சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை: ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கே விவசாயிகள் கைது

சென்னை-சேலம் எட்டுவழிப்பாதைத் திட்டம் குறித்தும், அதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் விவாதிப்பதற்காக திருவண்ணாமலையில் கூட்டப்பட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதலில் அனுமதி மறுத்த போலீசார், பிறகு அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்களைக் கைது செய்தனர்.

போராட்டம்
படக்குறிப்பு,

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை சந்திக்கச் சென்ற விவசாயிகள் பிரதிநிதிகளைத் தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.சண்முகம், அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்தக் கூட்டத்துக்கு திட்டமிட்டது. போலீசார் கெடுபிடியால் திருமண மண்டபங்கள் இந்தக் கூட்டத்துக்கு இடம் தர மறுத்ததாகவும், பிறகு திருவண்ணாமலை அருகே உள்ள வட ஆண்டாப்பட்டில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்.

கூட்டம் ரைஸ் மில் வளாகத்துக்குள் உள்ளரங்கக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டதால் போலீசிடம் அனுமதி எதையும் கோரவில்லை என்று கூறிய அவர், அந்த ரைஸ்மில்லுக்குள் பந்தல் அமைத்தவர்களை போலீசார் தடுத்ததாகவும் கூறுகிறார். உள்ளரங்கக் கூட்டம் என்பதால் போலீசாரிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை என்று வாதிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், எஸ்.பலராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து கூட்டம், வேலூர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு வரத் தொடங்கிய விவசாயிகள் பலர் அலுவலகம் இருக்கும் தெரு முனையிலேயே கைது செய்யப்பட்டனர்.

படக்குறிப்பு,

முற்றுகைப் போராட்டம்

இதையடுத்து ஏற்கெனவே அலுவலகத்தில் இருந்த தலைவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபின், கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை கைது செய்வது நின்றது. பிறகு நடந்த கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளரும், மராட்டிய விவசாயிகள் நெடும்பயணத்தை ஒருங்கிணைத்தவருமான விஜு கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு ஆகியோர் பங்கேற்றனர்.

எட்டுவழி சாலைத் திட்டத்தை கண்டித்து ஜூன் 26-ம் தேதி விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராடுவது என்றும், ஜூலை 6ம் தேதி அந்த சாலை அமைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை எரித்துப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

படக்குறிப்பு,

முற்றுகைப் போராட்டம்

அத்துடன், இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தபோது, பங்கேற்க வந்தபோது கைது செய்யப்பட்ட விவசாயிகள், விவசாயிகள் தலைவர்களை கைது செய்தது ஏன் என்று கேட்பதற்காக அனைவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து கூட்டம் முடிந்தவுடன் அனைவரும், நேராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு செல்ல முற்பட்டனர். வேலூர் சாலையில் இருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலை முனையிலேயே அவர்கள் போலீசாரால் தடுக்கப்பட்டனர். இதையடுத்து வந்தவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

பிறகு சில அதிகாரிகள் தலையிட்டு முக்கியப் பிரதிநிதிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னியை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களது சந்திப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசின் கருத்தை அறிய மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் ஆர்.பொன்னியைத் தொடர்புகொள்ள முயன்றபோது உடனடியாக அவரோடு பேச முடியவில்லை.

அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா?

இதற்கிடையே இந்தக் கைதுகளைக் கண்டித்து அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியத் தலைமையகம் தில்லியில் இருந்து தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியா என்று தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டது. "தூத்துக்குடியில் 13 போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற பின்பு, சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கிவருகிறது தமிழக அரசு. கூட்டத்துக்கு முன்னதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை கைது செய்த போலீசார், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக கிராமங்களில் போலீசாரைக் குவித்தது.

7500 ஹெக்டேர் விளைநிலம், 8 மலைகள், நூற்றுக்கணக்கான கிணறுகள், குளங்கள் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படவுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படவுள்ளன. பல பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வழிபாட்டு இடங்கள், குடியிருப்புகள் இத்திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகவுள்ளன," என்று கூறிய அந்த அறிக்கை, ஒடுக்குமுறைகளால் போராட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் வீச்சோடு போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :