு சென்றிருக்ககூடாது. நான் யாருக்கும் எதிராக புகார் கொடுக்கவில்லை'' என்கிறார் அந்த தந்தை.

''பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை கைது செய்துள்ளோம்'' என போலீஸார் கூறுகிறனர்.

பட மூலாதாரம், PRAVIN THAKARE / BBC

படக்குறிப்பு,

சிறுவர்கள் தாக்கப்பட்ட இடம்

இந்த சம்பவத்தில் நிலத்தின் உரிமையாளரான ஈஸ்வர் ஜோஷி மற்றும் அவரது உதவியாளர் சோனு லோஹர் ஆகியோர் முதல் குற்றவாளிவாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

''மாராத்தி படமான சாய்ராட் படத்தில் காட்டப்படுவதுபோல, இந்த சிறுவர்கள் மேலிருந்து கிணற்றில் குதித்து விளையாடுகின்றனர். இது குறித்து அச்சிறுவர்களின் பெற்றோரிடம் புகார் அளிக்க நாங்கள் முயற்சித்தபோது, அவர்களை பார்க்க முடியவில்லை. இச்சிறுவர்களை கண்டிக்குமாறு, சில சிறுவர்களின் பெற்றோர் எங்களிடம் கூறினர். அன்றைய தினம், ஈஸ்வர் ஜோஷியும், சோனு லோஹரும் கிணற்றுக்கு சென்றபோது, அச்சிறுவர்கள் உடைகளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்'' என்கிறார் ஈஸ்வர் ஜோஷியின் வழக்கறிஞர்.

சிறுவர்கள் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றும், அவர்கள் அடிக்கப்பட்டதை நியாயப்படுத்த முடியாது என்றும் வழக்கறிஞர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :