எட்டு வழிச்சாலை: பொதுமக்களுக்கு ஆதரவாகப் பேசிய மாணவி வளர்மதி கைது

  • 19 ஜூன் 2018

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை நிலம் அளவீடு பணியின்போது பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயற்கை பாதுகாப்பு குழுவின் தலைவரும், பல்கலைக்கழக மாணவியுமான வளர்மதி கைதுசெய்யப்பட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்யப்பட்ட வளர்மதி

சேலம் முதல் சென்னை வரை 277 கிலோமீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள எட்டு வழிப் பசுமை சாலைக்காக நில அளவை செய்யும் பணி நேற்று, திங்கள்கிழமை, தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் அடிமலைப் புதூர் பகுதியில் அளவீடு செய்து முடித்த வருவாய் துறையினர் இன்றைய தினம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நில அளவை செய்ய வந்தனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளவை செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இயற்கை பாதுகாப்பு குழுவின் நிர்வாகியும், பெரியார் பல்கலைக்கழக மாணவியுமான வளர்மதி பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினார்.

அப்போது பொதுமக்களை போராட்டம் நடத்தத் தூண்டுவது போல் பேசியதாக கூறி அவரை காவல் துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களிடம் வளர்மதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து வளர்மதியை குண்டுகட்டாக வேனில் ஏற்றி, காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் வருவாய்துறையினர் நில அளவை செய்யும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டனர்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை எதிர்த்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தது தொடர்பாக சேலம் காவல்துறையினரால், கடந்த ஆண்டு வளர்மதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வளர்மதி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :