நாளிதழ்களில் இன்று: இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்வு

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (தமிழ்)

பட மூலாதாரம், Getty Images

2017-ம் ஆண்டில் இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கேப்ஜெமினி ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் செல்வத்தின் பகிர்வு சமூக அளவில் சமமாக இல்லை. ஒரு சிலரிடத்தில் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டில் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்து 2.63 லட்சமாக உள்ளது. உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் அமெரிக்க, ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் உள்ளனர். 2017-ம் ஆண்டின் செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியா 11 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி

பட மூலாதாரம், Getty Images

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று (செவ்வாய்கிழமை) 111 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் இயங்காமல் இருந்துவரும்

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த மே 28ஆம் தேதி தமிழக அரசு சீல் வைத்தது. இந்நிலையில், ஆலையில் சேமிக்கப்பட்டுள்ள கந்தக அமிலம் சேமிப்புக் கிடங்கிலிருந்து கசியத் தொடங்கியதை அடுத்து மொத்தமுள்ள 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலத்தை வெளியேற்றுவதற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்)

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்காக மாநில அரசு அளித்த நான்கு இடங்களில் ஒன்றை தேர்வு செய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு மதுரையை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுடன் இந்த குழு உறுப்பினர்கள் திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதை தமிழக அரசுக்கு முறைப்படி தெரிவிப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் வெளிக்காட்டும் மேலும் சில பொருட்கள் கிடைத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி பதிப்பித்துள்ளளது.

தமிழ் பிராமி எழுத்துக்களை கொண்ட மண் ஓடுகள் மற்றும் 3-4 சென்டிமீட்டர் நீளமுடைய தங்க ஊசியும் அகழாய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் மூன்று பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 8,300 தொல்பொருள்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :